Friday, November 21, 2014

நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் வழிப்பறிக் கொள்ளை

அநேகமாக அரசு விரைவுப் பேருந்துகளில் வெளியூர்ப் பயணம் சென்று வரும் அனைவருமே அனுபவப்பட்ட விஷயம்தான் இது. என்றாலும் என் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்க்காமல் இருக்க முடியவில்லை.

பேருந்தில் இடம் கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கும் நேரத்தில் அடித்து பிடித்து இருக்கையில் உட்கார்ந்த பிறகுதான் உணவு ஞாபகம் வரும். சரி போகிற வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அங்கேதான் ஆரம்பிக்கிறது வினை.

நகர நெருக்கடிகளையெல்லாம் கடந்து காட்டுப் பகுதில் இருக்கும் உணவகத்தில் நிறுத்தப்படுகிறது பேருந்து. அங்கே ஒரு குரல் 'சார் வண்டி பத்து நிமிஷத்துக்கு மேல நிற்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம் சார்' ஏதோ பதிவு செய்யப்பட்ட குரல் போல ஒவ்வொரு பேருந்து நிறுத்தப்படும் போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வேகமாக உணவகத்திற்கு உள்ளே நுழைந்து ஏதாவது சாப்பிடலாம் என்று விலையைக் கேட்டால் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. நட்சத்திர உணவகங்களில் கூட கேள்விப்படாத விலை. சரி தொலைகிறது என்று அமர்ந்தால் நாம் சாப்பிட வேண்டியதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். சாதாரண தோசை வாங்கினாலும் சட்னி சாம்பாரெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அசைவ குருமாக்கள்தான் இருக்கிறதென்று எதையோ ஊற்றுவார்கள். சைவம் சாப்பிடுவோர் நிலை பரிதாபம்தான்!

சரி சாப்பிட வேண்டாம் வேறு ஏதாவது வாங்கலாம் என்று வெளியே வந்தால் குளிர் பானங்கள், பிஸ்கட்டுகள், நொருக்குத் தீனிகள் என்று எதை வாங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையைக் காட்டிலும் 50 சதவீத்திற்கு மேல் விலை. 10 ரூபாய் பிஸ்கட் 15 ரூபாய். 15 ரூபாய் குளிர்பானத்தின் விலை 25 ரூபாய். இவற்றில் பலவும் போலியான தயாரிப்புக்கள். சரி டீ காபியாவது குடிக்கலாம் என்று நினைத்தால் அதற்கு 10 ரூபாயை வாரி வழங்க வேண்டும். அப்படியே குடித்தாலும் அதற்கு வெந்நீரே தேவலை என்று நினைக்கத் தோன்றும்.

இருக்கும் வயிற்றெரிச்சலையெல்லாம் அணைத்துக் கொள்ளலாம் என்று தண்ணீர் பாக்கட் விலையைக் கேட்டால் ஒரு பாக்கட் 3 ரூபாய்! அது தண்ணீரா அல்லது பெட்ரோலா என்று சந்தேகம் வந்து விடும். எனக்குத் தெரிந்த வரை விலை அதிகம் கொடுத்தாலும் அங்கே தரமாகக் கிடைக்கும் ஒரே பானம் இளநீர் மட்டுமே. மற்ற அனைத்துமே ஏதோ கொஞ்சம் சுவையுடைய சாக்கடைக்கு சமமானவையே.

எதுவுமே வேண்டாம் சிறுநீர் பாரத்தையாவது இறக்கித் தொலைக்கலாம் என்று கழிவறை நோக்கி நடந்தால் அங்கேயும் அதிர்ச்சி காத்திருக்கும். சிறுநீர் கழிக்க 3 ரூபாயாம். வேறு வழியின்றி உள்ளே நுழைந்தால் நீங்கள் வியாதிகளை விலை கொடுத்து வாங்கப் போகிறீர்கள் என்று பொருள். அவ்வளவு சுத்தம்.. சுகாதாரம்.! சரி வெளியில் சாலையோரமாக நின்று வெளியேற்றலாம் என்று நினைத்து நடந்தால் வேகமாக வரும் விசில் சத்தம் நம்மைத் தடுக்கும். இதற்காகவே பிரத்தியேகமாக ஆட்களை நியமித்திருப்பார்கள்.

இப்படி சொல்லி மாளாத அவலங்கள் இன்னும் நிறைய உண்டு. நெடுஞ்சாலைகளில் சில நல்ல உணவகங்களும் இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் பேருந்துகள் குறிப்பாக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இது போன்ற கழிசடை உணவகங்களில் நிறுத்தப்படுவதற்குக் காரணம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு கவனிப்பு. ஒரு பேருந்து நிறைய ஏமாளிகளைக் கொண்டு வந்ததற்காக அவர்களுக்குக் கிடைக்கும் உபசரிப்பே தனிதான். அவர்களுக்கு வரவேற்பு என்ன? சிறப்பு உணவு என்ன? கடைகளில் வேண்டியதை எடுத்துக் கொள்ளும் உரிமை என்ன? அடடா.. ராஜ மரியாதை என்று சொல்வார்களே அதை நேரில் பார்க்கலாம்!

இப்படி நடுத்தர வர்க்கத்தினரிடம் பகல் கொள்ளை நடத்தும் இந்த உணவகங்களை சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஏன் கண்டு கொள்வதில்லை? எந்த ஆட்சி மாறினாலும் இந்த காட்சி மாறாமல் தொடர்வது ஏன்? மக்கள் தங்களுக்குள் புலம்பிக் கொள்வதில் சில உண்மைகள் புலப்படுகின்றன. எப்படி ஓட்டுனர்களையும் நடத்துனர்களையும் இவர்கள் கவனித்து விடுகிறார்களோ அதே போல் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை கவனித்து விடுவார்களாம். பெரும்பாலும் இதுபோன்ற உணவகங்கள் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் கைவசம்தான் இருக்குமாம்.

எது எப்படியோ, ஒரு காலத்தில் பயணிகளுக்காக மரங்களை வளர்த்து சத்திரங்கள் கட்டி இலவசமாகவோ அல்லது மலிவாகவோ உணவு வழங்கிய பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழக சாலைகள் இன்று இது போன்ற வழிப்பறிக் கொள்ளையர்களிடம் சிக்கிக் கிடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

No comments:

Post a Comment