Monday, October 3, 2016

# ரிலையன்ஸ் காலில் சலங்கை #

ரிலையன்ஸ் முதன் முதலில் இந்தியாவில் சிடிஎம்ஏ என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தபோது எல்ஜி, மோட்டரோலா, நோக்கியா நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து மொபைல் போன்களுடன் களமிறங்கியது. அவ்வளவுதான் இனி மற்ற செல்போன் நிறுவனங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சொந்த ஊருக்குப் போய் கிழங்கு தோண்டிப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் அளவுக்கு மக்கள் பேசினார்கள். அவர்களின் ஏஜெண்டுகளிடம் 3000 ரூபாய் முன்பணம் கட்டி முன் பதிவு செய்ய வேண்டுமென்றும் இணைப்பு வந்த பிறகு மாதா மாதம் கழித்துக் கொள்ளலாமென்றும் கறார் செய்தது. அதன் பிறகு ரேமண்ட்ஸ் துணி வாங்கினால் போன் கொடுத்ததெல்லாம் வேறு கதை. பல அலுவலகங்களில் அந்த போன்தான் சில காலம் பேப்பர் வெயிட். நிறைய பேர் அதை ஐநூறு ரூபாய்க்கு வாங்கி பில் கட்டாமல் வருடக்கணக்கில் உபயோகித்து விட்டெறிந்த கதையும் உண்டு. உபயோகித்த பலருக்கு பில்லே அனுப்ப முடியாத அளவு நிர்வாகம் நடந்தது.
ரிலையன்ஸ் என்பது கிட்டத்தட்ட நம்முடைய அரசாங்கம் போலத்தான். நிறைய பணம் இருக்கிறது. யாருக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லை. எனவே ஆரம்பம் எப்போதுமே அமர்க்களம்தான். பளபளக்கும் கட்டிடம், எஸ்கலேட்டர், லிப்ட் என்று துவங்கப்படும் ரயில் நிலையங்கள் மூன்றே மாதத்தில் கண்ணாடிகள் உடைந்து, எஸ்கலேட்டர் வெறும் படிக்கட்டாக மாறி நின்று விடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் அதற்கான பட்ஜெட் ஒதுக்கி இருக்க மாட்டார்கள். அதை விட அதைத் தொடர்ந்து சரிவர இயக்காவிட்டால் பெரிய விளைவுகளை அதன் நிர்வாகிகள் யாரும் சந்திக்கப் போவதில்லை.
ரிலையன்ஸ் ஜியோவும் அவர்களின் சிடிஎம்ஏ மொபைல் போலவே ஆரவாரமாக ஆரம்பித்திருக்கிறது. அதே போல வரிசை கட்டி நிற்கும் மக்கள். தூக்கி எறிவோம் அந்தப் பழைய உதவாத சிம் கார்டை என்ற கோஷம். ஏர்டெல், வோடாபோன் போன்றவர்கள் கிழங்கு தோண்டப் போகலாம் என்ற ஆலோசனை. இந்த முறை ஒரு பெரிய வித்தியாசம் சிடிஎம்ஏ என்ற உதவாத தொழில்நுட்பத்தோடு வராமல் பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் 4G எனப்படும் நான்காவது தலைமுறை அலைவரிசையை பெரிய அளவில் களமிறக்கி வருகிறது ஜியோ. அதாவது ரிலையன்ஸ் தவிர்த்து இதர செல்போன் நிறுவனங்களும் இவர்களிடம் இருந்தே 4G அலைவரிசையை வாங்க வேண்டி வரலாம். அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை வரலாறு காணாத பொருட்செலவில் மேற்கொண்டு வருகிறது. அது தவிர ஏர்செல் உட்பட நிறுவனங்களை வாங்கி விழுங்கி வருகிறது ரிலையன்ஸ்.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு டிஎன்ஏ இருக்கிறது. அது மனிதர்களுக்கு இருப்பது போன்ற குணாதிசயம். ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பெரு முதலீட்டு நிறுவனம். அவர்களால் ஒரு ஆயில் ரிபைனரியையோ, துறைமுகத்தையோ நிர்வாகம் செய்துவிட முடியும். ஆனால் சிறு சிறு வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் ரீடெயில் வணிகத்தில் அவர்கள் பெரிய தோல்வியையே சந்தித்து வந்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை சட்டையில் ஒட்டிய தூசு போல் நினைப்பது அவர்களது வழக்கம். இந்த முறை ஜியோவின் மாயாஜாலம் வாடிக்கையாளர்களை அவர்கள் பக்கம் இழுத்தாலும் அவர்களின் வழக்கமான பாணியை அவர்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால் சிடிஎம்ஏ கதிதான் ஜியோவுக்கும் ஏற்படும்.
இதனால் ரிலையன்ஸ் என்ற நிறுவனத்துக்கு எதுவும் ஆகாது. 4G கட்டமைப்பு மூலம் ஐபி டிவி, கேமிங், என்று நிறைய வணிகம் செய்ய முடியும். மொத்த விலையில் நன்றாக வணிகம் செய்யத் தெரிந்தவர்களுக்கு கொடுத்துப் பணம் பார்க்கும். ஆனால் ஜியோவைத் தொடர்ந்து இதே வேகத்தில் நடத்த ரிலையன்ஸ் தன்னுடைய டிஎன்ஏவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு பெருமுதலீட்டு நிறுவனம் என்ற சிந்தனையில் இருந்து வெளிவந்து தெரு முனை அண்ணாச்சி கடைக்காரர் மனநிலையில் மக்களை அணுகவேண்டும். பிற டெலிகாம் நிறுவனங்கள் இன்னும் பந்தயத்திலேயே இல்லை. இந்த மோனோபலி நிலை கூட மேலும் அகந்தையையே தரும். சும்மாவே ஆடுபவன் காலில் சலங்கை வேறா என்ற கேள்விதான் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment