Monday, November 10, 2014

முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மையுற்றாய்!!



பொள்ளாச்சி மகாலிங்கம்
ஆன்மிக மக்களின் மனதில் ஆழப்பதிந்து போன அற்புதமான பெயர்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சமரச இயக்கத்தின் தூணாய் வலம் வந்தவர்.
கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரத்தை கடந்த 70ஆண்டுகளாக உயர்த்திப்பிடித்து வந்தவர். அங்குவாழும் மக்கள் பலருக்கு தங்களை வாழ்விக்கும் தெய்வமாக விளங்குபவர்.
பொள்ளாச்சி வந்த மகாத்மா காந்தியை சந்தித்தது முதல் தேசமே பெரிது என தேசப்பற்றை தனது மூச்சு காற்றாக ஏற்றுக்கொண்டவர்.
1952ல் தன்னுடைய 29 வயதில் சட்ட மன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் தொடர்ந்து 57 மற்றும் 62 ம் ஆண்டுகளிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது இவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம் அதில் ஒன்றுதான் இன்றைக்கு பல நிலங்கள் பலன்பெறும் பரம்பிக்குளம்-ஆழியாறு விவசாய நிலங்களுக்கான நலத்திட்டம்.
69க்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி சமூக முன்னேற்றத்திற்கு வழிதரும் வகையில் பல்வேறு தொழில்களை துவங்கினார்.
சக்தி குழுமம் என்று அவர் துவங்கிய ஆலமரத்தின் கீழ் காற்றாலை, பால் உற்பத்தி, தேயிலை உற்பத்தி, ஜவுளித் துறை, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் அந்தந்த மண்ணின் மக்களின் வாழ்வாதாரமாக மாறின.
கல்விக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் அவர் செய்திட்ட பணிகள் அளவிடமுடியாதவை.
46க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் எழுதியுள்ளார். பல்வேறு மாத பருவ இதழ்களின் ஆசிரியராகவும் விவசாயம் சார்ந்த பத்திரிகைகளின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
வள்ளலாரின் புகழ் பரப்பும் புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி கண்டவர்.
மத்திய அரசின் உயர்விருதான பத்மபூஷன் விருது பெற்றவர். பல்வேறு பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி இவருக்கு கவுரம் சேர்த்துள்ளன.
தமிழ் மொழியின் எழுத்துக்களை சுருக்கி எளிமைப்படுத்துவதன் மூலம் தமிழ் மொழியை உலகம் போற்றும் மொழியாக மாற்ற வேண்டும் என்று முயற்சி எடுத்தவர்.
தனது 91 வயது வரை பொதுவாழ்வில் சலிக்காது ஈடுபட்ட காந்தியவாதியும், வள்ளலாரின் அன்பருமான இவர் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று காந்தி- வள்ளலார் நிகழ்வை முன் வரிசையில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்தார்.
'குறைவில்லா நிறைவே' என்ற திருப்பதிகம் அன்று இவருக்காகவே பாடப்பட்டது போலும் புன்னகையோடு கேட்டுக் கொண்டு இருந்தவரின் தலை அந்த புன்னகை மாறாத நிலையிலேயே சரிந்து தொங்கியது.
மகத்தான அந்த மனிதருக்கு பொள்ளாச்சியில் துவங்கி சென்னை வரை அஞ்சலி தொடர்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...