இரட்டை குடியுரிமை விவகாரத்தில், லோக்சபா தேர்தலில் போட்டியிட, ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என, கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

'காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் குடியுரிமையை பெற்றுள்ளார்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சமீபத்தில் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியை சேர்ந்த, ஜெய் பகவான் கோயல் மற்றும் சந்திர பிரகாஷ் தியாகி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.
அதன் விபரம்: ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த நிறுவனமொன்றில், ராகுல் பங்குதாரராக உள்ளார். அந்த நிறுவனத்தின், 2005 - 06 ஆண்டறிக்கையில், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என, குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இரட்டை குடியுரிமை பெற்ற ராகுலை, லோக்சபா தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'ஏதோ ஒரு நிறுவனத்தின் ஒரு அறிக்கையில், ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனக் கூறி இருந்தால், அவர் அந்நாட்டு குடிமகன் ஆகிவிடுவாரா? 'ஒருவேளை, அவரே பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என, 123 கோடி இந்தியர்களும் கூறினால், உங்கள் நிலை என்ன?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment