ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்!
“குஷ்புவை தூக்கிட்டு வந்து கட்சிய வளர்க்கப் போறாணுங்களாம், அடக் கேவலமே!” என்று பத்திரிகையை படித்துவிட்டு எரிச்சலாகப் பேசினார் பக்கத்திலிருந்த பெரியவர். “எல்லா நடிகருந்தான் கட்சியில சேருறாங்களே” என்று நான் சாதாரணமாக சொல்ல, “அட! என்ன தம்பி, வரலாறு தெரியாம பேசுறீங்க. எப்பேர்பட்ட ஆளெல்லாம் வளர்த்த கட்சி… காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர்…” என அடுக்கியபடியே நொந்து கொண்டார்.
கிழக்கிந்தியக் கம்பெனிக்கு (அன்று) தேவைப்பட்ட அந்தக் கால ‘ஆம்பள குஷ்பு’தான் காந்தி என்பது அவருக்குத் தெரிய நியாயமில்லை. கட்சிகள் எல்லாம் கம்பெனிகள் ஆன பிறகு அதை மார்க்கெட்டிங் செய்ய மார்க்கெட் போன மகாத்மாவை வைத்து என்ன செய்ய?
பா.ஜ.க. ஹேமமாலினியையும் முற்றிலும் துறந்த மேக்னா படேலையும் நாளொரு பாலிவுட் கர சேவகர்களையும் இறக்குகையில், காங்கிரசின் வரலாற்றுத் தகுதிக்கு ஒரு நக்மா, ஒரு பாபிலோனா, ஒரு குஷ்பு என்று இறக்கா விட்டால் எப்படி ஈடு கொடுப்பது!
அதுவும், இதோ காங்கிரசில் இணைய நடிகர் கார்த்திக் வந்து கொண்டிருக்கிறார் என்று வாயெல்லாம் பல்லாக ஈ.வி.கே.எஸ். தேசப் பிதாக்களை எழுச்சியூட்டிக் கொண்டிருந்தார். வந்த இடத்தில் “ஏதோ, பிரச்சனைன்னாங்க, இந்த நெருக்கடியான நேரத்துல எட்டிப் பாத்துட்டு போகலாம்னு வந்தேன், நானா? காங்கிரசிலா? எனக்கே தெரியாது!” என்று தனது நெருக்கடியான சொத்துப் பிரச்சனையில் இழவு வீட்டுல எட்டிப்பாக்க வந்தது மாதிரி கார்த்திக் காங்கிரசை காமெடி பீசாக்கினார்.
குஷ்புவின் வருகை, அதுவும் ராகுலை சந்திக்க இன்னொரு கால்சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஈ.வி.கே.எஸ். முகத்தில், கே.பி. சுந்தராம்பாளை காங்கிரசில் சேர்த்த தீரர் சத்தியமூர்த்தியின் தெனாவெட்டு! கட்சியில் சேர்ந்த அடுத்த நொடியே “இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் ஒருபோதும் எடுத்தது கிடையாது… நான் என்னென்ன செய்யப் போகிறேன் என்பது போகப் போகத் தெரியும்…” என்ற குஷ்புவின் மிரட்டல் பரம்பரை காங்கிரசுக்காரனையே மிஞ்சி விட்டது! நல்லவேளை பா.ஜ.க.வுக்கு மிஸ்டு கால் கொடுக்காததால் தமிழிசைக்கு தற்காலிக நிம்மதி!
ஒரு பக்கம் ‘அன்னை சோனியா தலைமையில், சின்னத்தம்பி ராகுல் வழிகாட்டுதலில் குஷ்பு கலகலப்பில் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் ‘டைட்டில் கார்டில்’ காமராஜர், மூப்பனார் படத்தை போடலை என்று முறுக்கிக் கொண்டு, புதுப்பட பூஜைக்கு கிளம்பி விட்டார் சின்னப் பண்ணையார் ஜி.கே.வாசன். குத்தகை முரண்பாட்டையே கொள்கை முரண்பாடாக காட்டி, ‘’அறுவடை யாருக்கு சொந்தம், பார்க்கலாம்’’ என்று வழக்கம் போல வரப்புத் தகராறில் கதர் வேட்டி கிழிகிறது!
“கிழவி செத்து பாதகமில்லை ஆனா இழவு சொல்லி மாள முடியலே”ங்குற கதையா அகில இந்திய காங்கிரசில் அவன் இல்ல இவர் இல்லைனு சொல்லியே, புதுசா கட்சியை தமிழ்நாட்டில் ‘பார்ம்’ பன்றதே வேலையாப் போச்சு! புதுசா ஒரு கல்லு மொளச்சாலே குடம், மால, சந்தனம், கும்பாபிஷேகம்னு உருமி அடிக்கும் பத்திரிகைகள், புதுசா கட்சி தொடங்கினா சும்மா இருக்குமா? ஜீ.கார்னர் – ஜி.கே.வாசன், புது வியூகம், தமிழக அரசியலில் திடீர் திருப்பம் என்று கருமாதி வீட்டில் சரக்கை இறக்க ஆரம்பித்து விட்டன.
முக்கியமாக தமிழக ஜி.கே. வாசன், பக்திமான், பாரம்பர்யம் மிக்கவர், என்று அடித்தொண்டையில் கணைக்க, குருமூர்த்தியோ வைத்தீஸ்வரன் கோவில் ஏடு ஜோசியத்தை மிஞ்சும் வகையில், கட்சி தொடங்குறதுக்கு முன்பே, திராவிடக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு இன்னின்ன ‘வாஸ்துப்படி’ ராசிப்படி கட்சி அமைச்சா நல்லது என்று தினமணியின் நடுப்பக்கத்தில் பலன் சொல்லி விட்டார். தியாகய்யர் உற்சவக் கமிட்டி முதல் பல வகைகளில் , பன்னாட்டு மூலதனத்திடம் இந்திய துறைமுகங்களை ஒப்படைப்பது என்ற தாராளமய – தனியார்மய கொள்கையின் தாசராகவும் உள்ள வாசனை ஊடகக் கும்பல் புதிய எழுச்சி, புதிய கட்சி என்று உசுப்பேத்தினாலும், நடைமுறையில் அதே பழைய காங்கிரசு பெருச்சாளிதான் வாசனும்.
‘கொள்கை கிடக்கட்டும், பிறகு பாத்துக்கலாம், கூட்டத்துக்கு கத்திக் கொண்டு வர ஒரு கொடியாவது வேண்டும்!’ என்கிற அளவுக்கு சீரழிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற சுரண்டல் கட்சிகளில் ஒன்றுதான் இதுவும். கேள்வி கேட்டவனையே தலைசுத்தி குப்புற விழும்படி “காலம் பதில் சொல்லும்! புதிய எழுச்சி காத்திருக்கிறது! தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது” என்று கிறங்கடிக்கிற மாதிரி பதில் சொல்லும் வாசன்தான் திருச்சி ஜீ.கார்னரில் ‘தெளிவு படுத்த’ப் போகிறாராம்!
முதலில் சொந்தக் கட்சிக்காரனையே தெளிய வைத்தால் பெரிசு! இதில் சகிக்க முடியாதது ஊடகங்கள் நடத்தும் ஊக வேடிக்கைதான். இரண்டு கோஷ்டிகளைப் பற்றியும் கதை வசனம் கூறி ‘ஈ.வி.கே.எஸ். மூவ்! ஈ.வி.கே.எஸ், அதிரடி பிளான்! வாசன் தனித்திட்டம்! திணறப் போகும் ஜீ கார்னர்!’ என்று அறுந்த ரீலை ஓட்டுவது மட்டுமல்ல, “திராவிடக் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்த தமிழக மக்கள்” என்ற கருத்தை முன்னிறுத்தி தமிழகத்தின் வெற்றிடத்தை வாசன் நிரப்புவாரா? என்று கேள்வி வேறு.
இப்படி தமிழக அரசியிலின் வெற்றிடத்தை நிரப்ப தேசிய, சாதிய ஆவிகளுடன் இப்போது வாசனையும் கிளப்பி விடுகின்றனர் ஊடக வியாபாரிகள். வெற்றிடத்தை வெற்றிடங்கள் நிரப்பும் விநோதத்தை, நிகழ்த்திக் காட்டுவதில் காங்கிரசின் கோஷ்டிகளுக்குள் வித விதமான காட்சிகளைத் தாண்டி, காங்கிரசை கெட்ட கனவாக தமிழக மக்கள் மறந்து நீண்ட நாளாகிறது! ‘மீண்டும் காமராஜ் ஆட்சி’ என்று முணகிக் கொண்டே சாவதைத் தவிர தமிழகத்தில் அதற்கு வேறு வழியில்லை!
No comments:
Post a Comment