ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் 'அப்ரூவர்' ஆக மாறிய இந்திராணி முகர்ஜியை வருகிற 23ல் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் இந்திராணி முகர்ஜி. இவரது கணவர் பீட்டர் முகர்ஜி. இவர்கள் இருவரும் ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். அந்த நிறுவனத்துக்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை முறைகேடாக பெற்றது தொடர்பாக இவர்கள் மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அந்த முதலீட்டை முறைகேடாக பெற்று தர அப்போதைய மத்திய நிதி அமைச்சரும் காங்., மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாக அவர் மீதும் சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை டில்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்திராணியின் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியும், பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள பைக்குலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் தான் அப்ரூவராக மாற விரும்புவதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்தார். இதையடுத்து அவரை வருகிற 23ல் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மும்பை சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிடுமாறு சி.பி.ஐ., சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு டில்லி நீதி மன்ற நீதிபதி ஜே.சி.ஜகடேல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ''ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜியை வருகிற 23ல் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை சி.பி.ஐ., கஸ்டடிக்கு மாற்றுமாறு மும்பை பைக்குலா சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து 'வருகிற 23ல் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள இந்திராணி ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு தொடர்பான உண்மைகளை கூறினால் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு அது மேலும் பல சிக்கல்களை உருவாக்கும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment