Wednesday, September 21, 2011

ஷீலா தீக்ஷித்தின் 47 வயது பையனின் பறி போன 10 லட்சம் ரூபாய் …..

ஷீலா தீக்ஷித்தின் 47 வயது பையனின்பறி போன 10 லட்சம் ரூபாய் …..

முதலில் ஒரு சிறிய கதை / செய்தி.
நேற்று காலை டெல்லியிலிருந்து போபாலுக்கு
வந்த, போபால் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின்,
ஏசி பெட்டியில் டெல்லி
முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் 47 வயது மகனும்,
கிழக்கு டெல்லி தொகுதி பாராளுமன்ற
உறுப்பினரும், ராகுல் காந்தியின் நெருங்கிய
நண்பர் வட்டாரத்தைச் சேர்ந்தவருமான
சன்தீப் தீக்ஷித் பயணம் செய்தார்.

அனைவரும் இறங்கிச்சென்ற பிறகு வண்டியை
சுத்தம் செய்ய வந்த தொழிலாளி, சன்தீப்
பயணம் செய்த பெர்த்தின்  கீழே ஒரு பேக்
இருந்ததைக் கண்டு அதை எடுத்துக்கொண்டு போய்
ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ரெயில்வே போலீஸ் பையை சோதனை போட்ட
போது அதில் 1000 ரூபாய் நோட்டுக்களாக
பத்து லட்சம் (1000000 ரூபாய் !)இருந்ததை
கண்டு பிரமித்திருக்கின்றனர்.

பின்னர் அந்த பெர்த்தில் பயணம் செய்தவர்
சன்தீப் தீக்ஷித் என்பதை கண்டறிந்து, அவரிடம்
விசாரித்திருக்கின்றனர். முதலில் உதறல்
எடுத்த சன்தீப்  தனக்கும் அந்த பேகுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்று கூறி மேற்கொண்டு
பேசுவதை தவிர்த்திருக்கிறார்.

- இது இன்று முதலில் வந்த செய்தி.
அப்போது தான் நான் நினைத்தேன் -
அம்மா கஷ்டப்பட்டு காமன்வெல்த் போட்டிகளில்
சம்பாதித்து பாக்கெட் மணியாக கொடுத்த
பணத்தை, பிள்ளை இப்படி
அசட்டுத்தனமாக பறி கொடுத்து விட்டதே என்று !

- பின்னர் மாலையில் வந்த செய்தி
வேறு மாதிரி இருந்தது.
10 லட்சத்தை இப்படி
சும்மா பறி கொடுக்க யாருக்குத் தான்
மனசு வரும் ?
அம்மா திட்டினார் போலிருக்கிறது.
முடிந்த கதை, தொடர்கதை ஆனது.

இன்று (வியாழன்) மீண்டும் ரெயில்வே
போலீசைத் தொடர்பு கொண்ட சன்தீப் தீக்ஷித்
அந்த பணப் பை தன் நண்பர் ஒருவருடையது
என்றும் அவர் போபாலில் வீடு வாங்குவதற்காக
அந்த பணத்தை கொண்டு வந்தார் என்றும்
அது பத்திரமாக இருப்பதற்காக தன் பெர்த்தின்
கீழே வைத்திருந்தார் என்றும்  கூறி இருக்கிறார்.

அதன் பின்னர், ஜயேஷ் மயூர் என்கிற ஒரு நபர்
போலீசைத் தொடர்பு கொண்டு, தான் தான்  
சன்தீப் கூறிய நபர் என்றும் அந்த பணம்
தன்னுடையது தான் என்றும் ரெயிலை விட்டு
இறங்கிப் போனபோது தான் அதை மறந்து, விட்டு
விட்டு போய் விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

இப்போதைக்கு இவ்வளவு தான் செய்தி
வெளியாகி இருக்கிறது.இன்னும் என்னென்ன
திருப்பங்கள் வருமோ தெரியாது.

(முதலில் ஒரு விஷயம்.  அண்மையில் அன்னா
ஹஜாரேயின் உண்ணாவிரதத்தின் போது
பாராளுமன்றத்தில், ராகுல் காந்திக்கு ஆதரவாக
வீர உரை ஆற்றிய  நண்பர்களில் இவரும் ஒருவர் )

நமக்கு சில சந்தேகங்கள் -
சில ஆண்டுகளுக்கு முன், நம் ஊர்க்காரர்
மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது சில
விதிகளை அறிமுகம் செய்தார். அதன்படி 25,000
ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் எதாக
இருந்தாலும் அது காசோலை அல்லது டிமாண்ட்
டிராப்ட் மூலமே செய்யப்பட வேண்டும்.
மேலும் பரிவர்த்தனையில் கொடுப்பவர், வாங்குபவர்
இருவரது பான் எண்ணும் தரப்பட வேண்டும்.
என்றெல்லாம் விதிகள் கொண்டு வரப்பட்டன.

இந்த லட்சணத்தில் -
வீடு வாங்க ஒரு  நபர் பத்து லட்ச ரூபாயை
எப்படி பணமாக கொண்டு வந்தார் ?

முதலில் தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும்
இல்லை என்று கூறிய சன்தீப் தீக்ஷித் பின்னர்
இடையில் ஒரு நண்பரைப் புகுத்தி எப்படி
கதையை மாற்றினார் ?

(டிவியில் சன்தீப் கூறுவதைப் பார்த்தேன்.
அவர் உண்மை பேசவில்லை என்பதை அவர்
பேசும் விதம் மிகத் தெளிவாக காட்டியது !)

பையில் இருந்தவை அனைத்தும் 1000 ரூபாய்
நோட்டுக்கள். அவை எந்த வங்கியிலிருந்து,
யாரால், எப்போது, எடுக்கப்பட்டவை என்பதை
சுலபமாக கண்டு பிடித்து விடலாம். போலீஸ்
அதைச்செய்கிறதா ?

அவரது நண்பரிடம் இந்த பணத்தை அவர்
எந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தார்,
எதற்காக இவ்வளவு பணத்தை ரொக்கமாக
எடுத்துச் செல்கிறார்,
எங்கே வீடு வாங்க போகிறார், அதற்கான
பத்திரங்கள், ஆதாரங்கள்  போன்றவற்றை
போலீசில் கேட்டார்களா ?  

இதை எல்லாம்  நினைத்து
திருவிளையாடல் “தருமி” நாகேஷைப் போல்
அனாவசியமாக நமக்கு நாமே கேள்விகளைக்
கேட்டுக்கொள்கிறோம். இதனால் ஆகப்போவது
ஒன்றுமில்லை. விஷயம் கமுக்கமாக அமுக்கப்படும்.
பணம் இறுதியில், பத்திரமாக போக வேண்டிய
இடத்திற்கு போய்ச்சேர்ந்து விடும் .இதிலெல்லாம்  நாம் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை.   ஒன்றுமே பண்ண முடியாது என்று தான் நண்பர்கள் கூறுகிறார்கள்.

இருந்தாலும், தருமி போல் தனிமையில்
புலம்பாமல், 4 பேருக்கு கேட்கிற மாதிரி
கத்துவோமே – 4 பேருக்கு இதை எல்லாம்
பற்றி தெரியவாவது செய்யட்டுமே  என்று தான்
எழுதுகிறேன்.



காமன்வெல்த் கேம்ஸில் -
திரும்பவும் பயன்படுத்த முடியாத (disposable)
கண்ணாடி  டம்ளர் ஒவ்வொன்றும் ரூ.37/-
குப்பைகளைப் போடும் பைகள் ஒவ்வொன்றும்
ரூ.3000/-
ஒவ்வொரு தண்ணீர் ஜாடியும் ரூ.2000/-
ஒவ்வொரு பிரஷ்ஷும் ரூ.1800/-
ஒவ்வொரு பிளாஸ்டிக் நாற்காலியும் ரூ10,000/-

(இன்னும் இது போல் எத்தனையோ
பொருட்கள் – சட்டென்று நினைவிற்கு
வர மாட்டேனென்கிறது …)

என்கிற அளவில் வாங்கி/விற்று, கஷ்டப்பட்டு
சம்பாதிக்கப்பட்ட பணம், இந்த 47 வயது
சிறுவனால் அஜாக்கிரதையாக
தொலைக்கப்படுவதை சகியாத
அந்த அன்னையின்
மனது எவ்வளவு வேதனைப்படும் ?

- அதை எண்ணினால் தான் மிகவும்
கஷ்டமாக இருக்கிறது.

(தீஷித் பரம்பரை நாட்டுக்காக மிகவும்
பாடுபட்ட பரம்பரை -

பெரியவர் உமா சங்கர் தீஷித் -
முதலில் நேருவுக்கும், பிறகு இந்திரா காந்திக்கும்
மந்திரியாகவும் பின்னர் கவர்னராகவும் பல
ஆண்டுகள் உழைத்தார் !

பின்னர் அவர் மருமகள் – ஷீலா தீக்ஷித் -
முதலில் மத்திய அமைச்சரவையிலும்,
பின்னர் டெல்லி முதலமைச்சராக கடந்த
13 ஆண்டுகளாக  உழைக்கிறார், உழைக்கிறார்-
அப்படி உழைக்கிறார்.
இப்போது பிள்ளை – இரண்டு தடவையாக
பாராளுமன்ற உறுப்பினராக, ராகுல் காந்திக்காக
உழைக்கிறார்.

-இப்பேற்பட்ட குடும்பம் வருத்தப்பட விடலாமா ?)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...