"பாஜகவை பொறுத்தவரை வாஜ்பாய் தோற்றவுடன் அவரை மாற்றிவிட்டார்கள், அத்வானி தோற்றவுடன் அவரை மாற்றிவிட்டார்கள், அது போல மோடி தோற்றவுடன் அவரையும் மாற்றி விடுவார்கள்"
இது தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் பலகட்சி மாறி தற்சமயம் காங்கிரஸில் அடைக்கலமாகியிருக்கும் அனுபவசாலி திருநாவுக்கரசர் கூறியது.
இவர் தெரிந்து பேசினாரா இல்லை தெரியாமல் பேசினாரோ வசைபாடுவதாக நினைத்து உண்மையை பேசிவிட்டார்.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்
இந்த கீதாசாரம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா பாஜகவுக்கு சாலப்பொருந்துகிறது. 1980ல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இதுவரை வாஜ்பாய், அத்வானி, ஜோஷி முதல் அமித்ஷா வரை பத்து தலைவர்களை பாஜக கண்டிருக்கிறது. ஆச்சர்யமாக அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி.
ஏறக்குறைய அதே காலகட்டத்தில் 1980ற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை பார்த்தோமானால் ஆறு தலைவர்களை கண்டிருக்கிறது. அதில் 1992-96 வரை நரசிம்ம ராவும் அடுத்த இரண்டு வருடம் சீதாராம் கேசரியும் தலைமையில் இருந்த ஆறு வருடங்களை கழித்து பார்த்தால் மீதி வருடங்களில் இந்திரா, ராஜிவ், சோனியா மற்றும் ராகுல் தலைமையில் கட்சி இயங்கி வந்திருக்கிறது.
கட்சி தலைமை மட்டுமின்றி சென்ற அமைச்சரைவை தேர்விலும் மாற்றத்தை பார்த்தோம். ஜோஷி, அத்வானி போன்றோரின் சேவைக்கு நன்றி கூறி கட்சி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டது. இந்த முறை இன்னும் சில சீனியர்களுக்கு ரிட்டயர்மெண்ட் வழங்கப்படலாம். நாளை மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இதே நிலைதான்.
அதுவே இப்போது காங்கிரஸ் கூட்டணி வென்றிருந்தால்? அதே மன்மோகன் சிங், ஜெகதீஷ் டைட்லர், மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், TR பாலுதான் அமைச்சரவை .. துறைகள் முன்னே பின்னே மாறலாம் தலைகள் மாறாது..
கொள்கை அரசியலுக்கும் குடும்ப அரசியலுக்கும் வேறுபாடு இது தான்.
செயல்திறனுள்ள புதியவர்களை இளையவர்களை கட்சியில் இணைத்து, பயிற்றுவித்து கட்சிக்கும் ஆட்சிக்கும் புது ரத்தம் பாய்ச்சுவதை பாஜக கடந்த பல வருடங்களாக செய்து கொண்டு வருகிறது. இதற்கு இன்றைக்கு மாபெரும் வெற்றியை அடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை விட வேறு உதாரணம் வேண்டாம்.
இவர் மட்டுமில்லாமல் பலரும் சத்தமில்லாமல் கட்சியில் இணைந்து, படிப்படியாக முன்னேறி கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். ஊறுகாய் மாமி என்று கேலிசெய்யப்படும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இப்படி வந்தவர் தான். 2008ல் கட்சியில் இணைந்தவர் செய்தி தொடர்பாளராகி, துணை அமைச்சராகி இப்போது ஒரு மிக முக்கிய கேபினட் அமைச்சராக வளர்ச்சி அடைந்துள்ளார்.
இன்னும் ராஜ்யவர்தன் ரத்தோர், நிதின் கட்கரி, பியூஸ் கோயல், சுரேஷ் பிரபு,ஸ்மிருதி இரானி என்று புதுமுகங்கள் பலரையும் அமைச்சர்களாக பார்த்தோம்.
இந்த முறை இன்னும் இளையவர்களை அடையாளம் கண்டு எம்பிக்களாகியுள்ளனர். அதில் தேஜஸ்வி சூர்யா எல்லாரும் அறிந்த முகமாக இருக்கிறார். அவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கி பயிற்சி அளித்தாலும் ஆச்சர்யமில்லை.
காங்கிரஸ் இன்றைக்கு கரைந்து வருவதற்கு மிக முக்கிய காரணம் இளரத்தம் இல்லாதது. சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா போல இருக்கும் ஒன்றிரண்டு இளைவர்களும் வாரிசுகள் எனும்போது மக்கள் மத்தியில் அது எடுபடவில்லை. கார்த்தி சிதம்பரம் எல்லாம் - கடவுளே...
பாஜகவை என் போன்றோர் கட்சி என்ற வளையத்துக்கு வெளியே இருந்து தொடர்ந்து ஆதரித்து வருவதற்கு காரணம் காங்கிரஸ் பாஜக இரண்டையும் எடைபோட்டு பார்க்கையில் அதிக நேர்மையாளர்கள், செயல் வீரர்கள் பாஜக பக்கம் இருப்பதாலும், அங்கே புதியவர்கள் இளையவர்கள் கவனம் பெறுவதாலும் தான்.
ஒருவேளை இது எதிர் தரப்பிலும் நடந்து விட்டால்.. காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு விட்டால்.. என் போன்றோர் ஆதரவு கண்டிப்பாக மாறி மாறி கிடைக்கும். இந்த தேசத்தை இணைப்பதில் காங்கிரசும் ஒரு முக்கிய சக்தியாக ஒரு காலத்தில் இருந்தது என்பதை மறக்கவில்லை, மறக்கவும் கூடாது. இரு தேசிய கட்சிகள் அவசியம் தேவை.
2024ல் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தான் பிரதமர் போட்டியில் இல்லை என்பதை மோடி இப்போதே தெளிவுபடுத்துவிட்டார். அடுத்த தலைமையை தயார் செய்துவிட்டு தான் போவார், சந்தேகமில்லை.
இன்னொரு பக்கம் என் வாரிசு அரசியலுக்கு வராது என்று நான்காம் தலைமுறை அரசியல் வாரிசு பிரியங்கா கூறிக்கொண்டிருக்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறது.
அதோடு ஒவ்வொரு தேர்தலில் தோற்கும் போதும் சோனியாவுக்கும், ராகுலுக்கு அந்த தோல்விக்கும் சம்பந்தமில்லை என்று குலாம் நபி ஆசாத் போன்றோர் நிரூபிக்க முயல்வதும்..ராஜினாமா நாடகங்களும் இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுக்கின்றன என்பதை காங்கிரஸ் தலைமை உணரவேண்டும்.
அமித் ஷாவை போல ஒருவர் காங்கிரஸுக்கு வேண்டும் என்று மெஹபூபா முப்தி சமீபத்தில் கூறியிருந்தார். அவர் போன்றவர் மட்டுமல்ல.. கட்சியிலும்,ஆட்சியிலும் பாஜக கொண்டுவரும் மாற்றங்களையும் காங்கிரஸ் பாடமாக கொள்ளவேண்டும். கட்சிக்கு புது முகங்கள், புது மூளைகள், புதிய தலைமை அவசிய அவசர தேவை.
ரிலே ரேஸில் அடுத்தவரிடம் Baton ஐ ஒப்படைக்காமல் ஒருவரே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தால் விரைவில் சோர்வாகி வெற்றியை கோட்டைவிடுவர். காங்கிரஸ் கட்சியில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது.
மாற்றம் ஒன்று தான் மாறாதது. அதை ஏற்கும் அமைப்பு தான் தாக்குப்பிடித்து நீடிக்க முடியும். பழையன கழிதலும் புதியன புகுதலும் அரசியலுக்கும் பொருந்தும். கற்றுக்கொள்ளுமா காங்கிரஸ்?
No comments:
Post a Comment