தமிழகத்தில் நடந்த, லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், கட்சி தாவிய பலர், வெற்றி பெற்றுள்ளனர்.
திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, காங்., வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.தி.மு.க., வில் அரசியல் வாழ்க்கையை துவங்கியவர். அக்கட்சி சார்பில், சட்டசபை துணை சபாநாயகர், அமைச்சர் பொறுப்புகளை வகித்தார்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், தனிக் கட்சி துவங்கி, மீண்டும்,அ.தி.மு.க.,வில் இணைந்தார். பின், பா.ஜ., வில் இணைந்து, வாஜ்பாயின் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன், காங்., கட்சியில் சேர்ந்து, தற்போது, எம்.பி.,யாகி உள்ளார். சேலம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற பார்த்திபன், பா.ம.க., வீர வன்னியர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் இருந்தார்.
பின், தே.மு.தி.க.,வில் இணைந்து, 2011ல், மேட்டூர் சட்டசபை தொகுதியில், வெற்றி பெற்றார். பின், அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் தே.மு.தி.க., வில் அங்கம் வகித்து, தி.மு.க.,வில் இணைந்து, தற்போது, எம்.பி.,யாகி உள்ளார்.ஈரோடு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற கணேசமூர்த்தி, தி.மு.க.,வில் இருந்து, ம.தி.மு.க.,வில் இணைந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மீண்டும், தி.மு.க., உறுப்பினராக மாறி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற செல்லக்குமார், காங்., கட்சியில் விலகி, த.மா.கா.,வில் இணைந்து, 1996ல், எம்.எல்.ஏ., வாக இருந்தார். மீண்டும், காங்.,கில் இணைந்து, எம்.பி.,யாகி உள்ளார்.
அரக்கோணத்தில் வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க.,வில் அரசியல் வாழ்க்கையை துவக்கிய வர். பின், எம்.ஜி. ஆர்., கழகத்தில் இணைந்தார். வீர வன்னியர் பேரவையை துவக்கினார். தொடர்ந்து, தி.மு.க., வில் இணைந்து, எம்.பி., யாகி உள்ளார்.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற, செந்தில் பாலாஜி, 2011 - 14 வரை, ஜெயலலிதா அமைச்சரவை யில் இருந்தவர். அதன்பின், சசிகலா அணி, தினகரன் கட்சிக்கு தாவி, தி.மு.க.,வில் இணைந்து, எம்.எல்.ஏ., வாகி உள்ளார்.
ஒசூர் சட்டசபை தொகுதி யில் வெற்றி பெற்ற சத்யா, அ.தி.மு.க.,வில் கவுன்சிலராக வும், நகராட்சி தலைவராகவும் இருந்தவர். பின், தி.மு.க., வில் இணைந்து, எம்.எல்.ஏ., ஆகியுள்ளார்.
No comments:
Post a Comment