Monday, September 12, 2011

நம் இந்தியா ஜனநாயக நாடா?



"இந்தியா ஒரு ஜனநாயக நாடு!" இன்று வரை, அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் நாம கரணமும் இது தான். ஆனால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறதா என்பது கேள்விகுறிதான். 

இப்போது, பண நாயகத்தால், ஜனநாயகத்தை விலை பேசும் மாநிலங்களாக, ஒவ்வொன்றும் மாறி வருகிறது. இதற்கு, மத்திய அரசும் விதி விலக்கல்ல. தற்போது, 65வது சுதந்திர தின கொடியை பறக்கவிட, விண்ணில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. 

குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து தான், தேசியக் கொடியை பிரதமர் முதல், மாநில முதல்வர்கள் வரை, விண்ணில் பறக்க விட வேண்டிய அவல நிலை இந்தியாவில் நிலவுகிறது. பயங்கரவாதம் தலை தூக்கி நிற்கிறது. 

ஓட்டிற்காக சட்டங்களை வளைக்காமல், நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக சட்டங்களை இயற்ற வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் ஓட்டைகளை நன்கறிந்து தான், வெளிநாட்டு சதிகாரர்களின் சதிகள், அடிக்கடி இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

அப்பாவி இந்திய மக்கள், பலி கடா ஆகிக்கொண்டிருக்கின்றனர். லோக்பால் மசோதாவில், பிரதமரையும், நீதிபதிகளையும் ஏன் அனுமதிக்க கூடாது? பிரதமர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; மக்கள் பிரதிநிதி. நீதிபதி என்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

இந்த மசோதாவிலும் ஓட்டைகள் அதிகம். மும்பை குண்டு வெடிப்பில், 100க்கு மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒரே ஒரு குற்றவாளி, முதல் குற்றவாளியாக கருதப்பட்டு, தீர்ப்பும் எழுதப்பட்ட பின், அவனை தூக்கிலிட கால தாமதம் ஏன்?

இந்த கால தாமதத்தின் விளைவே, மீண்டும் மும்பையில் குண்டு வெடித்து, 20க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மத்திய அரசு தங்களை பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி சட்டங்களை மாற்றிக் கொண்டு, அப்பாவிகளின் உயிர்களை பறித்து விடக்கூடாது. 

அமைச்சர்களை பாதுகாக்க குண்டுதுளைக்காத கார், பாதுகாப்பு படை இருக்கின்றன. அப்பாவிகளை பாதுகாப்பது யார்? அடுத்த சுதந்திர தினத்திலாவது, தேசியக் கொடியை சுதந்திரமாக பறக்க விட, இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படட்டும்.

அப்போதுதான் இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...