Wednesday, September 21, 2011

2ஜி ஒதுக்கீட்டில் இழப்பில்லையா? உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அளித்த அறிக்கை தங்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு புலனாய்வை கண்காணித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட அமர்வு, இன்றைய விசாரணையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

“அந்த அறிக்கை குறித்து நாங்கள் மிகவும் வியப்படைகிறோம். அது சுதந்திரமாக இயங்கும் அதிகாரத்தோடு உருவாக்கப்பட்டது. அவர்கள் சமீபத்தில் அளித்த இந்த அறிக்கை மிகுந்த விவாதத்திற்குரியதாகியுள்ளது” என்று நீதிபதிகள் கூறினர்.

“இது மிகவும் கவலையளிக்கக் கூடியது. நாங்கள் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை குற்றஞ்சாற்றப்பட்ட எவரும் தங்களுக்கு சாதமாக எடுத்துக்கொள்ளலாம்” என்று மத்திய புலனாய்வுக் கழகத்தின் சார்பாக வாதிட்டுவரும் மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.

“இதில் உண்மை என்னவென்பதை நீதிமன்றம் தீர்மானிக்க விட்டிருக்க வேண்டும். யாரையும் பாதிக்கக் கூடிய அளவிற்கு நாங்கள் ஒரு கருத்தும் இதுவரை வெளியிடவில்லை. இப்பிரச்சனை மீதான எங்கள் கருத்தை நிச்சயம் தெரிவிப்போம். ஆயினும் இது எங்களுக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதேபோல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் நட்டம் தொடர்பான மதிப்பீட்டில் மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் குறிப்பிட்ட தொகைக்கும், மத்திய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ள தொகைக்கும் இடையில் உள்ள பெரும் வேறுபாட்டையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மத்திய அரசுக்கு ரூ.1,76,000 கோடி இழப்பு என்று தலைமை தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. ஆனால், ரூ.30,978 கோடி என்று ம.பு.க. அறிக்கை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...