Thursday, May 23, 2019

ஜெகன்மோகன் அலையில் சந்திரபாபு சின்னாபின்னம்.

தேசிய அளவிலான அரசியலில், 'கிங் மேக்கராக' வேண்டும் என்று, காயை நகர்த்தி வந்த, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு, ஆந்திராவில் மரண அடி விழுந்துள்ளது. லோக்சபா மற்றும் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., அந்தக் கட்சியை துவம்சம் செய்தது. 

  ஜெகன்மோகன் அலையில் சந்திரபாபு சின்னாபின்னம்


லோக்சபாதேர்தலோடு நடந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், ஆந்திராவில் மட்டுமே ஆளுங்கட்சி தோல்வி அடைந்து உள்ளது. அதே நேரத்தில், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா சட்டசபைகளை, ஆளும் கட்சிகள் தக்க வைத்தன. நாட்டிலேயே தொடர்ந்து நீண்டகாலம் முதல்வராக இருந்த, சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் சாதனைக்கு முடிவு ஏற்பட்டது.



லோக்சபா தேர்தலோடு, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில், ஆந்திரா மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான போராட்டங்கள் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தேசிய அளவிலான அரசியல் காய்நகர்த்தல்கள்.

சிறப்பு அந்தஸ்து


கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த, சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி, அப்போது சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அப்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு தேர்தல் நடந்தது. 



ஜூனில் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்தது.அதன்படி ஆந்திர சட்டசபைக்கான, 175 தொகுதிகளில், தெலுங்கு தேசம், 102 தொகுதிகளில் வென்றது. ஜெகன்மோகன் ரெட்டியின் யுவஜனா ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் எனப்படும், ஒய்.எஸ்.ஆர்.காங்., 67 தொகுதிகளில் வென்றது. பா.ஜ., 4; காங்கிரஸ் மற்றும் சுயேச்சை, தலா ஒரு தொகுதிகளில் வென்றன.தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதால், 'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்'என, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள், மத்திய அரசிடம் கோரி வந்தன. 



இந்த விவகாரத்தில், ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி முந்திக் கொண்டது. அக்கட்சியின் லோக்சபா, எம்.பி.,க்கள் ஐந்து பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் வெளியேறியது. 


கடந்த சில மாதங்களாக பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்த சந்திரபாபு நாயுடு, காங்., தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். தேசிய அரசியலில், தன்னை ஒரு 'கிங் மேக்கர்' என,உருவகப்படுத்தவும் அவர் முயன்றார்.அதே நேரத்தில், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, ஜெகன் மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும், 3,648 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்தார்.

ஆலோசனை


அதற்கான பலன், இந்தத் தேர்தலில் வெளிப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள, 175 சட்டசபை தொகுதிகளில், ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி, 147 இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம், 27 இடங்களில் வென்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பிரபல நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனா கட்சி, ஒரு தொகுதியில் வென்றுள்ளது.


மாநிலத்தில் உள்ள, 25 லோக்சபா தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்., வென்றுள்ளது. தேசிய அளவில் எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முயன்ற, சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், தெலுங்கு தேசம், 15; பா.ஜ., 2; ஒய்.எஸ்.ஆர்.காங்., எட்டு இடங்களில் வென்றன.



இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின், புதிய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்,நாளை, 
அமராவதியில் நடக்கிறது. அதில், கட்சியின் சட்டசபை தலைவராகவும், முதல்வராகவும், ஜெகன்மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். வரும், 30ல், திருப்பதியில் அவர் பதவிஏற்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்தல் முன்னிலை தெரியவந்ததும், கட்சியின் மூத்த தலைவர்களுடன், ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். விசாகா சாரதா பீடத்தின் ஜீயர், சுவாமி ஸ்வரூபானந்தேந்திராவைச் சந்தித்து ஆசி பெற்றார்.
'நடை' நாயகன்ஜெகன்!



ஆந்திராவின் புதிய முதல்வராகிறார், ஜெகன் மோகன் ரெட்டி, 46. அரசியல் வாழ்க்கையில், பல்வேறு தடைகளை தகர்த்த இவர், இன்று உச்சம் தொட்டுள்ளார்.கடப்பா மாவட்டம், புலிவெந்துலா வில், 1972 ல் பிறந்தார். காங்., சார்பில், முதல்வராக இருந்த இவரது தந்தை,ராஜசேகர ரெட்டி, 2009ல், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.


இதற்கு பின், காங்., தலைமைக்கும், ஜெகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், 16மாதங்கள், சிறை தண்டனை அனுபவித்தார்.பின், 2011ல், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியை துவக்கினார். 2014 சட்டசபை தேர்லில், 67 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார். 2017, நவ. 6ல், மாநிலம் முழுவதும் நீண்ட நடைபயணத்தை துவக்கினார். 341 நாட்களில், 3,648 கி.மீ., துாரம் நடந்து சென்று, மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.


தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோரின் 'ஐ-பாக்' நிறுவனத்தின் உதவியை நாடினார். ஐதராபாதில், 'ஹை-டெக்' தேர்தல் அலுவலகத்தை, 'ஐ-பாக்' அமைத்தது. சந்திரபாபு நாயுடுவின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி பதிலடி கொடுத்தது. 'ஓட்டுகளை எண்ணத் தேவையில்லை; ஜெகன் வெற்றி பெறுவது உறுதி' என 'ஐ-பாக்' நிறுவனம், ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே அறிவித்தது. இவர்களது கணிப்பு உண்மையாகி உள்ளது. ஆந்திராவின் அசைக்க முடியாத நாயகனாக ஜெகன் உருவெடுத்துள்ளார்.





நடிகை ரோஜா மீண்டும் வெற்றி



ஆந்திராவின் நகரி சட்டசபை தொகுதியில், நடிகை ரோஜா, இரண்டாவது முறையாக, ஒய்.எஸ்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்டு, 2,681 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சித்துார் மாவட்டம், நகரி சட்டசபை தொகுதியில், 2014ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நடிகை ரோஜா, ஒய்.எஸ்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


அவர், இரண்டாவது முறையாக, நகரி சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டி யிட்டார். இத்தொகுதியில், தெலுங்கு தேச கட்சி வேட்பாளர், ஜி.பானு பிரகாசைவிட, 2,681 ஓட்டுகள் அதிகம் பெற்று, நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார்.ரோஜா, 79 ஆயிரத்து 499 ஓட்டுகள், தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் ஜி.பானுபிரகாஷ், 76 ஆயிரத்து 818 ஓட்டுகள் பெற்றனர்.காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்பட, 12 வேட்பாளர்கள் 'டிபாசிட்' இழந்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...