Friday, May 17, 2019

ஓடும் ரெயிலில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய கொள்ளையன்

தமிழகத்தில் ஓடும் ரெயில்களில் இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரெயில்களில் ஒரு கும்பல் தொடர்ச்சியாக கைவரிசை காட்டியது. பயணிகள் போல சொகுசு பெட்டிகளில் பயணித்து நள்ளிரவில் பயணிகளின் உடமைகளை எடுத்து சென்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ரெயில் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

நள்ளிரவில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க வியூகம் வகுத்தனர்.

சீருடையில் சென்றால் கொள்ளையர்கள் உஷாராகி தப்பி விடக்கூடும் என்பதால் மாறுவேடத்தில் சென்று போலீசார் கண்காணித்தனர். போலீஸ்காரர் ஒருவரும், பெண் போலீஸ் ஒருவரும் கணவன்-மனைவி போல ரெயிலில் பயணித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து சென்ற ரெயில் ஒன்றில் பயணி ஒருவரின் பையை தூக்கி கொண்டு நள்ளிரவில் தப்ப முயன்ற வாலிபர் ஒருவர் தப்ப முயன்றார். அவரை மாறுவேடத்தில் நின்ற போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவனது பெயர் சாகுல்அமீது. கேரளாவைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது.

சாகுல்அமீது மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளான். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து ரெயில்களில் கைவரிசை காட்டி வந்துள்ளான்.

ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிகள் தூங்கும்போது கொள்ளையடிப்பான். குறிப்பாக பெண்களின் கை பையை நைசாக எடுத்து சென்று விடுவான்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் சாகுல்அமீது ரெயில்களில் கொள்ளையடித்து வந்துள்ளான். கொள்ளையடித்த நகைகளை திருச்சூர், மும்பை நகை கடைகளில் விற்பனை செய்துள்ளான். அதன் மூலம் கிடைத்த ரூ.1 கோடியை வைத்து மலேசியாவில் ஓட்டல் வாங்கி உள்ளான்.

கொள்ளையன் சாகுல் அமீதுவுக்கு 6 மொழிகள் தெரியும். 2 மனைவிகள் உள்ளனர். இவன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாக்பூர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளான். வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடியிலும் ஈடுபட்டுள்ளான். பேச்சு திறமையால் மற்றவர்களை எளிதில் ஏமாற்றி விடுவான்.

தமிழகத்தில் 30 பயணிகளிடம் சாகுல்அமீது கை வரிசை காட்டி உள்ளான். கொள்ளையன் சாகுல் அமீதிடமிருந்து 110 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.


இது தவிர பல்வேறு வெளிநாடுகளுக்கும் கொள்ளையன் சாகுல்அமீது சுற்றுலா சென்றுள்ளான். தமிழகத்தை போல வேறு மாநிலங்களிலும் இவன் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளையன் பிடிபட்டது பற்றி ரெயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சென்னை சென்ட்ரலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ரெயில் பயணத்தின்போது பயணிகள் சந்தேக நபர்கள் நடமாடினால் அதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் பயணிகளின் பாதுகாப்புக்காக செயலிகளையும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனையும் பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்கு உதவிய ரெயில்வே போலீசாருக்கும் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...