மாதந்தோறும் வருகிற பிரதோஷமும் அந்த பூஜையும் வழிபாடும், நமக்கு உரமூட்டக் கூடியவை. வளம் தரக்கூடியவை. அப்படி இருக்க இன்று குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில் வருகிற பிரதோஷம்... உயிர்ப்பானது. இரட்டிப்பானது. ஆகவே இந்த நாள் அற்புதமான நாள்.
அமோகமான நாள். இந்த குருவாரத்தில், வியாழ பகவானுக்கு உரிய சிறப்பானதொரு நாளில், பிரதோஷ வழிபாடு செய்வது, மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது உறுதி. பிரதோஷ வேளையில்... சிவாலயம் செல்வோம். அங்கே பிரதோஷ நாயகனான நந்திதேவரையும் சிவனாரையும் தரிசிப்போம். அப்படியேவா திரும்பிவிடுவோம்?
பிராகாரத்தில் தெற்குப் பார்த்து காட்சி தரும், குரு வடிவில் வீற்றிருந்து, அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிப்போம். பிரார்த்திப்போம்.

அதுமட்டுமா. அப்படியே பிராகாரச் சுற்றை நிறைவு செய்யும் விதமாக நவக்கிரக சந்நிதி அமைந்திருக்கும். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து வேண்டுவோம்.
அங்கே, குருப்பெயர்ச்சிக்கு உரிய நாயகனான, குரு பகவான் அதாவது வியாழ பகவான், நம்மைக் கவனித்துக் கொண்டே இருப்பார்.
ஆக... பிரதோஷம் எனும் சிவமகிழ்வுக்கான பூஜையில் கலந்து கொண்டதை, நந்திதேவர் சிவனுக்குச் சொல்லிவிடுவார். சிவனார், நம்மை கவனித்து வைத்து, அருள்பாலிப்பார்.
சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் குரு தட்சிணாமூர்த்தியின் அருளும் ஞானமும் வியாழ பகவானான குருபகவானின் பேரருளும் நமக்குக் கிடைக்கிற அற்புதமான் நாள்.
இந்த பிரதோஷ பூஜைக்கு நீங்கள் தருகிற அபிஷேகப் பொருட்களான வில்வமாகட்டும்... அரளியாகட்டும்... எதுவாக இருந்தாலும், உங்களுக்கு செல்வமாக, ஞானமாக, யோகமாக, உத்தியோகமாக, நிம்மதியாக, நிறைந்த மனதாக... கிடைத்தே தீரும்.
குருவார பிரதோஷத்தை தரிசியுங்கள். குருயோகம் பெறுவீர்கள்.
No comments:
Post a Comment