Saturday, May 18, 2019

அதிரடி! தேர்தல் முடிவுக்குப் பின், இ.பி.எஸ்., கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றம் செய்ய முடிவு முன்கூட்டியே அறிந்ததால் அமைச்சர்கள் கலக்கம்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஆட்சி யிலும், கட்சியிலும், அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள, முதல்வர், இ.பி.எஸ்., முடிவு செய்துள்ளார். இதை மோப்பம் பிடித்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், கலக்கத்தில் உள்ளனர். அதே நேரம், பதவியில் இல்லாதவர்கள், பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
கட்சி, ஆட்சி,மாற்றம் ,தேர்தல் முடிவு, இ.பி.எஸ்., அதிரடி


நாடு முழுவதும், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, வரும், 23ல் நடக்க உள்ளது. தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகள், 22 சட்டசபை தொகுதிகளுக்கும்; புதுச்சேரியில், ஒரு லோக்சபா, ஒரு சட்ட சபை தொகுதிக்கும், ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
ஸ்டாலின் நம்பிக்கை
தமிழகத்தை பொறுத்தவரை, இடைத்தேர்தல் நடக்கும், 22 சட்டசபை தொகுதிகளிலும், வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் நம்பிக்கை யுடன் உள்ளார். அவரது கட்சி நிர்வாகிகளும், 'தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டாவது நாளில், பதவியேற்பு விழா நடக்கும்' என, கூறி வருகின்றனர்.


ஆனால், 'ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது; ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் அள விற்கு, இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும்' என,அ.தி.மு.க.,தலைமை நம்புகிறது. 'குறைந்தது,10 சட்டசபை தொகுதி களில், வெற்றி கிடைக்கும்' என, அவர்கள் நம்புகின்றனர். அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வரும், 'ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது' என, கூறி உள்ளார்.


இடைத்தேர்தலில், எத்தனை தொகுதிகள் கிடைக்கிறதோ, அதை வைத்து, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, பல்வேறு அதிரடி நடவடிக்கை களை எடுக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இதில், சட்டசபை உரிமை மீறல் பிரச்னையில் சிக்கியுள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, 'சஸ்பெண்ட்' செய்வதும் ஒரு திட்டம்.ஆட்சியை தக்க வைத்த பின், ஆட்சியிலும், கட்சியிலும், பல மாற்றங்களை செய்யவும், முதல்வர் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. 



தேர்தலில் சில அமைச்சர்கள், கட்சி தலைமை வழங்கிய பணத்தை, முறையாக செலவிடாமல், பதுக்கிக் கொண்டதாகவும், ஈடுபாட்டுடன் தேர்தல் பணியாற்றவில்லை எனவும், அ.தி.மு.க., தலைமைக்கு, புகார்கள் வந்துள்ளன.சில அமைச்சர் கள், அ.ம.மு.க.,விற்கு மறைமுகமாக உதவிகளை செய்துள்ளனர். இது குறித்த தகவல்களும், முதல்வருக்கு வந்துள்ளன.


அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து, 'கழற்றி' விட்டு, புதிய நபர்களை அமைச்சர்களாக நியமிக்க, முதல்வர் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இதனால், பணத்தை பதுக்கி, தேர்தல் பணி செய்யாமலிருந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். அதே நேரம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மாற்றப் பட்டால், தங்களுக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பதவி இல்லாதவர்கள் உள்ளனர்.
10 தொகுதிகள்
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, குறைந்தது, 10 சட்டசபை தொகுதிகளில், வெற்றி பெற்றாக வேண்டும். எனவே, முழு ஈடுபாட்டோடு தேர்தல் பணி யாற்றும்படி, அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அவரும், அனைத்து தொகுதி களுக்கும், திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.ஆனால், சில அமைச்சர்கள், தேர்தல் பணியில் ஈடுபாடு காட்டவில்லை. 


யாரெல்லாம் தேர்தல் பணியாற்றவில்லை; பணத்தை பதுக்கிக் கொண்டனர் என்ற விபரத்தை, உளவுத்துறை போலீசார், முதல்வருக்கு தெரிவித்து உள்ளனர். எனவே, தேர்தல் முடிவுக்கு பின், அவர்களை மாற்ற, முதல்வர் திட்டமிட்டுள்ளார்.பணம் பதுக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான, பெண் அமைச்சர் உட்பட சிலர், முதல்வரை சந்திக்க, நேரம் கேட்டுள்ளனர். அவர்களிடம், 'தேர்தல் முடிந்த பிறகு பார்க்கிறேன்' என, முதல்வர் கூறியுள்ளார். 


முதல்வர் கோபமாக இருப்பதை அறிந்து, பணம் பதுக்கிய அமைச்சர்களில் சிலர், பணத்தை திரும்ப தர முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.சிலர் இன்னமும்,'ஆட்சியை தக்க வைக்க முடிகிறதா என பார்ப்போம்' என்ற நினைப்பில் உள்ளனர். எனவே, தேர்தலுக்கு பின், ஆட்சியிலும், கட்சியிலும், அதிரடி மாற்றங்கள் ஏற்பட, வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...