Sunday, September 11, 2011

மகாத்மா காந்தி கூறியதையே ஜெயலலிதா செய்துள்ளார்: சீமான்

இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் மரண தண்டனை நீக்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம், மரண தண்டனைக்கு எதிராக தேசப் பிதா மகாத்மா காந்தி தெரிவித்த கருத்தின் அடிப்படையிலானதே என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறினார்.
இராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தனை, பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நேற்று மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய சீமான், இந்த மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களின் உயிரைக் காப்பாற்றும் சக்தி தமிழக முதல்வரின் கையில் மட்டுமே உள்ளது என்றும், அவர்களின் உயிரைக் காக்க தானே முன்வந்து சட்டப் பேரவையில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றியதற்காகவும் அவர் தமிழர்களின் நிரந்தர நன்றிக்கு உரியவராக இருக்கிறார் என்று கூறினார்.

மரண தண்டனையை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, இறைவன் அளித்த உயிரை பறிக்கும் உரிமை, அவனைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்று தேசப் பிதா மகாத்மா காந்தி தெரிவித்த கருத்தின் அடிப்படையில்தான், தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று பேரின் உயிரைக் காக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார் என்று கூறிய சீமான், மகாத்மா காந்தியைப் போற்றும் காங்கிரஸ் கட்சியினர் இத்தீர்மானத்தை வரவேற்க வேண்டும் என்று கூறினார்.

இராஜீவ் காந்தி கொலை மறக்க முடியுமா, மன்னிக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதை குறிப்பிட்டுப் பேசிய சீமான், இராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை தமிழர்களை கொன்று குவித்தததையும், தமிழ்ப் பெண்களை கற்பழித்ததையும் எந்தத் தமிழரும் மறக்கவில்லை என்றும், இந்தியப் படை அங்கே நிகழ்த்திய அட்டூழியங்களை தங்களாலும் சுவரொட்டி அடித்து ஒட்டி, காங்கிரஸார் கேட்பது போல, மறக்க முடியுமா, மன்னிக்க முடியுமா என்று கேள்வி எழுப்ப முடியும் என்று கூறினார்.

வேலூர் சிறையில் இருக்கும் மூன்று பேரையும் தூக்கிலிட முடிவானதும், தூக்குக் கொட்டடியில் அவர்களை தூக்கிலிடுவதை படம் பிடிக்க இரகசிய புகைப்படக் கருவிகள் பொறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய சீமான், ஒரு கொலைக்காக ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தப் பிறகும் கொலை வெறி அடங்கவில்லையா என்று வினவினார்.

தமிழருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழித்துக்கட்ட ஒவ்வொரு தமிழரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சீமான் கேட்டபோது, கூட்டத்தினர் அனைவரும் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், மூன்று பேரின் மரண தண்டனையை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மரண தண்டனையை நிரந்தரமாக ஒழிக்கக் கோரியும் இரண்டு தீர்மானங்கள் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியர்கள் தீரன், பால் நியூமென், கல்யாணசுந்தரம், மூத்த வழக்குரைஞர் சந்திரசேகர், ஊடகவியலார்கள் கலைக்கோட்டு உதயம், அய்யநாதன், மனித உரிமையாளர் கன குறிஞ்சி, கோட்டைக் குமார், ஜெயசீலன், திலீபன், இயக்குனர் செல்வபாரதி, ஐய்ந்துகோவிலான், மகேந்திரன் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பேசினர்.

எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
 
 
தீர்மானம் 1

மூவரின் உயிரைக் காக்கத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி


இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 11 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், மறுக்கப்பட்ட நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஒருசேர குரலெழிப்பியதை மதித்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கும் ஒரு தீர்மானத்தை தானே தமிழக சட்டப் பேரவையில் முன்மொழிந்து, அதனை ஒருமனதாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலாக தமிழினம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

“மரண தண்டனையானது அத்தண்டனை விதிக்கப்பட்டவரை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடுகிறது. எனவே அத்தண்டனையால் சில மணித்துளிகளே அந்த மனிதர் வேதனையை அனுபவிக்கிறார். ஆனால், இத்தண்டனையால் உண்மையில் கடும் பாதிப்பு அடைவது, தண்டிக்கப்பட்டவரின் குடும்பமே. அது ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கிறது” என்று குடியரசுத் தலைவர் தங்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து இந்த மூவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வாதிட்ட இந்த நாட்டின் தலை சிறந்த சட்ட மேதைகளில் ஒருவரான இராம் ஜேத்மலானி கூறினார்.

அப்படிப்பட்ட கொடுமையைத்தான் முருகன், சாந்தனை, பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் குடும்பத்தாரும் இந்த 20 ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். அதனால்தான் தங்களுடைய பிள்ளைகளைக் காப்பாற்றித் தாருங்கள் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கைகளை வைத்தார்கள். தன்னிடம் கோரிக்கை வைத்த அந்தக் குடும்பங்களின் நிலையை தாயுள்ளத்தோடு நினைத்துப் பார்த்ததால்தான், இந்த மூன்று பேருக்கும் கருணை காட்டுங்கள் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தைத் தாங்களே முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளீர்கள்.

தமிழக முதல்வராக 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூன்று வார காலத்தில், ஈழத்தில் தமிழர்களை இனப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள பெளத்த இனவாத அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினீர்கள். அதன் விளைவாக பன்னாட்டு அளவில் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தம் கடுமையானது. இப்போது, நீதியின்றி மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை குறைக்குமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளீர்கள். தமிழக முதல்வராக தாயுள்ளத்தோடு நீங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தமிழினத்தின் வரலாற்றில் தங்களுக்கு மிக உயர்ந்த இடத்தை நிரந்தரமாகப் பெற்றுதரும் என்று இந்த மாபெரும் மக்கள் திரள் வாழ்த்துகிறது.

தீர்மானம் 2

மரண தண்டனையை நிரந்தரமாக நீக்குங்கள

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வெளியான நாள் முதல், தமிழின அமைப்புகளும், இளைஞர்களும், மாணவர்களும், மனிதாபிமானிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனைக்கு எதிராக வீதிக்கு வந்த போராடத் தொடங்கினர். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நியாயமற்றது என்பதை விளக்கி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று நாம் தமிழர் கட்சி மக்களிடையே பரப்புரை செய்தது. இவையனைத்திற்கும் காரணம், இராஜீவ் கொலையில் இந்த மூன்று பேரின் தொடர்பு - அவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பார்த்தாலும் - மிகவும் குறைவானதே. ஆயினும் அவர்களுக்கு மிக அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது நீதியல்ல என்பதேயாகும்.
 
“எந்த ஒரு மனிதனும் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவதை முழுமையான மனசாட்சியுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் மட்டுமே உயிரை எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் அதனை அவன் மட்டுமே கொடுக்க வல்லவன்” என்று மகாத்மா காந்தி கூறினார்.

மரண தண்டனை என்பது பழமைவாத, பழிவாங்கு நோக்கம் கொண்ட கொலைவெறித்தனமேயன்றி, அது தண்டனையாகாது என்று இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டோரின் மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வின் தலைமை வகித்த நீதிபதி கே.டி.தாமஸ் சமீபத்தில் எழுதியுள்ளார். சட்டம் அறிந்த மனித நேயர்களின் கருத்தும் இதுவே.

அதுமட்டுமின்றி, மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனை விதிக்கபட்டால்தான் கொடும் குற்றங்கள் குறையும் என்ற கருத்து உண்மையல்ல என்பதும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாங்கள் நடத்திய ஆய்வின் விவரத்தை சர்வதேச பொது மன்னிப்புச் சபை (Amnesty International) இந்திய அரசுக்கும் அளித்துள்ளது.

எனவேதான், உலகின் 139 நாடுகள் மரண தண்டனை விதிப்பதில்லை என்கிற ஐ.நா.வின் சுய கட்டுப்பாடு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், இந்தியா இதில் இன்று வரை கையெழுத்திடவில்லை. அமெரிக்க அரசு இந்த பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், அந்நாட்டின் 15 மாகாணங்கள் மரண தண்டனையை ஏற்பதில்லை என்ற சுய கட்டுப்பாட்டை அறிவித்து கடைபிடித்து வருகின்றன. எனவே, குற்றம் செய்தவரை விட, அவர் சார்ந்த குடும்பத்தைக் கடுமையாக பாதிக்கும் என்கிற ஆழமான உண்மையை கருத்தில் கொண்டு மரண தண்டனை நிரந்தரமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது.
மனிதாபிமான கண்ணோட்டத்தோடும், தாயுள்ளத்தோடும் செயலாற்றிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், மரண தண்டனையை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமாய் இங்கே கூடியுள்ள மாபெரும் மக்கள் திரளின் முழுமையான ஆதரவுடன் நாம் தமிழர் கட்சி பரிந்துரை செய்கிறது.

தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அவர்களே, இந்த தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றினால் அதுவே இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் மனிதாபிமான ரீதியிலான முன்னொடி நடவடிக்கையாக இருக்கும் அமையும் என்பதையும், தமிழக சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கைதிகளும், அவர்களின் குடும்பங்களும், இதற்காக பல பத்தாண்டுகளாக போராடிவரும் பன்னாட்டு, உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் தங்களை வாழ்த்தும் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...