
ஷாப்பிங் மால், 5 ஸ்டார் ஹோட்டல், ஐஸ் கேட்டிங், கடல் என அனைத்தும் ஒரே இடத்தில் அருகருகில் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை இனி நீங்கள் சீனாவின் New CenturyGlobal Center இல் பெற முடியும்.
உலகின் பரப்பளவில் மிக விசாலமான கட்டிடத்தை சீனா கட்டி முடித்துள்ளது.
அது தான் இந்த நியூ குளோபல் செண்டர். மனிதனால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டிடம் எனும் புதிய சாதனையை இது படைத்துள்ளது. 1.7 மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவு, அதாவது ஒரு மொனாகோ நகரத்தின் பரப்பளவு, 20 சிட்னி ஒபேரா இல்லங்களுக்கு சமமான பரப்பளவு, 500 மீ நீளம், 400 மீ அகலம் 100 மீ உயரம் என பிரமாண்டமாக விரிந்து கிடக்கிறது இக்கட்டிடம்.
ஷாப்பிங் மால், 14 ஸ்கிரீன் கொண்ட ஐமேக்ஸ் தியேட்டர்கள், 1000 அறைகள் கொண்ட இரண்டு 5 ஸ்டார் ஹோட்டல்கள், சொர்க்கத் தீவு எனும் ஒரு மிகப்பெரிய நீர்ப்பூங்கா, 6000 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய செயற்கையான கடற்கரை, 24 மணிநேரமும் சூரிய வெளிச்சம் படரும் அளவுக்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட சூரியன், இராட்சத LED ஸ்கிரீன் கொண்ட அரங்குகள் என அசத்தும் இக்கட்டிடம் கடந்த ஜூன் 28ம் திகதி முதல் பொதுமக்களுக்கு என உத்தியோகபூர்வமாக திறந்துவிடப்பட்டுள்ளது.
உண்மையில் சிசுவன் மாகாணத்திலிருந்து கடலுக்கு குளிக்கப்போவதென்றால் 1000 கி.மீட்டர்களை கடக்க வேண்டுமாம். அதற்காக ஒரு குட்டிக்கடலையே இந்தக் கட்டிடத்திற்குள் உருவாக்கி விட்டார்கள் இதன் கட்டிடக் கலைஞர்கள். விரைவில் உலகின் மிக உயரமான கட்டிடத்தை 90 நாட்களுக்குள் கட்டி முடிக்கப் போவதாக சபதமெடுத்திருக்கும் சீனா இப்போது மிகப்பெரிய கட்டிடத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சீனாவுக்கு போட்டி நிறைந்த நாடு எனச்சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் பார்வைக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம்!



No comments:
Post a Comment