Friday, October 20, 2017

இப்போதெல்லாம் நான் மிக மிகத் தெளிவாக இருக்கின்றேன்.



எத்தனை புதுப் படங்கள் வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போகட்டும்.
எத்தனைப் புதுப் பாடல்கள் வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போகட்டும்.
யாருடைய இசையாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.
ஏற்கனவே நான் ரசித்து மகிழவேண்டிய, பாடல்கள் மற்றும் பின்னணியிசைகள், என்று ஆயிரக்கணக்கில் எங்கள் ராஜா சார் இசையில் மட்டுமே இருக்கின்றன. எனக்கு இனி அந்தக் கவலையும் இல்லை.
கண்டிப்பாக எங்கள் இசைஞானி பதிவு செய்துவிட்ட சாதனையை இசையில் எவரும் செய்துவிடப் போவதில்லை.
யாரைப்பற்றிய பொறாமையும் நமக்கு வர வாய்ப்பிருக்கப் போவதில்லை.
நம் இசைஞானியை இனி எவரோடும் ஒப்புமை செய்து நமது நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் விரயமாக்க வேண்டாம், என்று கருதுகிறேன்.
அவர் ஓர் ஆதார சுருதி போல.
அவரது இசையை, இசையின் தரத்துக்கான ஆதார அளவாக எடுத்துக் கொள்வோம் இனிமேல்.
ஏனெனில்...
-----------
இசை என்ற வரையறுக்குட்பட்ட அத்தனை ஒலிகளுக்கும் இசைக்குறியீடுகளை (notations) எழுதிய அனுபவம் நம் ராஜாசாருக்கு உண்டு.
அத்தனை குறியீட்டிற்கும் பலவித வாத்தியங்களில் இசைக்கலைஞர்கள் கொண்டு இசைக்கவைத்துக் கேட்ட அனுபவமுள்ளவர்.
ஆதலால் அவருக்கு மிக எளிதாக, மிக விரைவாக அத்தனை வாத்தியக்கருவிகளுக்குமான இசைக்குறிப்புகளை தானே எழுதி தான் நினைத்த ராகத்தில் மெட்டமைத்து ஒரு பாடலை அரைமணி நேர இடைவெளியில் படைத்துவிடும் ஆற்றல் கொண்டவர்.
இந்திய நாட்டில் பிறந்து வளர்ந்து அங்கேயே வாழ்ந்துகொண்டுமிருப்பதால் ஒவ்வொரு உணர்வுகளிலும் இசையை அதிகமாகக் கண்டுணர்ந்தவர் (காதல், மகிழ்ச்சி, சோகம் இவற்றுக்கெல்லாம் திரைப்படப் பாடல்கள் எல்லா நாடுகளிலும் உண்டென்று நான் கருதவில்லை).
தான் அந்த திரைத்துறைக்கு வந்ததும், அத்தனை உணர்வுகளுக்கும் தனக்கென ஒரு பாணியில், தனித்தனி இசைவடிவங்களை உருவாக்கி, இன்று திரைப்படக்காட்சிகளின் பின்னணியிசையென்றாலே உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர் 'இளையராஜா' என்று தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
பல்கலைக்கழகம் சென்று பட்டங்கள் பெறவில்லையெனினும், மேற்கத்திய க்ளாசிகல் இசை மற்றும் கர்நாடக க்ளாசிகல் இசை இவைகளின் அடிப்படைத் தொழில்நுட்பத்தை அதனதன் இசைமேதைகளிடம் (தன்ராஜ் மாஸ்டர், டி.வி.கோபாலகிருஷ்ணன் போன்றோரிடம்) தன் இசையார்வத்தினால் மிக நெருக்கமாகப் பழகி அருகிலிருந்து அறிந்துகொண்டவர்.
இதற்கு அவருக்குப் பேருதவியாக இருந்தது அவரது பிறவி இசைஞானமே. 
நொடிப்பொழுதில் இசையை கிரகித்துக் கொள்ளும் அற்புத சக்தி அவரிடம் அளவுக்கதிகமாக இருக்கிறது.
இன்னுமொரு விஷயம் இப்போது நமக்குத் தெரியவருவது, இசையை விரைவாகக் கிரகித்துக்கொள்ளும் சக்தியைப் போலவே அவருக்கு, தான் நினைக்கும் ராகத்தில் மெட்டமைக்க சுரங்களை விரைவாக வரிசைப்படுத்தும் (writing scores) சக்தியும் இயற்கையாகவே அவருக்கிருக்கிறது.
அதனாலேயே அவரால் இசைக்குறிப்புகளை நினைத்த மாத்திரத்திலேயே தன்னிச்சையாக (spontaneously) எழுத முடிகிறது.
ஆகவே நான் இசைஞானி இளையராஜாவிடம் இரண்டு வகையான குணங்களைக் காண்கின்றேன்.
ஒன்று அவர் பிறவிப் பயனால் பெற்ற அதிசய குணங்கள்:
1). தான் தெரிந்துகொண்ட ஒவ்வொரு ராகத்திற்கும், இயற்கையாகவே பல மெட்டுகளை அவர் தன்னிலிருந்து உருவாக்க முடிகிறது வெவ்வேறு விதமாக.
2). தான் தெரிந்துகொண்ட இசைக்குறிப்பு எழுதும் முறையில், தான் நினைத்த மெட்டிற்கான சுரங்களை வேகமாகத் தவறின்றி எழுதும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளது.
3). தான் நினைத்த மெட்டிற்கு இசைக்கப்படவேண்டிய அத்தனை வாத்தியங்களையும் மனதில் நிறுத்தி அவற்றிற்கான தனித்தனி சுரவரிசைகளையும் ஒரே மூச்சில் எழுதிவிடும் அபாரமான ஞாபகசக்தியை இயற்கையாகப் பெற்றுள்ளது.
4). ஒரு காட்சியைப் பார்க்கும்போதே அதற்கான பின்னணி இசையின் மெட்டுக்களை தன் மனதில் உருவாக்கி இசைக்குறிப்புகளாக (score sheets) எழுதிவிடும் ஆற்றலை இயற்கையாகவே அவர் பெற்றிருப்பது.
(பின்னர் காட்சியை ஓடவிட்டு இசைக்கலைஞர்கள் அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அது காட்சியோடு ஒன்றிப்போய்விடும் (synchronised) நிகழ்வு ஒவ்வொரு முறையும் தவறாமல் நடப்பதுதான் அவரது விந்தையான செயலாகும்.
இது நிகழ்வதை, பட இயக்குனர்கள் மட்டுமின்றி அவருக்கு இசையமைக்கும் இசைஞானம் உள்ள இசைக்கலைஞர்களே அதிசயத்தை வியந்து பாராட்டுகிறார்கள்)
என, 
மேலே சொன்ன நான்கும் ராஜாசார் இயற்கையாக பிறப்பால் பெற்ற அதிசயங்கள்.
(இவற்றையெல்லாம் 'அதிசயங்கள்' (miracles) என்று நான் உண்மையாகத்தான் சொல்கின்றேன். 
இதையேதான் ராஜாசாரும் "எல்லாம் அந்த நேரத்தில் எனக்குத் தானாக வருகிறது. நான் இதற்கென்று எதுவும் செய்வதில்லை." என்று சொல்கிறார்.)
இவை தவிர தன் விடா முயற்சியால், தன் கடினமான அனுபவங்களால், இரவு பகலென்று பாராமல் தானே செய்யும் பயிற்சியினால் ராஜாசார் பெற்றது, கீழ்க்காணும் அத்தனை குணங்(திறன்)களும்:
ஆர்மோனியம் வாசிக்கக் கற்றது.
தன்ராஜ் மாஸ்டரிடம் பெற்ற மேற்கத்திய இசைப் பயிற்சி.
அவரிடமே கிட்டார், பியானோ, ஃப்ளூட் போன்ற மேற்கத்திய இசைவாத்தியங்களை வாசிக்கக் கற்றது.
சலீல்சௌத்ரி மற்றும் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்து பெற்ற கம்போசிங் மற்றும் இசைக்குறிப்புகள் எழுதக் கற்றது.
அப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தானே இயற்றிய மெட்டுக்களை அந்த இசைக்கலைஞர்களையே வைத்து, இசைவாத்தியங்களை மட்டும் வெளியிலிருந்து வாடகைக்கு எடுத்து வாசிக்கச் செய்தது.
இதனால் தன்னைத்தானே சோதித்துக்கொண்டதோடு, தன் இசைத்திறன் பற்றியும், இசைபற்றியும் மற்றவர்களிடமிருந்து கருத்துகள் கேட்டு தெரிந்துகொண்ட அனுபவத்தையும், அவர் பெற்றது.
இப்படியாக இயற்கை மற்றும் அனுபவப் பயிற்சி, ஆகிய இரண்டுவித நூதனமான குணங்களைப் பெற்றவர் நம் ராஜா சார்.
ஆக இங்குதான் நான் ஒரு முடிவுக்கு வருகின்றேன்.
இன்றையதினம் தன் அற்புத இசையால் 1000 படங்களுக்கும் மேலாக 7000 பாடல்களைக் கடந்து 41 வருடங்களாக திரையுலகில் இன்னும் இருந்துகொண்டு உலகின் கவனத்தை தன் சாதனைகளால் தன் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாபோல் ஒருவர்,
இனிமேலும் பிறந்து, பிறக்கும்போதே இசைஞானத்துடன் பிறந்து, அதன்பின் இத்தனை அனுபவங்களைப் பெற்று,
இதயங்களை ஈர்க்கும் ராகங்களின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மெட்டுகளில் அமைந்த பாடல்கள்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களின் காட்சிகளை திரைக்காவியங்களாக மாற்றி உணர்வுகளை நம் ஆழ்மனதுவரை எடுத்துச்சென்றுவிடும் அந்த அற்புத பின்னணியிசை (bgm),
என்று இவைகளைத் தர இயலுமா.
இதுவே நான் இங்கு வைக்கும் கேள்வி.
'முடியவே முடியாத காரியம்.'
இதுவே நான் எடுத்த உறுதியான முடிவு.
நிகழ்ந்த தெல்லாம் அதிசயம். இளையராஜாவால் இன்று நிகழ்ந்துகொண்டிருப்பதுவும் அதிசயம்.
இந்த அதிசயம் எனது இந்தப் பிறவியில் நடந்துவிட்டது.
இவற்றை நேரில் கண்டு அணுவணுவாக அனுபவித்து மகிழ்ந்துகொண்டிருக்கும் நான் உயிரோடு இருக்கிறேன்.
அதற்குச் சாட்சியாக இதோ இங்கே என்போன்ற நட்புகளுடன் பகிர்வதற்காக முகநூலில் இன்று 'தீபாவளி', 18-10-2017 அன்று இரவு என் சொந்தக் கருத்தாக பதிவிடுகின்றேன்.
நன்றி.
அன்புடன்,
இளையராஜா ரசிகன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...