தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பின்னரும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசு பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதனால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

லோக்சபா தேர்தல் தேதி, மார்ச், 10ல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல் தேர்தல் நடந்தது.நிறுத்தம்தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், அனைத்து துறை அதிகாரிகளும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். எனவே, தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை, அதிகாரிகள் செயல்படுத்தலாம். ஆனால், புதிய திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. இதன் காரணமாக, மார்ச், 10ல் இருந்து, புதிதாக அரசு பணிகள் எதுவும் துவக்கப்படவில்லை.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட, பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், பருவ மழை பொய்த்ததன் காரண மாக, கடும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில், மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர்.தேர்தல் நடத்தை விதி காரணமாக, குடிநீர் திட்டப் பணிகளை துவக்க முடியாத நிலை உள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்தபின், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என, அரசு எதிர்பார்த்தது.ஆனால், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படவில்லை. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இதனால், வரும், 23ம் தேதி வரை, அரசு செயல்பட முடியாத நிலை உள்ளது.
தற்போது, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாணவ - மாணவியர் உயர் கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவை தேவை.அவற்றை பெற, ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், பெரும்பாலான தாலுகா அலுவலகங்களில், ஊழியர்கள் தேர்தல் பணியில் இருப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர். இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, தேர்தல்ஆணையத்தின் அனுமதி பெறாமல், புதிய, 'டெண்டர்' விட முடியாது. எனவே, அனுமதி கேட்டு, கோப்புகளை அனுப்பினாலும், ஆணையத்தின் அனுமதி கிடைக்க, காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஒடிசாவில் கரை கடந்த, 'போனி' புயல், முதலில் தமிழகத்தை தாக்கக்கூடும் என, தகவல் பரவியது. அப்போது, அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, தேர்தல் ஆணையத்திற்கு, தலைமை செயலர் கடிதம் அனுப்பினார். அனுமதி கிடைத்தபோது, போனி புயல், தமிழகத்தை கடந்து, ஒடிசாவை நெருங்கியிருந்தது.தண்ணீர் பந்தல்கோடை வந்தால், அரசியல் கட்சிகள் சார்பில், மக்கள் தாகம் தீர்க்க, தண்ணீர் பந்தல் திறக்கப்படும். இம்முறை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தண்ணீர் பந்தல் திறக்க முடியவில்லை. ஏப்., 18 ஓட்டுப்பதிவு முடிந்த பின், தண்ணீர் பந்தல் திறக்க, அனுமதி கோரி, அ.தி.மு.க., சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது; இதுவரை, அனுமதி கிடைக்கவில்லை.
ஒவ்வொரு பணிக்கும், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டி இருப்பதால், அதிகாரிகள் செயல்பட முடியாமல் உள்ளனர்; நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எப்போது, ஓட்டு எண்ணிக்கை முடியும்... தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், அனைத்து தரப்பினரும் உள்ளனர்.
No comments:
Post a Comment