பழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம். தவறில்லை. ஆனால், பேச்சில் உள்ள ஆர்வம் அந்தப் பெருமைக்குக் காரணமான வரலாற்றுத் தடங்களை அழியாமல் பாதுகாக்கும் செயல் என்று வருகிறபோது எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் மனசு சோர்ந்துதான் போகிறது.
கால ஓட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி அவசியம்தான். ஆனால், ஒவ்வொரு சாதாரண ஊருக்குமேகூட ஒரு பின்னணியும் அதற்கென்றே ஒரு பிரத்தியேக வரலாறும் வடிவழகும் உண்டு. அது சிதைந்துவிடாமல் வளர்ச்சி அமைவதுதான் முறையாக இருக்கும். அதிலும் சென்னை மாதிரி ஒரு மாநகருக்கென்று இருக்கிற பிரத்தியேக அமைப்பும், தனித் தன்மையும் வரலாற்றுப் பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டியவை. இந்தச் சிறப்பு அம்சம் நகரின் நிதானமற்ற அசுர வளர்ச்சியாலும் பொறுப்பற்ற உள்நோக்கங்களாலும் பாதிக்கப்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை எந்த அளவுக்கு இருக்கிறது ?
இன்றைய சென்னை நானூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. 1639இல் ஆங்கிலேயக் கிழக்கு இந்திய கம்பெனி தனது பண்டகசாலைக்காகத் தமிழ்நாட்டின் வடகிழக்கில் வங்கக் கடலோரம் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டதிலிருந்து, மதராசப் பட்டினமாக அது உருவாகத் தொடங்கியது. முதலில் கறுப்பு ஊர் என்று இழிவாகவும் பிறகு பிரிட்டிஷ் பேரரசர் ஜார்ஜின் முடி சூட்டு விழாவை யொட்டி ஜார்ஜ் டவுன் என்று கௌரவ மாகவும் அழைக்கப்பட்ட பகுதி,நேட்டிவ்ஸ் என்று துச்சமாகப் பேசப்பட்ட மண்ணின் மைந்தர்களது வசிப்பிடமாக இருந்தது. இன்றைக்கும் அந்தப் பகுதியில் சாதிப் பெயர் நீக்கத்தின் விளைவாக தம்புத் தெரு லிங்கித் தெரு என்றெல்லாம் சுருங்கிப் போனதன் காரணவான்களான தம்புச் செட்டியும் லிங்கிச் செட்டியும் அன்று கும்பினியாருடன் வரவு செலவு செய்து கொடி கட்டிப் பறந்த வணிகப் பெருமக்கள். அவர்கள் தங்களைத் தம்புச் செட்டி, லிங்கிச் செட்டி என்றுதான் அழைத்துக்கொண்டார்கள். அதைப் பொருட்படுத்தாமல் சாதி மறுப்பு என்ற பெயரில் அவர்களின் பெயரை நம்மிஷ்டத்துக்குச் சுருக்கிவிடுவதும் நகரின் வரலாற்றுக்குச் சேதாரந்தான்.
அன்றைய மதராசப் பட்டினத்தில் ஆர்க்காடு நவாபுகளின் மேலாதிக்கம் செல்லாக் காசாகிவிட்ட போதிலும், கும்பினி கவர்னர்மார்களது விசேஷங்களின் போதெல்லாம் அவர்களது பிரசன்னமும் மக்கள் மத்தியில் பெருங்காயம் வைத்த டப்பாவாகச் செல்வாக்கும் ராஜ மரியாதைகளும் அவர்களுக்குச் சாத்தியமாகவே இருந்தன. இதற்கு அடையாளமாக நல்ல வேளையாய் இன்றளவும் பெயர் மாற்றப்படாமல் நீடிக்கும் வாலாஜா சாலையும், மெரீனா கடற்கரை ஓரம் இந்தோ ஸார்ஸெனிக் கட்டிடக் கலை பாணியில் நீலக் கடலை நிமிர்ந்து நோக்கியவாறு எடுப்பாக விளங்கும் சிவப்பு நிறக் கட்டிடங்களும் இருந்து கொண்டிருக்கின்றன.
எனினும், சென்னையின் பாரம்பரியமான கட்டிடங்கள் ஒவ்வொன்றாக மறைந்துவருகின்றன. சென்னைக்கே அடையாளம்போல் இருந்த மூர் மார்க்கெட் கட்டிடமும் மவுண்ட் ரோடில் இருந்த ஸ்பென்ஸர் கட்டிடமும் இப்போது இல்லை. இக்கட்டிடங்கள் அவை இருந்த பகுதிக்கே ஓர் அழகும் கம்பீரமும் சேர்த்தவை. அவற்றுக்குப் பதிலாக இன்று எழுப்பப்பட்டுள்ள மாற்றுக் கட்டிடங்கள் வெறும் வணிகக் கண்ணோட்டத்தில் உருவானவை.
சென்னையின் பாரம்பரியப் பெருமை பேசும் எஞ்சியுள்ள ஒரு சில கட்டிடங்களில் கடைசியாக அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பது,சேப்பாக்கம் அரண்மனையென்றும் கலாஸ்மஹால் என்றும் மதராசப்பட்டினத்தில் அறியப்பட்டு இன்று தமிழ்நாடு மாநில அரசின் பொதுப் பணித்துறை அலுவலக வளாகமாக மாறிப்போன சிவப்பு நிற இந்தோ ஸார்ஸெனிக் பாணிக் கட்டிடம். ஏறத்தாழ 225 ஆண்டுகளுக்கு முன் வாலாஜா நவாபால் கட்டப்பட்ட கட்டிடம் இது. சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் எல்லாம் சொல்லிவைத்தாற்போல் மின்சாரக் கசிவினால் விளையும் தீ விபத்தால் சேதமடைந்து அந்தச் சாக்கில் இடித்துத் தரைமட்டமாகி, அந்த இடத்தில் இரும்பும் கான்கிரீட்டுமாக ஒரு பிரமாண்ட அடுக்கு மாடிக் கட்டிடம் எழும்பிவிடுவதுபோல் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி மின் கசிவால் தீ விபத்துக்குள்ளான சேப்பாக்கம் அரண்மனையின் தலைவிதியும் அமைந்துவிடக்கூடும். ஆனால், தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரம்பரியப் பெருமைக்குரிய கட்டிடங்களை அவற்றின் அசலான வடிவத்திலேயே புனர் நிர்மாணம் செய்வது குறித்துக் கட்டிடக் கலை நிபுணர்களை அழைத்துப் பேசியிருப்பதாகச் செய்தி வந்திருப்பது ஒரு நல்ல சகுனமாக நம்பிக்கை தருகிறது.
இது இப்படியிருந்தாலும், திடீர் திடீரெனப் பழைய சாலைகளுக் கெல்லாம் முன்யோசனையின்றிப் பெயர் மாற்றம் செய்து, சென்னையின் வரலாற்று அடையாளங்களைத் துடைத்து எறியும் சோகமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சுதந்திரம் வந்த புதிதில் கரைபுரண்டு ஓடிய உற்சாகத்தில் சில முக்கியமான சாலைகளின் பெயர்கள் தலைவர்களின் பெயர்களாக மாறின. ஆனால்,அவையும் பேச்சு வழக்கில் எம்.ஜி. சாலை என்.எஸ்.ஸி.போஸ் சாலை என்றெல்லாம் சுருக்கப்பட்டு நோக்கம் மறைந்து ஒழிந்தன. மக்கள் மனதில் பதிவு பெறாத அவை, பழைய பெயர்களாலேயே நிலைமையும் நீடித்துக்கொண்டு தானிருக்கிறது.
இந்தப் போக்கில்தான் அண்மையில், சாந்தோம் எம்.ஸி. நகரில் தொடங்கி ஆந்திர மஹிள சபா மருத்துவமனை நாற்சந்தி வரையிலான ஒரு பாதி கிரீன்வேஸ் சாலை டி.ஜி.எஸ். தினகரன் சாலை என மாற்றப்பட்டுள்ளது.
முதலில் தூய தமிழ்ப் பெயர் சூட்டும் ஆர்வத்தில் வரலாற்றுக் கண்ணோட்டம் சிறிதுமின்றி நேர் மொழிபெயர்ப்பாகப் பசுமை வழிச் சாலை என்று அதன் பெயரை மாற்றினார்கள். கிரீன்வேஸ் சாலையின் மறு பாதி இன்றும் பசுமைவழிச் சாலையாகவே தொடர்கிறது. வாட்டர் ஃபால்ஸ் என்பதை நீர் வீழ்ச்சி என்று சொல்லுக்குச் சொல் மொழி மாற்றம் செய்தது போலத்தான் இதுவும்!
ஆனால், உண்மையில் கிரீன்வேஸ் என்பது 1800களில் அங்கு வாழ்ந்த எட்வர்டு க்ராஃப்ட் கிரீன்வே என்ற ஆங்கிலேய நீதிபதி ஒருவரின் பின்னொட்டைக் குறிப்பதுதானே தவிர, தனித் தமிழ் ஆர்வலர் நினைத்ததுபோலப் பசுமை வழியை அல்ல!
வரலாற்றுப் பிரக்ஞை இல்லாததால்தான் இப்படிப்பட்ட அபத்தங்கள் நேர்ந்துவிடுகின்றன. பெயர் மாற்றத்திற்குள்ளான கிரீன்வேஸ் சாலையில்தான் தமிழ் இசை இயக்கத்தை முன்னின்று நடத்தியவரும்,முதல் முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக் கழகம் ஒன்று தமிழ் நாட்டில் உருவாகக் காரணமாயிருந்தவருமான செட்டிநாட்டு அரசர் ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் வாழ்ந்த மாளிகை உள்ளது. அவரது நினைவாகப் பெயர் மாற்றம் செய்திருந்தாலாவது அதிலும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருப்பதாக ஆறுதல் கொள்ளலாம். ஆனால், தமிழ் நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு என எந்தவொரு கோணத்திலும் பங்களிப்பு எதுவும் இல்லாத ஒருவரின் பெயரை சென்னை மாநகராட்சி2009இல் அதற்குச் சூட்டி, அப்போதைய மாநில அரசும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது! இ.டி.ஜி. எஸ். தினகரன் என்பவர் கிறிஸ்தவ மதப் பிரசாரகராக வாழ்க்கை நடத்தியவர் என்பதற்குமேல் தமிழர் வாழ்வியலுடன் தொடர்பு எதுவும் பெற்றிருந்தவர் அல்லர். கல்வி என்பது வணிகமயமாகிக் கற்பித்தலுக்குப் பதிலாகக் காசு பறிப்பதே குறி என்றாகிவிட்ட கால கட்டத்தில் அவர் தொடங்கிய கல்லூரிகளும் தமிழ் நாட்டின் கல்வித் துறையிலோ பொது வாழ்விலோ நினைவுகூரத்தக்க பணி எதையும் செய்துவிடவில்லை. பிறகு எதற்கு சாதனைகள் பல செய்த அண்ணாமலை அரசரின் பெயரைக்கூட வைக்காமல், தமிழகத்தின் பொது வாழ்வில் எவ்வித முத்திரையும் பொறிக்காத ஒரு பெயரால் கிரீன்வேஸ் சாலை அழைக்கப்பட வேண்டும்?
இந்தியாவின் முதல் நவீன மாநகரம் என்கிற பெருமைக்குரிய சென்னையின் வரலாற்றுத் தடம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டேவரும் துன்பியலின் மௌன சாட்சிகளாய் நாம் நிற்கிறோம்.
No comments:
Post a Comment