நடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-
சென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போர்ட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.
சென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.
அங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
எனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது.
அந்த நாட்களை என் வாழ்வாளில் மறக்க முடியாது. ரஜினிகாந்துடன் நான் நடித்த ‘பாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பு முட்டுக்காடு பகுதியில் நடைபெற்ற போது ரசிகர்களும், சுற்றுலா பயணிகளும் பெரிய அளவில் திரண்டிருந்தனர். அதேபோல ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு பாடல் காட்சி போட்கிளப் பகுதியில் நடந்த போதும் அப்பகுதி பொதுமக்கள் தெரு முழுவதும் திரண்டு நின்று பார்த்தனர். இதை என்னால் மறக்க முடியாது.
ஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் பெரிய செல்வாக்கு இருந்தது. இது எனக்கு கிடைத்த அரியாசனமாக உணர்ந்தேன். நான் சென்னையில் நீண்ட காலமாக வசித்த போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.
ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அவர் காரில் கடந்து செல்வதை பார்க்க தெருக்களில் மக்கள் அலை போல திரண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தினமும் காலை 9.30 மணிக்கு மியூசிக் அகாடமி ரோட்டில் காரில் செல்வார். நானும் மக்களுடன் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன். அவர் மதியம் சாப்பிட செல்லும் போது சாலையின் எதிர் திசைக்கு சென்று அவரை பார்ப்பேன்.
இது சில வாரங்கள் சென்று கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அவர், ஒரு நாள் அவரது மெய்க்காப்பாளர்களை அனுப்பி என்னை யார்? என விசாரித்துள்ளார்.
எனக்கு அமைதி தேவை என்றால் உடனே மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். தி.நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் மறக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment