Friday, November 28, 2014

மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!


மேக் இன் இந்தியா
தோற்றுப்போன திட்டத்தையே மேக்இன் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்து செப்டம்பர் 25 அன்று ஆரவாரமாக அறிமுகப்படுத்தும் மோடி.
கடந்த ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, “மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்துடன் “உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. எனவே, இந்தியாவில் முதலீடு செயுங்கள்” என்று போணியாகாத சரக்கை மலிவு விலைக்குத் தருவதாகக் கூவிக்கூவி விற்கும் வியாபாரியைப் போல பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களை வலிந்து அழைக்கிறார். உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் மோடி முன்வைக்கும் மேக் இன் இந்தியா திட்டம். இதற்காக சுங்க வரி, கலால் வரி, ஏற்றுமதி வரிகள் அந்நிய முதலீட்டாளர்களின் நலன்களுக்கேற்ப மாற்றியமைக்கப்படும் என்று இதனை விளக்கும் வகையில் தனியொரு இணைய தளத்தையே மோடி அரசு தொடங்கியுள்ளதோடு, சர்வதேச முதலீட்டாளர்களின் உச்சி மாநாட்டையும் நடத்தியுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு (FDI – ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட்) என்பதற்கு “முதலில் இந்தியாவை வளர்ப்போம்” (ஃபர்ஸ்ட் டெவலப் இந்தியா) என்று விளக்கமளிக்கிறார் மோடி. “மேக் இன் இந்தியா திட்டத்தால் பொருள் உற்பத்தித் துறை வளர்ந்து பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும், தொழில்நுட்ப ரீதியாக இந்தியா வளர்ச்சியடையும்” என்று ஆரூடம் கூறுகிறார். 2022-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத பங்களிப்பை பொருள் உற்பத்தித்துறை அளிக்க வேண்டும் என்ற இலக்கையும் அவர் தீர்மானித்துள்ளார். தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடித்த கதையாக, இந்தக் கோமாளித்தனத்தையே ஏதோ மோடி கையில் மந்திரக்கோல் உள்ளதைப் போலவும், அந்நிய முதலீடுகள் பெருகுவதற்கான சூழல் கனிந்து விட்டதாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் விளம்பரப்படுத்தி பிரமிப்பூட்டுகின்றன.
make-in-india-1பொருளுற்பத்தித் துறையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வளர்ந்தால், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியைச் சாதிக்கும் என்று கதையளக்கும் மோடியின் இந்தக் கவர்ச்சித் திட்டம், காங்கிரசு அரசின் கொள்கைதானே தவிர, இதில் புதுமையோ, மோடியின் தனித்திறமையோ எதுவும் கிடையாது. ஏற்கெனவே 2004-ல் காங்கிரசு தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தபோதே, பொருள் உற்பத்தித்துறைக்கான தேசிய திட்டம் வகுக்கப்பட்டு, “திறன் மேம்பாட்டு ஆணையம்” அமைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த விளைவை அதன் மூலம் சாதிக்க முடியவில்லை. இருப்பினும், தோற்றுப்போன அத்திட்டத்தையே மேக் இன் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்து கவர்ச்சிகரமான புதுமைத் திட்டமாக மாய்மாலம் செய்யும் மோடி கும்பல், ஏதோ காங்கிரசு அரசு செய்யத் தவறி விட்டதைப் போலவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தததும் அதனைச் செயல்படுத்துவதைப் போலவும் சவடால் அடிக்கிறது.
அந்நிய முதலீடுகள் இந்தியாவில் பெருகினால் நாடு முன்னேறி வல்லரசாகிவிடும் என்று கூறி தனியார்மய – தாராளமயக் கொள்கைள் புகுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில் நடந்ததென்ன? 1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்நிய முதலாளிகளும் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவே அரசுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. பி.எஸ்.என்.எல். நட்டத்தில் தள்ளப்பட்டதை இந்நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டின. தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களையும் லாபத்தையும் கொண்டிருந்த அரசுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்கும் படலம் தொடங்கியது. 2100 கோடி ரூபாய் மதிப்புடைய அரசுத்துறை நிறுவனமான மாடர்ன் புட்ஸ், வெறும் 104 கோடிக்கு யுனிலீவர் நிறுவனத்துக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆற்றுநீர், இரும்பு, நிலக்கரி, எரிவாயு உள்ளிட்டு இயற்கை மூலவளங்களைச் சூறையாடுவதற்காக அந்நிய முதலீட்டாளர்களுக்குக் கதவுகள் அகலத் திறந்து விடப்பட்டன. 2000-வது ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் அந்நிய முதலீட்டைக் காட்டி ஆகா, வளர்ச்சி என்றனர். பின்னர் அதுவும் சரிந்து விழுந்ததோடு, அவுட் சோர்சிங் பெருகும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.
தனியார்மய  – தாராளமயத்தின் தொடக்கத்தில் அந்நிய முதலாளிகள் தாமே நேரடியாகத் தொழில் தொடங்குவதற்கும் மேலை நாடுகளிலிருந்து நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் 1990-களின் இறுதியில் இந்த வளர்ச்சி நீர்க்குமிழி போல உடைந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. பிறகு இந்த மந்த நிலையைக் காட்டி நிதித்துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால்தான் நாடு முன்னேறும் என்று கூப்பாடு போட்டு, கடன் சந்தை, வங்கிகள், பங்குச் சந்தை முதலானவற்றில் அந்நிய முதலீட்டுக்குத் தாராள அனுமதியளிக்கப்பட்டது. இதனால் அந்நியக் கடன் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை வீங்கியது. அந்நிய நிறுவனங்கள் பங்குச் சந்தையிலும் கடன் சந்தையிலும் போட்டிருந்த தமது மூலதனத்தை சுருட்டுக் கொண்டு ஓடியதும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து விழுந்தது.
டோங்கிரியா கோண்டு பழங்குடியினர்
பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்காக ஒரிசாவின் நியாம்கிரி மலையை ஆக்கிரமிக்க முயன்ற வேதாந்தா நிறுவனத்தையும் அதற்குத் துணை நிற்கும இந்திய ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் (கோப்புப் படம்)
அந்நிய முதலீடுகளால் பங்குச் சந்தையில் விலைக்குறியீட்டு எண் ஏறி இறங்குவதைக் காட்டி ‘வளர்ச்சி’, ‘முன்னேற்றம்’ என்று ஆரவாரம் செயய்ப்பட்டதேயன்றி, நாட்டின் தொழிலும் விவசாயமும் வேலைவாய்ப்பும் குறிப்பிடும்படியான எந்த வளர்ச்சியையும் சாதிக்கவில்லை.  அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் நகர்ப்புறங்களில் உருவாக்கப்பட்டுள்ள மேம்பாலங்களும், அதிவிரைவுச் சாலைகளும், அதிநவீன விமான நிலையங்களும் கிராமப்புற விவசாயிகளின் குடிசைகளையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் பறித்துள்ளதேயன்றி, அவர்களது வறுமையை விரட்டியடிக்கவில்லை. ஊழலுக்கும் பகற்கொள்ளைக்கும், சுற்றுச்சூழல் நாசமாக்கப்பட்டதற்கும் சான்றாக நிற்கும் இந்த ‘வளர்ச்சி’ வேலைவாயப்புகளை நிரந்தரமாக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு,  இலட்சக்கணக்கான விவசாயிகள் நாடோடிகளாக நகர்ப்புறங்களுக்கு விசிறியடிக்கப்பட்டனர். உத்திரவாதமற்ற வேலையும், அற்பக் கூலியும், விலைவாசி உயர்வும் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகின.
கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து மந்தத்திலும் நெருக்கடியிலும் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் சிக்கிக் கொண்டிருப்பதால் ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவில் வந்து முதலீடு செய்வதற்கான அடிப்படையும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால், அந்நிய நிறுவனங்கள் பொருள் உற்பத்தித் துறையில் முதலீடுசெய்ய வேண்டுமானால், தடையில்லாத மின்சாரம் வேண்டும். ஆனால், மின்தட்டுப்பாடு நாட்டின் தீராத பிரச்சினையாக உள்ளது. மின்சாரம் மட்டுமின்றி, சாலைகள், துறைமுகங்கள் முதலான போக்குவரத்து வசதிகள், தொலைத் தொடர்பு முதலான அடிக்கட்டுமானத் துறையில் இந்தியா இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.
மேக் இன் இந்தியா
அந்நிய முதலீட்டின் மகிமை : நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை எதிர்த்து வேலை இழந்த அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
கடந்த 2013-ம் ஆண்டில் இந்தியாவின் பொருள் உற்பத்தித்துறையானது மொத்தப் பொருளாதாரத்தில் வெறும் 13 சதவீத அளவுக்கே பங்களித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிலைமை என்று உலக வங்கியே மதிப்பிட்டுள்ளது. ஆனால், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது. மேலும், பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் 189 நாடுகளில் 134-வது இடத்தில்தான் இந்தியா உள்ளது என்கிறது உலகவங்கி. இருப்பினும், இந்தியாவை 50-வது இடத்துக்கு உயர்த்தி சீனாவை முந்தப் போவதாக சவடால் அடிக்கிறார் மோடி. இதற்காக, இதர ஏழை நாடுகளைவிட மலிவான கூலியில் உற்பத்தி செய்து தருவதற்கான உத்திரவாதம் அளிப்பதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறார். இந்த நோக்கத்தோடு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) முடித்தவர்களைக் கவரும் வகையில், பாரதீய ஜனதா கட்சியின் தாய்க்கட்சியான ஜனசங்கத்தின் அமைப்பாளரான தீனதயாள் உபாத்தியாயா என்பவரது பெயரில், “ஷிரமேவ ஜெயதே கார்யக்ரம்”(உழைப்பே வெல்லும்) எனும் திட்டத்தை அண்மையில் மோடி தொடங்கியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கும் மூலதன அழுத்தம் கொண்ட பெருந்தொழில் நிறுவனங்களில் தானியங்கி எந்திரங்களே பெரும்பாலான வேலைகளை நேர்த்தியாகவும் விரைவாகவும் செய்து விடுவதால், அங்கு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாப்பு  அருகிவிட்டது. தானியங்கி எந்திரங்களின் வேகத்துக்கு ஏற்ப வேலை செய்யும் வகையிலான தொழில் தேர்ச்சி பெறாத அல்லது தொழில் பழகுநர்களாக உள்ள தொழிலாளர்கள்தான் இத்தகைய நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றனர். எனவேதான், இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மோடி, “தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) முடித்தவர்களை நாம் மதிப்பதில்லை. அவர்களது மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட்டால்தான் சமுதாயம் முன்னேற்றமடையும்; தொழிலாளர்கள் கடின உழைப்பைக் கொண்ட தேசத்தைக் கட்டியமைக்கும் யோகிகள்” என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, நிரந்தரத் தொழிலாளர்கள் செயய வேண்டிய வேலைகளைத் தொழில் பழகுநர்களை வைத்து வேலைவாங்குவதையே கவர்ச்சிகரமான திட்டமாக முன்வைத்துள்ளார். இத்தகைய தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தராமல், பராமரிப்பு நிதி (ஸ்டைபண்ட்) மட்டும் கொடுத்து, இளம் தொழிலாளர்களை எவ்வித உரிமையுமின்றி ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாட்டைத்தான் மோடி செய்துள்ளார்.
ஏற்கெனவே தொழில்பழகுநர்களாக ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் சேர்பவர்கள், பயிற்சிக் காலம் முடிந்த பின்னரும் முறையான நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், கேசுவல் தொழிலாளர்களாகவும்  மணிக்கூலி, தினக்கூலி, பீஸ்ரேட் தொழிலாளர்களாகவும் உழலும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை நிரந்தரமாக்கி, குறைந்த கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாகத் தொழிலாளர்களை மாற்றுவதே மோடியின் நோக்கமாக உள்ளது. மோடி அரசால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவானது, தொழில் தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், தொழிலாளர் காப்பீடு சட்டம் உள்ளிட்ட முக்கியமான 14 தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது.
make-in-india-2ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்களை மதிக்காத முதலாளிகள், இனி எவ்விதத் தயக்கமும் இன்றி தொழிலாளர்கள் மீது சுரண்டலையும் அடக்குமுறையையும் தீவிரப்படுத்துவார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. மேலும், தொழில் நிறுவனங்களில் ஆய்வு என்ற பெயரில் இன்ஸ்பெக்டர்கள் தொந்திரவு கொடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளிப்படையான ஆயவு மேற்கொள்ளும் திட்டம் கொண்டுவரப்பட்டு, இதற்காக  “ஸ்ரம் சுவிதா” என்ற இணையத்தளம் உருவாக்கப்படுமாம். இன்ஸ்பெக்டர்கள் 72 மணி நேரத்துக்குள் தங்கள் அறிக்கையை அதில் தாக்கல் செய வேண்டுமாம். அப்படி அவர்கள் ஆவு செய்து அளிக்கும் அறிக்கையின்படி முதலாளிகள் தங்கள் நிறுவனங்களிலுள்ள குறைகளைத் தாங்களே சரிசெய்து கொள்ள வேண்டுமாம். முதலாளிகளின் வரைமுறையற்ற கொள்ளைக்கு வழிசெய்து கொடுப்பதுதான் மோடியின் இந்த ஒற்றைச் சாளர நிர்வாகமுறை. குறைவான அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற மோடியின் முழக்கத்தின் பொருள், முதலாளிகளை மேற்பார்வையிடுவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அரசு கொண்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுவதுதான்.
மொத்தத்தில், தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, வளர்ச்சி என்ற பெயரில் உழைக்கும் மக்களை அவர்களது வாழ்வாதாரத்துக்கான நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றி, சுற்றுச்சூழலை நாசமாக்குவதற்கு தாராள அனுமதியளித்து அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதுதான் மோடியின் நயவஞ்சகத் திட்டம். தரகுப் பெரு முதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிக்க வாய்ப்புகளை பட்ஜெட்டின் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள மோடி அரசு, அதுவும் போதாதென்று தொலைத்தொடர்பு, ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு,  இராணுவத் துறை மற்றும் காப்பீடு துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு தாராள அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை என்று மூர்க்கத்தனத்துடன் நாட்டை விற்கக் கிளம்பிவிட்டது. இவற்றின் மூலம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாமேயன்றி, அந்நிய முதலீடு பெருகும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் ஏறத்தாழ 45 சதவீதத்தை சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தான் நிறைவு செகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஏறத்தாழ 40 சதவீத அளவுக்குப் பங்களிப்பதும், ஏறத்தாழ 10 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தாம். இச்சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென்ற விதியை ஒழித்துக்கட்டி, இத்தகைய நிறுவனங்களுக்கு எவ்வித சலுகையுமின்றி நசிவடையச்செய்துவிட்டு, மேக் இன் இந்தியா என்று முழங்குகிறார் மோடி. மேக் இன் இந்தியா பற்றி அவர் ஆரவாரம் செய்து கொண்டிருக்கும்போதே, சென்னை-சிறீபெரும்புதூர் சிறப்புப்பொருளாதார மண்டலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக உலகின் பல ஏழை நாடுகளும், குறிப்பாக ஆசியப் புலிகள் என்று சித்தரிக்கப்பட்ட மலேசியா, தைவான் போன்ற நாடுகளும் இத்தகைய ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தியில் ஈடுபட்ட போதிலும், அந்நாடுகளால் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்க முடியவில்லை.
இந்தியாவில் ராஜீவ் ஆட்சிக் காலத்தில் இத்தகைய பொருளாதாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவரது ஆட்சியிலும், அதற்குப் பின்னர் வந்த ஆட்சிகளிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ள போதிலும் பெருந்தோல்வியிலும் பேரழிவிலும்தான் முடிந்துள்ளது. மேலும், அந்நிய முதலீடுகளும் ஏகாதிபத்திய உலகமயமாக்கமும் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியைத்தான் சாதித்துள்ளன என்பதை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர். உலகமயமாக்கத்தின் கீழ் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி குறைந்துள்ளதை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு(ஐ.எல்.ஓ.)வெளியிட்டுள்ள புள்ளிவிவரமே உறுதிப்படுத்துகிறது.
ஆனால் அடிமுட்டாள் மோடியோ, இப்பேரழிவுப் பாதையைத்தான் வளர்ச்சிக்கான, நாட்டின் முன்னேற்றத்துக்கான பாதை என்கிறார். முதலில் நாட்டின் வளர்ச்சி, அப்புறம் தொழிலாளர் நலனைப் பார்ப்போம் என்கிறார். இங்கே நாடு என்றால் அவரது அகராதியில் கார்ப்பரேட் முதலாளிகள். எது நாடு, இது யாருக்கான வளர்ச்சி என்ற கேள்வி எழுப்பி,வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கம் மோடி கும்பலின் சதிகளை அம்பலப்படுத்தி போராட்டங்களை நடத்துவதன் மூலமே இப்பேரழிவையும் தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...