
இன்னும் 5 வருடங்களுக்குள் அதாவது 2019 ஆம் ஆண்டளவில் ஓர் விண்வெளிப் படையை அமைத்து அதன் மூலம் பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வரும் விண்வெளிக் கழிவுகளைக் கண்காணித்து அழிக்க ஜப்பான் அரசு அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளது.
பழைய செய்மதிகள், ராக்கெட்டுக்கள் உட்பட விண்வெளிக் கழிவுகள் (space junks) வின்வெளிப் பயணத்துக்கான மிகப் பெரும் தடையாக வளர்ந்து வரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் தகவல் படி பூமியின் சுற்று வட்டப் பாதையில் தற்போது குறைந்தது 500 000 உடைந்த பாகங்கள் அல்லது கழிவுகள் (debris) 28 000 Km/h வேகத்தில் பூமியைச் சுற்றி வருவதாகவும் இந்தளவு வேகத்தில் ஒரு கோல்ஃப் பந்து அளவுடைய சிறிய பாகமே ஒரு செய்மதியை சுக்கு நூறாக உடையச் செய்ய வல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பூமியில் மனித இனத்தின் பல்வேறு தேவைகளுக்கு உதவி வரும் செய்மதிகளைப் பாதிக்கும் இக்கழிவுகளை அகற்றுவது இன்றைய வல்லரசு நாடுகளின் முக்கிய தேவையாக மாறியுள்ளது.
இதனால் 4 ஆவது போர்க்களம் என்றழைக்கப் படும் இந்த விண்வெளி இராணுவப் படையை அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து 2019 ஆம் ஆண்டிற்குள் அமைக்க முடிவு செய்துள்ளன. இப்படையின் முக்கிய இலக்காக பூமியின் சுற்று வட்டப் பாதையில் தற்போது பயணித்து வரும் மிக ஆபத்தான விண்வெளிக் கழிவுகளை நோட்டமிட்டு அழிப்பது என்பது அமையவுள்ளது. இதற்காக ஜப்பானின் ஒக்காயாமா பகுதியில் உள்ள தொலைக்காட்டி மற்றும் ரேடார் வசதிகளையும் இப்படை பயன்படுத்தப் படவுள்ளது.
2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான 'கிரேவிட்டி' (Gravity) இல் சிறிய ஒரு விண்வெளிக் கழிவினால் எவ்வாறு ஒரு செய்மதி சேதமடைந்து அதன் பின்னர் ஏற்பட்ட தொடர் எதிர் விளைவுகளால் (chain reaction) பிற செய்மதிகளும் சேதம் அடைந்து மிகப் பெரியளவில் விண்வெளிக் கழிவு உண்டாவது போன்று காட்டப் பட்டிருந்ததை அத்திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment