Monday, November 10, 2014

கனவுகளைக் கைப்பற்றுவோம்...

ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
ஹா... ஹா... இந்தத் தொழில் முனைவுத் தொடரில் நுழைவதற்கு முன் மனசை ஃபிரெஷ்சாக வைத்துக் கொள்ள முதலில் ஒரு குட்டிக் கதை. ஓஷோவின் கதை இது. படிச்சு சிரிச்சுட்டு அப்புறம் விஷயத்துக்குப் போவோம். ஓகே.
ஒரு சாமியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது.
"மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் சாமியார்.
"சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் படைப்பதற்காக ஆணின் உடம்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்தார். அதுவே முதல் செயல். எனது தொழில்தான் மிகப் பழமையான தொழில். கடவுள் பெண்ணைப் படைப்பதற்கு முன்பு உலகில் வெறும் கலவரம் மட்டும்தான் இருந்தது!" என்றார் டாக்டர்.
"சரியாகச் சொன்னீர்கள் டாக்டர்! உங்கள் வாதப்படி எனது தொழில்தான் பழமையான தொழில்" என்றார் அரசியல்வாதி.
"எப்படி?"
"கடவுளின் அறுவை சிகிச்சைக்கு முன்பு உலகில் வெறும் கலவரம்தான் இருந்தது என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அந்தக் கலவரத்தை என்னைப் போன்ற அரசியல்வாதி தவிர, வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்? எனவே, என் தொழில்தான் மிகப் பழமையானது." என்றார் அரசியல்வாதி. இனி ஆரம்பிக்கலாமா?
தேவை குடுகுடுப்பைக்காரர் மனோபாவம் : "இந்த வீட்டு அய்யாவிற்கும், அம்மாவிற்கும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது...'' என்று குடுகுடுப்பைக்காரர் குறிசொல்வதைக் கேட்டிருப்போம். நல்லதை சொல்வதற்கும் நாலு பேர் வேண்டும். நல்லதை நினைத்துக் கொண்டே இருந்தால் அது நிச்சயம் நன்மையில்தான் முடியும். நம்பிக்கை இழந்தவர்களுக்கு குடுகுடுப்பைக்காரர் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள் உற்சாகத்தைத் தருகிறது.
உற்சாகத்துடன் ஒரு செயலில் இறங்கும்போது, அந்தச் செயல் இமாலய வெற்றியாகிறது. எனவே உற்சாகம் முக்கியம். நாம் மட்டுமே உற்சாகமாய் இருந்து நம்மைச் சுற்றியிருப்பவர்கள் உற்சாகக் குறைவாய் அழுது வடிந்து கொண்டிருந்தால் நம் உற்சாகம் வடிந்து முடிந்து விடும். எனவே நம்மைச் சுற்றியிருப்பவர்களும் உற்சாகமாய் இருக்க வேண்டும். அவர்களின் உற்சாகமும் நம்முடன் சேர்ந்து கொள்ளும்போது, செயல்கள் வேகமாக நடக்கும். வெற்றியும் விரைவாகும். எளிதும் ஆகும். எனவே நாமும் குடுகுடுப்பைக்காரரின் மனோபாவத்துடன் நாம் இருக்க வேண்டும்.
நம்மைச் சுற்றியிருப்பவர்களை, சார்ந்திருப்பவர்களிடம் "எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப்படாதீங்க...' என்று நம்பிக்கையான வார்த்தைகள் கூற வேண்டும். நீங்கள் அவர்களின் மீது காட்டும் அன்பு இரண்டு மடங்காக உங்களிடம் அவர்களால் திருப்பிக் கொடுக்கப்படும். அன்புக் கணக்கில் வட்டி விகிதம் வங்கிகள் கொடுப்பதையெல்லாம் விட அதிகம். எனவே தொழில் சார்ந்த இடங்களில் அனைவரிடமும் அன்பை முதலீடு செய்வோம். ஒருவரிடம் நாம் செலுத்தும் அன்பும், அக்கறையும் வட்டியும் முதலுமாய்த் திரும்ப வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பிஸினஸ் பற்றிச் சொல்லப் போவதாய்ச் சொல்லிவிட்டு, அன்பு பற்றி பாடம் எடுப்பதாய் நினைக்காதீர்கள். பிஸினசுக்கும் இதற்கும் தொடர்புண்டு. எதிரிலிருப்பவரிடம் அது வாடிக்கையாளராய் இருந்தாலும், ஊழியராய் இருந்தாலும் நாம் காட்டும் அன்பும், அக்கறையும் நம் பிஸினஸை பன்மடங்கு மேலே கொண்டு செல்வதற்கான படிக்கட்டுகள். இதனைத்தான் மக்கள் தொடர்பு என்பார்கள். மக்களிடம் எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கிப் பழகுகிறோமோ அதே அளவு அவர்களது இதயங்களில் எளிதாக நுழைந்து விடமுடியும். "எங்க முதலாளி, தங்க முதலாளி...' என்று ஓர் ஊழியர் உங்கள் அனபுக்கு அடிமையாகி விட்டால், கூடுதல் சம்பளம் கொடுத்தாலும் வேறு நிறுவனத்துக்கு அவர் மாற மாட்டார். அதேபோல் ஒரு வாடிக்கையாளருக்கும் உங்கள் அக்கறையும், சேவையும் பிடித்துவிட்டால், வெளியில் குறைந்த விலையில் ஒரு பொருள் கிடைத்தாலும் கூட உங்கள் கடையை விட்டு விலக மாட்டார். எனவே, அனைவரிடமும் சகஜமாகப் பழகுங்கள். நலம் விசாரியுங்கள். நேர்மறைச் சிந்தனையை விதைக்கும் வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். எப்போதும் முகத்தில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவதுடன் உங்களது பணி அழுத்தத்திலிருந்தும் விடுதலை அளிக்கும்.
திட்டமிட்டு உழைப்பைக் கொடு: நினைவில் கொள்ளுங்கள், வெற்றி ஒரேநாளில் வந்து விடாது. ரோமாபுரி நகரம் ஒரே நாளிலேயே கட்டமைக்கப்பட்டு விடவில்லை என்பது ஆங்கில பழமொழி. அது படிப்படியாக திட்டமிடப்பட்டு பலமான அஸ்திவாரம், உறுதியான சுவர்கள், அழகான உள்ளலங்காரம் எல்லாம் அமைக்கப்பட்டு கடின உழைப்பு, முயற்சி இவற்றுக்கும் மேலாக பல்லாயிரம் இதயங்களின் கனவுகளின் பலனாய் கூட்டு முயற்சியாக கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. எனவே நாமும் இமாலய வெற்றியைப் பெற வேண்டுமென்றால் அந்த ரோமாபுரி போல படிப்படியாகத் திட்டமிட்டு நம் செய்நேர்த்தியின் மூலம் அது படிப்படியாகத்தான் நடந்தேறும். நம் தொழிலுக்குத் தேவை முதலில் ஒரு கனவு. அதை நிறைவேற்றுவதற்கான திட்டம். ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். "இதற்கு நாம் தகுதியானவர் தானா?' அது நம் மனோபாவத்தை உரசிப் பார்த்து உறுதி செய்து கொள்வது. எறும்புக்கும் தீங்கு செய்தறியாத மனதினர் வேட்டைத் தொழிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அப்படித் தேர்ந்தெடுத்தால் ஒரு குருவியைக் கூட வேட்டையாட முடியாது. நமக்கு எது சரிவரும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நமது மனோபாவம் எது என்பதை உணர வேண்டும்.
உடனே தொடங்கு: தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அதை உடனே செய்வது நலம், ஒரு எண்ணம் பசுமையாக எழும்பியிருக்கும் பொழுது தான், அதைச் செயல்படுத்துவதற்கு ஏதுவான சூழ்நிலைகளும் கண் முன் நிற்கும். அதை செயல்படுத்துவதால் ஏற்படும் பல நன்மைகளையும் நாம் உணர முடியும். ஆரம்பத்தில் அதைப் பற்றி ஏற்படும் ஆர்வமும், ஆற்றலும் பன்மடங்காக ஒளி வீசும். அந்த எண்ணங்களை செயல்படுத்தாமல் சுமை போல மனதில் வைத்துக் கொண்டிருந்தால், புதிய எண்ணங்கள் உதிப்பதற்கே முட்டுக்கட்டை கொடுத்ததுபோல் ஆகிவிடும்.
முதலில் நம்மை பற்றி அறிந்து கொண்டால்தான் உலகத்தில் போராட முடியும். நம்மைப் பற்றிய புரிதல்தான் முதலில் தேவை. நம்மை ஓர் ஆற்றல் மிக்க மனிதனாக மாற்றி நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். எப்படி?
குயவர் பானை செய்யும் முன் மண்ணை பரிசோதிக்கின்றார்,
சிற்பி சிலை வடிக்கும் முன் பாறாங்கல்லைச் சோதிக்கின்றார்.
மிக சிறிய எறும்பு தன்னை விட அதிக பளுவான உணவு பொருளை தன வாயால் எடுத்து செல்வதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆற்றலைக் காட்டிலும் ஆர்வமே வெற்றிக்கு காரணம் என்பது அனுபவத்தின் படிப்பினை. உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சி, தோல்வியை கண்டு அஞ்சாத நெஞ்சம் இவை இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு தேவை.
"சந்தர்ப்பங்கள் வரும் என்று காத்திருப்பவர்களை விட, சந்தர்ப்பங்களைத் தேடிப் பெறுபவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்' என்கிறார் பெர்னாட்ஷா.
ஆகவே, என் அன்பின் தோழமைகளே... நாம் சாதிக்கப் பிறந்திருக்கின்றோம், சாதிப்போம் வாருங்கள்...

காணுவோம் கனவு...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...