இன்றைய தி ஹிந்து பேப்பரில் முதல்பக்க செய்தி...லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்டின் கணக்கில் காட்டாத வருமானமாக ஆயிரம் கோடி ரூபாய் வைத்துள்ளதாக வருமானம் வரித்துறையிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார் இதைத்தாண்டி சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் வெள்ளி போன்ற ஆபரண நகைகள் கணக்கில் காட்டாமல் வைத்துள்ளது தெரியவந்துள்ளது இவர்களுக்கெல்லாம் இந்த அளவில், அதுவும் குறுகிய காலத்தில் எப்படி அபரிமிதமான சொத்து வருமானம் இவற்றையெல்லாம் சேர்க்க முடிகிறது?
உண்மையில் இன்று இந்த செய்தியை பார்த்தவுடன் மனது வெம்பி விட்டது.. நல்ல படிப்பு படித்து, நல்ல உயர்ந்த நிலையை அடையும் ஒரு சராசரி மனிதனால், அவன் எந்த அளவுக்கு உழைத்தாலும்,வாழ்க்கை முழுவதும் வீட்டுக் கடன், கார் கடன், படிப்பு கடன், கல்யாண கடன், மருத்துவ செலவு என்று இப்படி பலபல கடன்களை அடைப்பதிலேயே பெரும்பாலான வாழ்க்கை கழிந்துவிடுகிறது.. எந்த வித படிப்பும் இல்லாமல், ஏமாற்றுவதையே உயிர் மூச்சாக கொண்டு அரசியல்வாதிகளையும் போலீஸ் உயர் அதிகாரிகளையும் கைகளில் போட்டுக்கொண்டு, முட்டாள் ஜனங்களின் அறியாமையை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க முடிகிறது என்றால் என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
இந்த மனிதரை அரவணைக்காத அரசியல் கட்சிகளே இங்கு இல்லை என்று சொல்லலாம். எல்லா கட்சியினரும் தங்கள் பங்கிற்கு இவரிடம் இருந்து பணத்தை கறந்து இருக்கின்றனர். யாரும் இங்கு யோக்கியன் இல்லை ஒரு சராசரி மனிதனிடம் இருக்கும் நேர்மை இவர்களிடம் கிஞ்சித்தும் கிடையாது.
No comments:
Post a Comment