விலை பன்னிரெண்டு ரூபாய். இதழ் வாரம் இருமுறை. மாதம் எட்டு. இதழ் ஒன்றின் விநியோகம் 2 லட்சம் வரை இருக்கலாம். ஒரு இதழுக்கு மொத்த வரவு (செலவு, கழிவையும் உள்ளடக்கி – விளம்பர வரவை தவிர்த்து ) 24 லட்ச ரூபாய். இதை சாதிப்பதற்கு என்ன வேண்டும்?
அட்டைப்படக் கட்டுரை.
வாசகர்கள் ஜூனியர் விகடன் பெயருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கவர் ஸ்டோரி என்ன என்றே பார்க்கிறார்கள். சரக்கு விலைபோவது விகடன் குழும பிராண்டில் அல்ல. மல்டி கலர் வம்பு தும்பு, கிசுகிசு, அரட்டை அக்கப்போர் இன்னபிற மசாலாக்களை கொண்டிருக்கும் அட்டைகளே சரணம். சரி அதனால் என்ன? பெட்டிக்கடையில் வாங்குபவன் வாசகரா, இளித்தவாயனா? அவர்கள் பகிரங்கமாகவே வா இல்லை இ என்றே தெரிவிக்கிறார்கள்.
இனி கதையின் காரணம். 30.11.2014 தேதியிட்ட ஜூவியின் அட்டைப்படம்: முறையே வாசன், விஜயகாந்த், வைகோ சிரித்தவாறு காட்சி. “உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!” – இது கவர் ஸ்டோரியின் தலைப்பு!
நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி – பாஜகவிற்கு மிருதங்கம் அடித்தார்கள். தேர்தலுக்கு பிறகு திமுகவில் அப்படி, இப்படி என ட்ரம்ஸ் தட்டினார்கள். எத்தனை காலத்திற்கு என்று சலிப்பு வந்த உடன், வாசன் வந்தருளினார். பிறகு தமிழ்நாட்டின் விமோசனத்திற்காக ஜூவி அடுத்த கூட்டணி தயாரிப்பிற்கு தயார். இந்த சமையல் குறிப்பிற்கு அவர்கள் கடுகளவும் மெனக்கெடவே இல்லை.
உருவாகிறது ஊழல் அணிக்கு ஜூவி எழுதிய மொத்த வார்த்தைகளும் எவ்வித சுருக்கமும் இன்றி கீழே தரப்பட்டுள்ளது:
”அரசியல் வட்டாரத்தில் கமுக்கமாக நடக்கத் தொடங்கி இருக்கும் ஒரு பேச்சுவார்த்தை பற்றிய முன்னோட்டங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன். இது ஆரம்பக்கட்டம்தான்! தி.மு.க, அ.தி.மு.க இல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் ஆகிய மூவரையும் அதில் இணைக்கும் திட்டம் இருக்கிறதாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய நான்கையும் இதனுடன் இணைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறதாம். ‘ஊழல் எதிர்ப்பு அணி’ என்று இதற்கு முத்திரையும் வைக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். ஜி.கே.வாசனும் விஜயகாந்தும் எப்போதும் நண்பர்கள். விஜயகாந்தும் வைகோவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாக பின்னிப் பிணைந்து இருந்தார்கள். இப்படி ஓர் அணி அமையும்போது புதிய கட்சிகளும் தயங்காமல் ஒன்று சேரும் என்கிறார்கள். இது தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மட்டுமல்ல, பி.ஜே.பி, காங்கிரஸ் அல்லாத அணியாகவும் அமையுமாம்!” என்ற கழுகார், ”ஒரு சீக்ரெட் சொல்கிறேன்! அது விரைவில் வெடிக்கும்!” என்று பீடிகையுடன் அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.”
மொத்தம் 107 வார்த்தைகள். ஏழு வாக்கியங்கள். அதிலும் கடைசி வாக்கியத்தில் அடுத்த பரபரப்பிற்கான பீடிகை. இதிலிருந்தே தெரிகிறது, இந்த இத்துப் போன செய்திகளை அவர்களே ரசிக்கவில்லை. இட்டுக் கட்டல்தான் என்றாலும் அதிலும் கூட அளவிலோ, திருப்பங்களிலோ, டிவிஸ்டுகளிலோ, முடிச்சுக்களிலோ கடுகளவு கூட படைப்புத் திறன் இல்லை!
என்ன ஆச்சு ஜூவிக்கு?
பிரியாணி வார்த்தையைக் காட்டினாலே தமிழன் எச்சிலூறும் நாக்குடன் வருவான் என்று எவ்வளவு தன்னம்பிக்கையா? பிரியாணி இல்லை, பிய்ஞ்சு போன செருப்புதான் என்றாலும் ஆம்பூர் வாசனையை தேடுவான் என்று எப்படி ஒரு கணிப்பு? விகடன் குழும மார்க்கெட்டிங் உத்தி அபாரம்!
இல்லை மோடி, பாஜக எபிசோடு போல ஏதும் அசைண்மெண்டா? இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊழல் எதிர்ப்பு கூட்டணிக்கு கழுகு எனும் கிசுகிசு பக்கத்தில் ஒதுக்க வேண்டிய காரணம்?
ஜூவியில் காரணமே இல்லாமல் வைகோ எனும் பியூஸ் போன பல்பர் ஏதோ ஒரு நியூசில் இடம்பெறுவார். அதற்காகவா இந்த கவரேஜ் (உண்மையில் கடுகரேஜ்)? சார்க் மாநாட்டில் ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன மோடிக்கு, இடியே கலங்கி போகும் வண்ணம் கண்டித்தாரே வைகோ, அதன் பொருட்டா? வைகோவை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்று பாலிமர் சேனலே பொருட்படுத்தாத பாஜக தலைகள் ஒதுக்கியதே அவர்களை எச்சரிக்கும் பொருட்டா?
இல்லை பிரச்சாரத்துக்கு வைகோ, பிரபலத்துக்கு கேப்டன் என்று கமலாலயம் ஆனந்தத்தில் திளைத்ததே, அதை நினைவுபடுத்தி தாமரைக்கு விடுவிக்கும் எச்சரிக்கையா?
இல்லை வாசன் கம்பெனியை யாராவது கருணை காட்டி கூட்டணியில் தூக்கி போட்டாலும் 5 சீட்டுகள் கிடைத்தாலே அதுதான் எட்டாவது உலக அதிசயம். தஞ்சை பண்ணையாரின் வாரிசுக்கு கூட ரெண்டு மூன்று சேர்த்து கேட்கத்தான் இந்த ஏழு வாக்கியங்களா?
இல்லை விகடன் கனவு கண்ட அந்த பொற்கால பாஜக கூட்டணியின் துர்பாக்கிய தடையாக இருந்த கேப்டன் கட்சியை பழிவாங்கவா? கேப்டன் வருவார், மாட்டார் என்று பொன்னார் அறையில் முறுக்கு பாக்கெட்டுகள் தீர்ந்த நேரத்தில் நகங்களை கடித்து அவதிப்பட்டதாக ஆ.விகடனில் வானதி சீனிவாசன் குமுறுகிறார். கடிபட்ட, அரைபட்ட முறுக்குகளுக்கான நன்றிக் கடனா?
இல்லை திமுக, அதிமுகவிற்கு மாற்றாக பாஜகவை ஆளாக்க சில்லறையாட்களை ஓரம் கட்டுகிறார்களா? எனில் வைகோவின் இடம் சில்லறையில் என்ன? சில்லறை சிறுத்த பிறகு பேரிசையுடன் வேறு ஏதும் முழங்குவாரா? தமிழிசைக்கு தெரியுமா?
இல்லை ரஜினியை இழுத்துபோட அமித்ஷா போடும் திரில்லர் ரூட்டுக்கு இது ஒரு கிளைக்கதையா?
இல்லை, கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, என்று நல்லகண்ணு அறம் காட்டி முற்போக்கு காட்டும் தந்திரமா? நேற்று காவியுடன் காபி, இன்று சிவப்புடன் மோர், நாளை கதருடன் லாலி பாப்பா? அடேயப்பா!
இல்லை இப்படி ஒரு ஊழல் எதிர்ப்பு கூட்டணி வந்தால் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய ஞானாத்மாக்களும், உதயாத்மாக்களும் வந்து சேருமா? இதனால் ஃபேஸ்புக்கில் ரெண்டு மாதம் அனல் பறக்குமே? அந்த அனலை செய்தியாக்கும் திட்டமா?
இல்லை இந்த வார இதழை விறுவிறுப்புடன் தள்ள வேறு எந்த வரலாற்று சாதனைகளும் நடக்காததன் விளைவா? சொல்லுங்கள் அய்யா, சொல்லுங்கள்!
ஊழல் எதிர்ப்பு அணி என்று பந்தாவுடன் தலைப்பு போட்டு உள்ளே போய் பார்த்தால் பந்தலும் இல்லை பந்தியும் இல்லையே?
ஒரு நாட்டின் அரசியல் தரம் எப்படி இருக்கிறது, அறிய வேண்டுமா? அங்கு வரும் அரசியல் பத்திரிகைகளை பாருங்கள்!
ஓபி எஸ்ஸையும், அம்மா அடிமைகளையும் கிண்டல் செய்து தமிழகத்தை பார்த்து சிரிப்பவர்கள், தமிழக ஊடகங்களை பார்த்து சிரிக்க வேண்டாம், அழவாவது செய்யலாமே?
No comments:
Post a Comment