Monday, May 20, 2019

சிறந்து விளங்கிய மகான் அவர்!

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி.
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன்.
கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.
நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும்.
ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கி றது. இதெல்லாம் இறைவன் திரு விளையாட்டு.
செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள்.
ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.
கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.
அதுவும் எப்படி? அற்புத மான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்.
அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும்.
"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'
மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு.
"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான்.
அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.
அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.
அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம்.
ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி.
அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.
அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.
பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள்.
ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார்.
பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்.
""ஐயா... தர்மப் பிரபுவே...''
ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?
""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''
""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன்.
""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...''
""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.
தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார்.
ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.
"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...''
அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன்.
ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.
""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.
அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான்.
அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.
""பவதி... பிக்ஷாம் தேஹி...''
ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.
""என்ன வேண்டும் சுவாமி?''
""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை.
ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா...
உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''
"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.
""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே?
அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.
"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'
சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி.
அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.
ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.
""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.
கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.
சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.
அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.
உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.
மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.
""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''
சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?'
கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்.
""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-
விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள்.
ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக் குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார்.
அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது?
மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.
மறுநாள் காலை!
கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.
""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.
ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.
""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''
""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''
கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார்.
அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.
""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''
""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்....
நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''
ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.!
கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.
ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.
அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.
"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?
போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள்.
இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.
பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....'
புரந்தரதாசன்ஸ்ரீ னிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார்.
ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார்.
தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.
அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார்.
கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.
சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.
நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார்.
ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே.
அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.
அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...