Monday, November 10, 2014

பிச்சை புகினும் கற்கை நன்றே!இன்று (நவ.11) தேசிய கல்வி தினம்

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டிலுள்ள கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றமும் அவர் பெறும் வாழ்க்கையும் மேம்பட, கல்வி உதவுகிறது. கல்வி கற்றால் தான் தனக்கும், தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்ய முடியும். எனவே தான், 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என நன்னுால் அறிவுறுத்துகிறது.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மிகச்சிறந்த கல்வியாளரும், முதல் கல்வி அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவ., 11ம் தேதி அவரை கவுரவிக்கும் பொருட்டு 'தேசிய கல்வி தினமாக' கொண்டாடப்படுகிறது. அபுல் கலாம் ஆசாத்தை, 'கல்விப் பேரரசு' என மகாத்மா காந்தி அழைத்தார். 'எழுத்தறிவின்றி ஒரு குடிமகன் இருந்தாலும், அந்நாடு உண்மையான மக்களாட்சி பெற்றதாகாது' என்பது ஆசாத்தின் கருத்து.
கல்வி ஒரு அற்புத மந்திரம் :கல்வி... அதனிடம் எது வேண்டும் எனக் கூறினாலும் உடனே கிடைக்கும். படிப்பும் எழுத்துமிருந்தால் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல வேலைவாய்ப்பு மட்டுமின்றி புதிய உலகையும் படைக்கலாம். எழுத்தறிவு பெற்றவன், புதிய பிறவி பெற்றவன் ஆகிறான். மின்சக்தி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும் படித்து வாழ்வில் முன்னேறிய தலைவர்கள் உண்டு. தினமும் பல கி.மீ., துாரம் நடந்து பள்ளி சென்று கல்வி பயின்று செழிப்பு எய்தியோர் இன்றும் உள்ளனர். இன்று இருக்கும் ஆரம்பக் கல்வி பலருக்கு அன்று கிடைக்கவில்லை. ஆனால் இன்றும் கல்வி பயிலாதவர் உள்ளனர். அடிப்படை கல்வி ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

சட்டம் சொல்வது என்ன?

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 30ல் சிறுபான்மையினர் கல்விச்சாலைகளை வைத்து நிர்வாகம் செய்ய சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இதற்கு அரசு உதவியும் அளிக்கப்படுகிறது. தவறாக நடக்கும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் மீது அரசு, அதிகாரத்தின் மூலம் தரமான கல்வி அளிப்பதை உறுதி செய்யும். நெறிமுறைகளை வலியுறுத்தவும் ஆசிரியர்கள், பணியாளர்களின் உரிமைகளை காக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு 41ல், அரசு தன் உதவி மூலம் கல்வி உரிமை, பணி உரிமை மற்றும் பல உரிமைகளை வழங்க வகை செய்கிறது. பிரிவு 45ல், 'எல்லா குழந்தைக்கும் 14 வயது பூர்த்தியாகும் வரை கல்வி அளித்திட அரசு வழிவகை செய்ய வேண்டும்' என உள்ளது. அரசியல் அமைப்பு சட்டமே கட்டாய கல்விக்கு அடிகோலி உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி பயில வேண்டும். 1949 முதல் பத்தாண்டுகளில் இதை நிறைவேற்ற வேண்டும் என்று சான்றோர் கூறினர். ஆனால் இவ்வுரிமை 1.4.2010ல் தான் நடைமுறைக்கு வந்தது. சட்டப்பிரிவு 46, பிற்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தேவையான கல்வி வசதிகளை வழங்க வழி வகை செய்கிறது. மற்றவர்களை குறை கூறாமல் நாம் கல்வியை நாடிச் சென்று கற்க வேண்டும். நுால்கள் பல கற்க கற்க அறிவு பெருகும்.

ஆசாத் கனவு நனவானது :

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்கு பிறகு கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் எழுத்தறிவு இல்லாத ஒரு குடிமகன் கூட இல்லை என்ற நிலையை எட்டவும், நாம் இந்தியர் என்று தலைநிமிர்ந்து நிற்கவும், நம் நாடு 2020ல் வல்லரசாக உயரவும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.கல்வி உரிமை சட்டத்தில் சில முக்கிய ஷரத்துகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன. கல்வி பயிலும் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது. மாணவர்களுடன் அன்புடன் பழக வேண்டும். பெண் குழந்தைகள் என்றும், பிற்பட்ட வகுப்பினர் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்றும் பாகுபாடு காட்டக் கூடாது. 
பள்ளியை சரியான நேரத்திற்கு திறக்க வேண்டும். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும். எந்தக்குழந்தையையும் பள்ளியில் சேர்க்காமல் நிராகரிக்க கூடாது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவேண்டும். இப்படி பல ஷரத்துகள் உள்ளன.இதனால் மட்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உரிமை கிடைத்து விடும் என கருதக் கூடாது. நம் வேலை, உரிமை, கனவுகள் இன்றும் முடிவடையவில்லை. இச்சட்டம் இன்னும் அதிகம் அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட வேண்டும்.

தாய்மொழி கல்வி :

ஜப்பான் பள்ளிகளில் முதலில் கற்பிக்கப்படுவது ஜப்பான் என்ற சொல்தான். அதுவும் தாய் மொழியில்! நாம் ஆங்கிலக்கல்வியில் மோகம் கொண்டுள்ளோம். ஜான் மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை இந்தியர்களை உடலால் இந்தியராகவும், உள்ளத்தால் ஆங்கிலேயர்களாகவும் மாற்றியது. 
தாய் மொழியில் கல்வி கற்பது சாலச்சிறந்தது.கற்க எளிமை, மொழி வளம், குறைந்த செலவு, உயர் கல்வி கற்க செலவு குறைவு மற்றும் பல வசதிகள் தாய் மொழிக்கல்வி மூலம் கிடைக்கும். உயர் தனிச் செம்மொழியாம் தமிழில் இல்லாத நுால்களே இல்லை. 'கணினி பயில சமஸ்கிருதம் தான் தாய்மொழி' என 'நாசா' விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
பல மொழியறிவு நல்லது. அதனினும் முக்கியமானது தாய் மொழி அறிவு. தொழில்நுட்பமும், ஆய்வுத்திறனும் தாய் மொழிக் கல்வியில் மிக சுலபம்.பிறமொழி கற்பதால் கூடுதல் நன்மை உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பெற்றோர் குழந்தைகளின் மனநிலை அறிந்து அவர்களை நெறிப்படுத்துவது நல்லது.
நல்ல கல்விக்கு நிறைந்த ஆர்வமும் அதிக கேள்வி கேட்கும் நிலையும் கட்டாயம் தேவை. மாணவர்கள், ஆசிரியரிடம் அதிகமாக, சரியான சிறந்த கேள்விகளை கேளுங்கள். அதற்கான பதிலையும் பெறுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி படியுங்கள். உங்கள் வாழ்வில் வளமான வாய்ப்புகளை கண்டுபிடியுங்கள். செயல் துணியும் வெற்றியும் உங்கள் கையில். அதற்கு கல்வி தான்உயிர்மூச்சு. கல்வியறிவு இல்லாதவர்கள் களர் நிலத்திற்கு ஒப்பாவர். அவர்களால் தங்களுக்கோ பிறருக்கோ எப்பயனும் கிடையாது.
கல்வி கற்பதால் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய பயம் மறையும். சுதந்திர மனப்பான்மை வளரும்; விசாலமான கண்ணோட்டம் பிறக்கும். மனதில் தன்னம்பிக்கை மலரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...