Sunday, October 1, 2017

அ.தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி ? உண்மை உணர்த்தும் 18 'பரபர' சம்பவங்கள்.!

‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் தற்போது பி.ஜே.பி-யிடம் இருக்கிறது.’’
‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க அரசு இயங்குகிறது.’’
"தனக்கு சலாம் போடும், தலையாட்டும் பொம்மைகளுக்காக அ.தி.மு.க-வை மறைமுகமாக ஆட்டிவைக்கிறது பி.ஜே.பி.’’
- தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அத்தனை அக்கப்போர்களுக்கும் பின்னால் வைக்கப்படும் விமர்சனங்கள்தான் இவை.!
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி அணிகள் இணைந்தபோது, ‘‘டெல்லியிலிருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் மிரட்டி, பணியவைத்து இணைத்துள்ளனர்’’ என சொன்னார் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
"மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, துணை ராணுவம், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ போன்ற அமைப்புகளை வைத்துக்கொண்டு, தமிழக அரசு நிர்வாகத்தை நிலைகுலைய வைக்கிறார்களா?", "சுயநலத்துக்காக அரசியல் சட்ட அமைப்புகளைக் கண்மூடித்தனமாக பி.ஜே.பி பயன்படுத்துகிறதா?", "அ.தி.மு.க உள்கட்சி அரசியலின் சூத்திரதாரி பி.ஜே.பி-தானா?", "திரைக்கதையின் நாயகன் பிரதமர் நரேந்திர மோடியா?"
இந்தக் கேள்விகளுக்கான விடை, ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆன நாளில் ஆரம்பித்து, அணிகள் இணைப்பு வரையில் நடந்த அத்தனை சம்பவங்களையும், கேலிக்கூத்துகளையும் கோர்வையாக்கிப் பார்த்தால், ‘மாஸ்டர் பிரைன்’ யார்? என்பது புரியும். 'அப்போலோ to அணிகள் இணைப்பு' வரையிலான அக்கப்போர்களை இப்போது சற்றே ரீவைண்ட் செய்து ஓடவிடுவோம்...
சம்பவம் 1 : -
பொறுப்பு முதல்வர்.!
ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, பொறுப்பு முதல்வரை நியமிப்பதில் அ.தி.மு.க-வைவிட அதிக அக்கறைக் காட்டியது பி.ஜே.பி 2016 அக்டோபர் 7-ம் தேதி ஒரேநாளில் இரண்டுமுறை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை அன்றைக்குத் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் சந்தித்துப் பேசினார். அதோடு அதேநாளில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ராம மோகன் ராவ் ஆகியோர் கூட்டாக ஆளுநரைச் சந்தித்தார்கள். 'தங்கள் சொல்படி செயல்படும் பொறுப்பு முதல்வரை உடனே போட்டுவிட வேண்டும்' என்பதில் பொறுப்பு ஆளுநர் காட்டிய, ‘பொறுப்பு’ மலைக்க வைத்தது. இந்தச் சந்திப்பு பற்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியபோது, ‘காவிரி பிரச்னைக்காக ஆளுநர் ஆலோசனை நடத்தினார்’ என்றார்கள். எப்படி அப்போலோவில் இருந்தபடியே 'காவிரிக்காக அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்' எனச் சொன்னார்களோ அந்தப் பூவை ஆளுநர் மாளிகையும் மாலையாகக் கட்டி, மக்கள் காதில் சுற்றியது. ‘பொறுப்பு முதல்வர் இப்போது அவசியம் இல்லை’ என சசிகலா குடும்பம் முரண்டு பிடித்தபோதும் ஜெயலலிதா, இலாகா இல்லாத முதல்வரானார். பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதாவின் துறைகள் கைமாறின.
சம்பவம் 2: -
ராகுலும் ராசாத்தி அம்மாளும்.!
‘முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது குணம் பெறுவார் எனத் தெரியவில்லை. அதனால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்’ என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குக் பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதினார். கொதித்துப்போன அ.தி.மு.க-வோ ராகுலை அப்போலோவுக்கு அழைத்து வந்தது. ஜெயலலிதாவுக்கு ஏதாவது நடந்து ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என சசிகலா குடும்பம் காட்டிய முன்னெச்சரிக்கைதான் திடீர் காங்கிரஸ் பாசம். ஆனால், பி.ஜே.பி-க்கு இவர்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்கிற அச்சம் இருந்தது. ராகுலின் அப்போலோ வருகை, பி.ஜே.பி-யில் ஆயிரம் அரசியல் அர்த்தங்களை விதைத்தது. ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு கிளம்பிப் போனார் மோடி. ஆனால், ராகுல்காந்தி இறுதிச்சடங்கு வரைக்கும் வந்தார். 'காங்கிரஸ் மட்டும் போதாது' என தி.மு.க-வுடனும் நெருக்கம் காட்டியது சசிகலா குடும்பம். ராசாத்தி அம்மாள் அப்போலோவுக்கு நேரில்வந்து சசிகலாவைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போனார்.
மருத்துமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சசிகலாவின் உத்தரவால் அவரைப்போய் பார்த்தார்கள் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையும் அமைச்சர் ஜெயக்குமாரும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்தச் சந்திப்பு சாத்தியப்பட்டிருக்குமா? ‘தீயசக்தி’ என மூச்சுக்கு முந்நூறு தடவை கருணாநிதியை உச்சரித்தவர்கள், ‘திடீர் பாசம்’ காட்டுவதை பி.ஜே.பி உன்னிப்பாகக் கவனித்தது. 'அப்போலோவுக்கு ராசாத்தி அம்மாள் வர நடராசனும் சசிகலாவும் சிக்னல் கொடுத்தார்கள்' என்பதைத் தெரிந்துகொண்டது பி.ஜே.பி இப்படி ஒரே நேரத்தில் காங்கிரசுடனும் தி.மு.க-வுடனும் அ.தி.மு.க நெருங்கியதால் அ.தி.மு.க-வுக்குள்ளேயே நெருங்கியது பி.ஜே.பி
சம்பவம் 3 : -
ஆளுநர் மாளிகை அரசியல்!
. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதியுடன் பதவி நிறைவடைந்த தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவின் இடத்துக்கு மஹாராஷ்ட்ரா கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். அடுத்த சில நாள்களிலேயே ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அன்றிலிருந்து வித்யாசாகர் ராவை வைத்து நடத்தும் அரசியல், அணிகள் இணைப்பு வரையிலும் தொடர்கிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதவியேற்பு விழாவை நடத்துவது மட்டுமே கவர்னரின் வேலை. ஆனால், அதைத் தாண்டி எடப்பாடியையும் பன்னீரையும் கரம் பிடித்து கைகோத்த வைத்த வித்யாசாகர் ராவ், சற்றே வித்தியாசமானவர்தான். ஆளுநரா? ஆள்களைச் சேர்த்து வைக்கும் ஆள் அவரா? என்பதற்கு இது மட்டுமே உதாரணம் அல்ல. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூடி சசிகலாவை முதல்வராகத் தேர்வுசெய்து, அதற்கான ஆதரவுக் கடிதத்தை வித்யாசாகர் ராவிடம் நீட்டியபோது, உடனே பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை.
அப்போது இழுத்தடிப்பில் ஈடுபட்ட ஆளுநர்தான், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைப்பு நடந்த அன்றே, பன்னீருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மஹாராஷ்ட்ராவிலிருந்து ஓடி வந்தார். சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் மும்பையில் முடங்கிக் கிடந்தவர், இப்போது மும்முரம் காட்டியது எல்லாமே ‘அரசியல் இல்லை’ என்றால் 5-ம் வகுப்பு மாணவன்கூட நம்ப மாட்டான்.
சம்பவம் 4: -
ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள்!
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்தை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், இந்த இரண்டு திட்டங்களையும் சத்தமில்லாமல் பன்னீரை வைத்து நிறைவேற்றியது பி.ஜே.பி. இந்தியா முழுவதும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மாநில மின்வாரியங்களைப் புனரமைப்பதற்காக மோடி அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்தை அனைத்து மாநிலங்களுமே ஏற்றுக்கொண்டபோது, ஆரம்பம் முதலே எதிர்த்தவர் ஜெயலலிதா. ஆட்சி மாற்றம் அல்ல; ஆள் மாற்றம் நடந்த பிறகு உதய் திட்டத்துக்கு தமிழக அரசின் இசைவு இடியாப்ப சிக்கல் இல்லாமலேயே வாய்த்தது என்றால் அதற்கு அர்த்தம் என்ன?
மன்மோகன் சிங் அரசு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அவசரச் சட்டமாக கொண்டுவந்த காலத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர் ஜெயலலிதா. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்ததும் அவரை முதன்முறையாக ஜெயலலிதா சந்தித்தபோதும், போயஸ் கார்டனில் தன்னை தேடிவந்து பிரதமர் மோடி சந்தித்தபோதும், 2016 ஜூனில் மோடியை டெல்லியில் சந்தித்தபோதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார் ஜெயலலிதா. ‘உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும்’ என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர் வலியுறுத்தினார். ஆனால், இந்தச் சட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்த அரசாணை வெளியிட்டார்கள்.
இதேபோல்தான் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும்சாலை திட்டப் பணிகள் தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, அதை கிடப்பில் போட்டவர் ஜெயலலிதா. அதை அன்றைக்கு நியாயப்படுத்தி பேசினார்கள் ஜெயலலிதாவின் முக்கிய அமைச்சர்கள். ‘கூவத்தில் தண்ணீர் போக்குவரத்து தடைபடும்’ என்று தெரிவித்த இதே அமைச்சர்கள்தான் தற்போது பி.ஜே.பி-க்கு பயந்து, அத்திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா துணிச்சலோடு எதிர்த்தார். எடப்பாடி அரசில் உள்ள மந்திரிகள் பயத்தோடு ஆதரிக்கிறார்கள். தலைவிக்குத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை; டெல்லி தலைமைக்குக் கட்டுப்பட்டால் போதும் என்கிற நிலைக்கு அ.தி.மு.க-வை நிறுத்தியவர்கள்தான் மூச்சுக்கு முந்நூறு தடவை, ‘‘அம்மா வழியில் நடக்கும் அரசு இது’’ எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா, ஆரோக்கியத்துடன், அரசியல்ரீதியாக வலுவுடன் இருந்திருந்தால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்குமா? அவரின் உயிரிழப்பை, இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம், வரவேற்றுக் கொண்டாடியிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
சம்பவம் 5: -
சேகர் ரெட்டி ரெய்டு!
ஓ.பன்னீர்செல்வத்தின் கூட்டாளியுமான சேகர் ரெட்டி வீட்டில் நடத்திய ரெய்டில் 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. பன்னீர் முதல்வராக இருந்த டிசம்பரில்தான் இது அரங்கேறியது. சேகர் ரெட்டிக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன. அவரது கூட்டாளிகள் கைதானார்கள். பொதுப்பணித் துறை கான்ட்ராக்டரான சேகர் ரெட்டியை க்கொழுத்த கிடாவாக மாற்றிய, அந்தத் துறையைத் தன்வசம் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் வருமானவரித் துறை கண்டுகொள்ளவே இல்லை.
சேகர் ரெட்டியுடன் ஒன்றாக திருப்பதியில் போஸ் கொடுத்த பன்னீர்செல்வத்தை மட்டும் பதமாக வழக்கில் இருந்து ஏன் பிரித்தார்கள்? ‘‘திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக சேகர் ரெட்டியை நியமித்ததே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான்’’ என அவரின் அமைச்சரவையில் இருந்த சி.வி.சண்முகமே சர்டிபிகேட் கொடுத்தார். சேகர் ரெட்டி கைதைக் காரணம்காட்டி பன்னீருக்கு ஜெயில் பயத்தைக் காட்டினார்கள். அதை வைத்தே அ.தி.மு.க-வை இரண்டாக உடைத்தார்கள்.
சம்பவம் 6: -
ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு!
சேகர் ரெட்டி அலுவலக ரெய்டு லிங்க், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு வரை நீண்டது. துணை ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு, தலைமைச் செயலகத்திலேயே சோதனை போட்டனர். அந்தச் சோதனை நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக கோட்டையில்தான் இருந்தார். தலைமைச் செயலகத்தில் சோதனையா? என விமர்சனம் எழுந்தபோது பன்னீர், மௌனியாகத்தானே இருந்தார். தனக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது எனப் பயந்தாரா, பணிய வைக்கப்பட்டாரா? ஓ.பி.எஸ் ஓகே சொல்லாமல் வருமானவரித் துறை கோட்டைக்குள் நுழைந்திருக்க முடியுமா?
சம்பவம் 7: -
பொதுச் செயலாளர் சசிகலா!
பிரதமர் மோடி, ஜெயலலிதா, உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவிடம் சென்று பேசினார். தலையைத் தொட்டு ஆறுதல் சொன்னார். கண்ணீர்விட்டு அழுத பன்னீர்செல்வத்தைக் கட்டியணைத்தார். இறுதிச்சடங்கு நடைபெற்றபோது, ஜெயலலிதாவின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடியை, ராணுவ வீரர்கள் சசிகலாவிடம்தான் அளித்தார்கள். அப்போதெல்லாம் சசிகலா குடும்பத்தின் மீது பி.ஜே.பி-யின் பரிவு குறையவில்லை. ஜெயலலிதாவின் உயிர் அப்போலோவில் போராடிக்கொண்டிருந்தபோதுதான் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு, உடனே கவர்னர் மாளிகையில், அவர் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. பன்னீருக்கு மணிமகுடம் என்றதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ராஜ்பவன் நள்ளிரவு நேரத்திலும் திறந்திருந்தது.இப்படி அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் சசிகலா குடும்பத்தின் மீது கோபத்தைக் காட்டவில்லை மத்திய அரசு.
சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆனதும் பன்னீரை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் பதவியில் அமர சசிகலா நினைத்ததும் பி.ஜே.பி-யின் நிறம் மாறியது. ‘சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ என அ.தி.மு.க பொதுக்குழுவில் சொன்னதும் கொதித்தவர்கள் தொண்டர்கள் மட்டுமா? பி.ஜே.பி-யும்தான். 'சசிகலா நாட்டின் மூன்றாவது பெரிய கட்சிக்குத் தலைவரா?' எனக் கணக்குப் போட்டது. அ.தி.மு.க-வை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிவு எடுத்த தினம், 2016 டிசம்பர் 31-ம் தேதி. அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா சார்ஜ் எடுத்த நாள் அது.
அப்போது அவர் ஆற்றிய முதல் உரையில் ‘‘மதச்சார்பற்ற கட்சியாகவே அ.தி.மு.க தொடரும்’’ என்றார். இதுவே பி.ஜே.பி-க்கு கிடைத்த ரெட் சிக்னல். 'தங்களுக்கு சசிகலா மறைமுகமாக சேதி சொல்லிவிட்டார்' என எடுத்துக் கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை. அதன்பிறகு அடுத்தடுத்து அதிரடியாக மாற்றங்கள் அரங்கேற ஆரம்பித்தன. முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர ஆரம்பித்தபோது, 'இனியும் விட்டு வைக்கக் கூடாது' என்பதற்கேற்ப மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடங்கின.
சம்பவம் 8: -
ஜல்லிக்கட்டு!
ஜல்லிக்கட்டுப் புரட்சி வெடித்தபோது தமிழகத்தின் அத்தனை அரசியல் தலைவர்களும் இளைஞர்களின் வாயில் வறுபட்டார்கள். இதில் மோடியும் விதிவிலக்கு அல்ல. இதனால், கொதித்துப்போன பி.ஜே.பி அன்றைக்கு முதல்வராக இருந்த பன்னீரை வைத்து கீ கொடுக்க ஆரம்பித்தது. வேறு நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட பின்லேடன் படத்தை மெரினாவோடு முடிச்சுப்போட்டு, அந்தப் படத்தை சட்டசபையிலேயே காட்டினார் பன்னீர். பின்லேடனுக்கு எதிரான படமான 'விஸ்வரூபம்' படத்தை கமல் வெளியிட்டபோது, அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் ஜெயலலிதா. ஆனால் பின்லேடன் படத்தை வைத்திருந்தார்கள் என பன்னீர்செல்வம் சொன்னது ‘யாருடைய வாய்ஸ்’ என அப்போதே கேள்விகள் எழுந்தன.
சம்பவம் 9: -
பன்னீர் தியானம்!
‘‘அம்மா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ராணுவ அமைப்புபோல கட்சியைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரேவழி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான்" - இப்படி அறிக்கைவிட்ட பன்னீர்செல்வத்தை, 'சின்னம்மாதாசனாக' இருந்தவரை தடம் மாற்றினார்கள். ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது.’ என அந்த அறிக்கையில் சொன்ன பன்னீரைக் குழப்பியது யாராக இருக்கும் என்கிற கேள்விக்கு விடைதேட வேண்டியதில்லை.
சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்து சசிகலா பொறுப்பு ஏற்க கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது அவரின் காலில் விழுந்து வணங்கியதும் பன்னீர்தான். ‘சசிகலா தலைமை வேண்டும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது’ என்றெல்லாம் பேசியதும் பன்னீர். சசிகலா முதல்வர் ஆவதற்காக ராஜினாமா செய்து வழிவிட்டவர் பன்னீர். இப்படியெல்லாம் சசிகலா ஆதரவாளராக இருந்த ‘மிஸ்டர் பணிவு’ பிப்ரவரி 7-ம் தேதி இரவு திடீரென்று முகாம் மாறினார். ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்து திடீர் புரட்சியைக் கிளப்பினார். இந்த புத்தருக்கு டெல்லி ஞானோதயம் வந்த பிறகுதான் எல்லாமே நடந்தது.
சம்பவம் 10: -
சசிகலா முதல்வராகத் தேர்வு!
‘‘கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்கள். சசிகலா தலைமையை யாரும் ஏற்கவில்லை’’ என பன்னீர் கொதித்தெழுந்து கொண்டிருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏ-க்களால் சட்டமன்றக் கட்சித்தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உடனடியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. இந்நிலையில்தான் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. வித்யாசாகர் ராவின் மவுனமும் இழுத்தடிப்பும் எதற்காக நடந்தது? பன்னீரை ஆட்சியில் அமர வைப்பதற்காகத் தரப்பட்ட காலஅவகாசம் கடைசியில் பயன்தராமல் போனது. கடைசியில் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர்.
சம்பவம் 11: -
பன்னீர் - பிரதமர் சந்திப்புகள்!
ஜெயலலிதாவால் இரண்டுமுறை முதல்வர் ஆக்கப்பட்ட பன்னீருக்கு ஜெயலலிதா ஆட்சியின்போது, ‘சிறப்புப் பாதுகாப்பு’ எதுவும் அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவைவிட மோடிக்கு அதிகம் விசுவாசம் காட்டியதால் பன்னீர்செல்வத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு கொடுத்தது மத்திய அரசு. பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது, அவர் வெறும் எம்.எல்.ஏ. மட்டும்தான். மோடியின் மத்திய மந்திரிசபையில் இருக்கிற அமைச்சர்கள்கூட மோடியைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் சாதாரண எம்.எல்.ஏ-வான பன்னீர், நினைத்த நேரத்தில் மோடியைச் சந்திக்க முடிந்தது. ‘சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது', 'இரட்டை இலைக்கு உரிமை’ எனத் தேர்தல் கமிஷனில் முறையிடுவது எல்லாமே பன்னீர் அணியை வைத்தே வேகம் எடுத்தன. அது ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து வரை நீடித்தது.
சம்பவம் 12: -
விஜயபாஸ்கர் வீடு ரெய்டு!
ஆர்.கே.நகர் தொகுதியில் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ‘தினகரன் ஜெயித்து விடுவார்’ என்கிற நிலை உருவானபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமான வரித்துறை. ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பி விஜயபாஸ்கரை விடாமல் துரத்தினார்கள். 100 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டன. விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம் வரை, வில்லங்க விஜயபாஸ்கரின் பெயர் அடிபட்டது. 'தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய அனுமதிக்க 40 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகார்' என அடுத்தடுத்து விஜயபாஸ்கர் குறி வைக்கப்பட்டார். அவரின் வீட்டில் ரெய்டுக்குப் பிறகுதான் சசிகலா ஆதரவு எடப்பாடி அரசு, பி.ஜே.பி ஆதரவு அரசாக மாறியது.
சம்பவம் 13: -
தினகரன் கைது!
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற பேரம் பேசியதாக தினகரன் மீது வழக்கு பாய்ந்தது. அதன்பிறகுதான் ‘‘தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்’’ என்கிற குரலை ஓங்கி ஒலித்தார்கள் அமைச்சர்கள். ‘‘யாருக்கோ பயந்து இந்த முடிவை அமைச்சர்கள் எடுத்திருக்கிறார்கள்’’ என தினகரன் சொன்னார். திகார் சிறையில் தினகரன் திணிக்கப்பட்டதில் தொடங்கி பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த தினகரனின் 'ஃபெரா' வழக்குகள் தூசித் தட்டப்பட்டு தினமும் நடக்க ஆரம்பித்தது எல்லாமே தினகரனின் என்ட்ரிக்குப் பிறகுதான். இது எல்லாமே எதார்த்தமா?
சம்பவம் 14: -
எடப்பாடி - மோடி சந்திப்புகள்!
சசிகலா சிறைக்குச் சென்றபிறகு தினகரன் விஸ்வரூபம் எடுத்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரம் வரை உடன்சென்ற எடப்பாடிக்கு தெரியாதா? தினகரன் வென்று வந்தால், அவர் முதல்வர் நாற்காலிக்கு குறி வைப்பார் என்பது. ஆனாலும் தினகரனை ஆதரித்தார். அது, பி.ஜே.பி-க்கு பிடிக்கவில்லை. பன்னீரை வளைத்ததுபோல எடப்பாடியையும் தங்கள் பக்கம் இழுத்தார்கள்.
‘செல்லாக்காசு’ அறிவிப்பின் எதிரொலியாக நடந்த வருமானவரித் துறையினர் சோதனையில் ஈரோட்டில் ‘ராமலிங்கம் கன்ஸ்டரக்சன்ஸ் கம்பெனி’ உரிமையாளர் ராமலிங்கமும் அவரது குடும்பமும் வளைக்கப்பட்டது. இவர்களின் நிறுவனம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகள் எல்லாம் சோதனையில் தப்பவில்லை. 5.7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சந்திரகாந்த் கைது ஆனார். பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியம் தன்னுடைய ஒரு மகளை ராமலிங்கம் வீட்டிலும் இன்னொரு மகளை எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலும் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதனால், எடப்பாடி பழனிசாமியும் ராமலிங்கமும், சுப்பிரமணியமும் உறவினர்கள் ஆனார்கள்.
சேகர் ரெட்டி பங்குதாரராக இருக்கும் ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுப்பிரமணியம் பங்குதாரராக உள்ளார். இந்தச் சுப்பிரமணியத்தின் மகள் திவ்யாதான், எடப்பாடி பழனிசாமியின் மருமகள். இப்படியான சிக்கலில் எடப்பாடியின் பிடியும், மத்திய அரசின் கையில் இருப்பதால் அவரும் தஞ்சாவூர் பொம்மையாக்கப்பட்டார்.
சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்களுக்கும் எல்.எல்.ஏ-களுக்கும் தரப்பட்ட லஞ்சம் பற்றிய விவரம் இருந்தது. ‘அந்த டைரியில் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகள் பட்டியலை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் வழங்கினர். இதனால் பலர் பீதியடைந்தனர். விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா லிஸ்டில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இருந்தது. பன்னீரைப் போலவே எடப்பாடிக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை கம்பளம் விரித்து எடப்பாடியையும் சுருட்டிக்கொண்டது.
சம்பவம் 15: -
குடியரசுத் தலைவர் தேர்தல்!
ஜனாதிபதி தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் மோடியும் அருண் ஜெட்லியும் சுஷ்மா சுவராஜும் போயஸ் கார்டனுக்கு நேரில் தேடி வந்திருப்பார்கள். ஆனால், அவர் உயிருடன் இல்லாத நேரத்தில் அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவதில் பி.ஜே.பி-க்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தலைமை உத்தரவு போட்டதும் வலிந்துபோய் பி.ஜே.பி-யின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்தை ஆதரித்தார்கள். எடப்பாடி, பன்னீர் இதிலும் என்ன ஒற்றுமை. ஜெயலலிதாவிடம் அடிமைகளாக இருந்தவர்கள், இப்போது டெல்லிக்கு அடிமையானர்கள்.
சம்பவம் 16: -
ஆடிட்டர் குருமூர்த்தி.!
தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாதான் சசிகலா ஆதிக்கத்தின் வீழ்ச்சிக்கு மையப் புள்ளி. அந்த விழாவில்தான் ‘‘குடும்ப அரசியல் செய்வோம்!’’ எனச் சொன்னார் நடராசன். ‘‘பி.ஜே.பி-யில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஆடிட்டர் குருமூர்த்தி, அரசியல் செய்யும்போது நாங்கள் செய்யக் கூடாதா?’’ எனச் சீறினார். இது மட்டுமா பேசினார். ‘‘காங்கிரஸ் இன்றைக்கு இருக்கிற இடம் தெரியவில்லை. காங்கிரஸால் முடியாத ஒன்றையா, காவிகளால் முடித்துவிட முடியும்? அதையும் பார்த்துவிடுவோம். அரசியல் விளையாட்டு செய்து ஆட்சியை மாற்ற வேண்டுமென நினைத்தால், அது உங்கள் தலையெழுத்து. நாங்கள் என்ன செய்ய முடியும்? தமிழக ஆட்சியையும் அ.தி.மு.க-வையும் உடைக்கப் பார்க்கிறீர்களா? அதை உடைக்க உங்களால் முடியாது. ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி என எந்தப் பெயர் வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, தனிஆளாக நான் வரத் தயார். மோடியை வைத்துக்கொண்டு, மோடி வித்தைக் காட்டாதீர்கள்’’ எனக் கொதித்தார். நடராசனால் விமர்சிக்கப்பட்ட ஆடிட்டர் குருமூர்த்தியைத்தான் அ.தி.மு.க நிர்வாகிகள், அணிகள் இணையும் முன் நேரில் போய்ப் பார்த்தனர். எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்பு நடப்பதற்கு முந்தைய தினம் இரண்டு தரப்பும் அ.தி.மு.க-வுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாத ஆடிட்டர் குருமூர்த்தியின் மத்தியஸ்தத்துக்காக அவரைச் சந்தித்தார்கள்.
சம்பவம் 17: -
நிரந்தர கவர்னர்
பி.ஜே.பி காலூன்ற முடியாத மாநிலங்களில் கவர்னரை வைத்து அந்த மாநிலங்களில் செல்வாக்கை செலுத்த நினைக்கிறது. கட்சிகளை உடைத்து கணிசமான எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பது என்கிற ஸ்டைலில்தான் அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்கள் சிக்கின. இப்போது தமிழகத்தில் வேர்பிடிக்க நடக்கும் முயற்சிகள் அப்பட்டமானது. நிரந்தர கவர்னரை நியமிக்காமல் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை வைத்து தமிழக அரசின் கண்ட்ரோலையே அவரின் கைக்குள் திணித்தார்கள். சசிகலாவுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தாமதம் காட்டிய வித்யாசாகர் ராவ்தான், பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் ஆக்குவதற்கு மும்பையில் இருந்து ஓடி வந்தார். எடப்பாடியையும் பன்னீரையும் கையைப் பிடித்து, கைகோத்து வைத்தார்.
சம்பவம் 18: -
பன்னீருக்கு மோடி பாராட்டு!
மாநில முதல்வர்கள் பதவியேற்கும்போது, நாட்டின் பிரதமர் வாழ்த்துச் சொல்வது மரபுதான். ஆனால், அமைச்சராக (துணை முதல்வர் பதவி அரசியல் அமைப்பில் கிடையாது) பன்னீர் செல்வம் பதவியேற்றதற்கும் அணிகள் இணைந்ததற்கும் வாழ்த்து சொல்லியது எல்லாம் பன்னீர் பாசமே அன்றி வேறென்ன!
துணிச்சலுக்குப் பெயர் எடுத்த ஜெயலலிதா கேபினட்டில் இருந்தவர்கள், இன்றைக்கு கோழைகளாக இருக்கிறார்கள்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி இல்லை.. இந்த லேடிதான்’’ என அடித்துச் சொன்னார் ஜெயலலிதா. அந்த லேடியைத்தான் வீடு தேடிப் போய் பார்த்தார் மோடி. ஜெயலலிதா இருக்கும் வரையில் அ.தி.மு.க-வை அசைத்துப் பார்க்க முடியாத மோடி, அந்த லேடி இறந்தபிறகு, கட்சியைக் கைப்பற்ற முடிகிறது என்றால் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு இதைவிட வேறு உதாரணத்தைச் சொல்ல முடியுமா?
‘‘அ.தி.மு.க.வை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது’’ என ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு முடிந்ததும் சொன்னார் நடராசன். இப்போது நடராசனுக்குப் புரிந்திருக்கும் ‘‘வெளியில் இருந்துதான் வீழ்த்துகிறார்கள்’’ என்பது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...