Monday, November 24, 2014

மின் விளக்கு தேர்வில் கவனித்தால் மின்சாரத்தை சேமிக்கலாம்


சாதாரண குண்டுபல்பில் மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்ப சக்தியாக மாறுகிறது. இதனால் மின்சக்தி வீணாவதோடு, புவியும் வெப்பமடைகிறது. குழல் விளக்குகள் (புளோரசன்ட் டியூப்லைட்), கம்பேக்ட் புளோரசன்ட் லைட் (சி.எப்.எல்.,), பயன்படுத்தினால் மின்சாரத்தை பெருமளவு சிக்கனப்படுத்தலாம். பெரும்பாலும் வெப்பம் அடையாது.இவை சாதாரண பல்பை விட 5 மடங்கு வெளிச்சத்தை தரும். உதாரணமாக 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பை பயன்படுத்தினால், ஒரு மணி நேரத்தில் 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். வெள்ளை ஒளியை தரும். சி.எப்.எல்., பல்பில் பயன்படும் பாதரச வாயு நச்சுத்தன்மை உடையதால், 'பியூஸ்' ஆனபின், அவற்றை உடைக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
எலக்ட்ரானிக் சோக்:

சாதாரண குழாய் விளக்குகளில் (டியூப்லைட்) 'பாலஸ்ட்' சோக்குகள் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் அல்லது அலுமினிய கம்பிகள் சுற்றப்பட்டிருக்கும். இதில் ஏற்படும் மின்தடையால், மின்சாரம் வெப்ப சக்தியாக வீணாகிறது. எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம். இதற்கு 'ஸ்டார்ட்டரும்' தேவையில்லை. சுவிட்ச் ஆன் செய்த உடனே எரியும். குறைந்த மின்னழுத்தத்திலும் செயல்படும். 50 ஹெட்ஸ் துடிப்புள்ள எலக்ட்ரானிக் 'சோக்' அதிக அதிர்வெண்ணுடைய மின் துடிப்பாக மாறுவதால், குழல் விளக்கு ஒளியில் 'பிளிக்கர்' இருக்காது. 'எபிசியன்சியும்' 20 சதவீதம் அதிகம்.
எல்.இ.டி., பல்பு:

குறைந்தளவு வெளிச்சம் தேவையுள்ள இடங்களில் 'ஹைபவர்' எல்.இ.டி., விளக்குகள் உபயோகிக்கலாம். 0.6 வாட்ஸ் எல்.இ.டி., 25 வாட்ஸ் சாதாரண பல்பு அல்லது 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பின் வெளிச்சத்தை அளிக்கும். மின்சாரம் இல்லாத இடங்களில் அவற்றை பாட்டரி மற்றும் சூரிய மின்கலன்கள் மூலம் இயக்கலாம். அந்த அளவிற்கு குறைந்த மின் சக்தியிலேயே இயங்கும். தற்போது கார் முகப்பு விளக்கில் கூட எல்.இ.டி., பயன்படுத்தப்படுகிறது. எல்.இ.டி., ஒளியில் வெப்பம் இருக்காது. இதன் செயல்திறன் 90 சதவீதம்.
எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்:

மின்விசிறி வேகத்தை குறைக்க ரெகுலேட்டர்களில் மின் தடை பயன்படுத்தப் படுகிறது. இந்த மின்தடை சிறிதளவு மின்சாரத்தை வெப்பமாக வீணாக்குகிறது. 
மின்விசிறிகளில் உள்ள பழைய மின்தடை ரெகுலேட்டர்களை மாற்றிவிட்டு, எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் உபயோகித்து மின்சாரத்தை சேமிக்கலாம். எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் மின்சார அலையின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தி மின்விசிறி வேகத்தை கட்டுப்படுத்தும். இதனால் மின்சாரம் மிச்சமாகும்.

மின் பாதுகாப்பு:

மின்சார ஒயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலமாக மேற்கொள்ளலாம். ஐ.எஸ்.ஐ., முத்திரையுள்ள மின்சார பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். ஈ.எல்.சி.பி.,யை (மின் கசிவு தடுப்பான்) பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனுக்குடன் மாற்றிவிட வேண்டும். பழுதான மின்சார சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டாம். குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் வீடுகளுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் சுவிட்சுகள், பிளக்குகளை அமைக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்ய வேண்டும். பழுது இருந்தால் உடனடியாக மாற்றிவிட வேண்டும்.
செய்யக்கூடாதது:

குளியலறை, கழிப்பறை, ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது. மின்கம்பம், அவற்றை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது. மழை, காற்றால் அறுந்துவிழுந்த மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. மின்வாரியத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். மேல்நிலை மின்சார கம்பிகளின் அருகில் குழந்தைகளை பட்டம் விட அனுமதிக்க கூடாது.டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புவேலி அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது. மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை மின்சார பணியாளர்களின் உதவியோடு அகற்ற வேண்டும். உபயோகத்தில் இல்லாத மின் சாதனங்களின் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.
தடுக்கும் பொருட்கள்:

மின் விபத்துகளில், அதற்குஉரிய தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மணல், ரசாயனப்பொடி, கம்பளி போர்வை, கரியமில வாயு போன்றவற்றை தீயணைப்பான்களாக பயன்படுத்தலாம். மின்விபத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க கூடாது. மின்விபத்து ஏற்பட்ட உடனே மெயின் சுவிட்சை நிறுத்திவிட வேண்டும். எந்த மின் 'சர்க்யூட்டிலும்' அளவுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தக் கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் மாற்றும்போது அதே அளவு, திறன் கொண்டவற்றை பொருத்த வேண்டும்.
மின்னலால் ஆபத்து:

மின்னலின்போது வெட்டவெளியில் இருக்கக் கூடாது. கான்கிரீட் வீடு, வாகனங்களில் தஞ்சமடையலாம். குடிசை வீடு, மரத்தடி, பஸ் ஸ்டாப் நிழற்கூரைக்குள் தஞ்சமடையக் கூடாது.மின்னலின்போது தஞ்சம் அடைய இடம் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளுக்கு செல்லலாம்.'டிவி,' மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் , மொபைல் பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...