Sunday, November 9, 2014

கனவுகளைக் கைப்பற்றுவோம்


அன்பு தோழமைகளே நலமா?
தொழில்முனைவோர்களுக்கான குணநலன்களான தன்னம்பிக்கை, இலக்கு நிர்ணயித்தல், கடின உழைப்பும் , விடா முயற்சி, தொழில் அறிவு, அணுகுமுறை, நேர மேலாண்மை, :படைப்புத்திறன், தரம்/ கண்காணிப்பு, பணியாளர்கள் நலனில் அக்கறை, நன்மதிப்பு, மனிதாபிமானம் ஆகியன குறித்து சுருக்கமாக பார்த்தோம் .இனி ஒவ்வொரு தலைப்புகளிலும் விரிவாக பார்ப்போம்..
ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது.அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.
அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார். ஆனால் ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.
ஏன்னா, அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிகிட்டு இருக்கார். அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியலையாம்.காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.
நம்ம எல்லாருமே இவரைப் போலத்தான்.நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது ஆனால் நாம் யாரும் அதை பயண்படுத்தாமல் கடவுளின் மீதும், விதி மீதும் பாரத்தை போட்டு விடுகின்றோம்..காணாத கடவுளிடத்தில் நம்பிக்கை வைக்கும் நாம் கண்ணால் காணக்கூடிய தன்னிலே ஏன் நம்பிக்கை வைக்க கூடாது, தன்னை நம்பாதவன் தெய்வத்தையும் நம்ப முடியாது, ஏனென்றால், தன்னம்பிக்கையில் பிறப்பதே தெய்வ நம்பிக்கையாகும், தன்னை நம்புவது மட்டும் இல்லை , தான் ஆராய்ந்து பார்த்து தொடங்கிய செயல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.இல்லை என்றால் தோல்வி மனப்பான்மை நம்மை சுற்றி சுற்றி வரும்
தோல்வி ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுவது அறிவீனம், தோல்விக்கு பயந்து முயற்சியே செய்யாமல் இருப்பது மூடத்தனமும், கோழைத்தனமும் ஆகும், நடக்கும் குழந்தை விழத்தான் செய்யும், விழுந்த குழந்தை எழாது என நினைக்க கூடாது, அது போல் வாழ்க்கை வெற்றி பெற வேண்டுமானால் தோல்விகளை சந்தித்தே ஆக வேண்டும், இந்த தோல்வியை வெல்ல ஒரே ஒருவரால் தான் முடியும் அவர் தான் தன்னம்பிக்கை.., எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பதற்கு ஒருவர் மனதில் இருக்க வேண்டிய பலத்தின் பெயர் தான் தன்னம்பிக்கை..தன்னம்பிக்கை என்பது தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை கொள்ளுதல் அல்ல.என்னால் முயற்சிக்க முடியும் , அம்முயற்சியில் வெற்றி காண முடியும் என்று திட்டவட்டமாக நம்புவது தான் தன்னம்பிக்கை மனித சமுதாய வரலாற்றைப் புரட்டி பார்த்தால் மாபெரும் சாதனைகள் தன்னம்பிக்கையின் அடிப்படையில் தான் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன.
வாழ்க்கை வாழ்வதற்கே என்பது சான்றோர் தம் கூற்று அதிலும் இன்புற்று வாழ வேண்டும் என்பது அனைவரின் எண்ணம் , இன்பமாக வாழ தன்னம்பிக்கை மட்டுமே ஊன்றுகோலாக திகழ்கின்றது. தடைகளை மீறி வெற்றிகளை அடைய முடிகின்றது, தன்னம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் ஒரு தெளிவான நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலாது , நம்மிடம் முதன்மை குணமும், தலைமைத் தகுதியும் இருப்பதாக முதலில் ஒரு கற்பனையை வளர்த்துக் கொள்ள வேண்டும், இந்த கற்பனைச் சக்தி இல்லையென்றால் இத்தகுதியை வளர்த்திக்கொள்ள முடியாது
விற்பனையாளர் ஒருவருக்கு தான் விற்பனை செய்யும் பொருட்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு துணிவோடு பேச முடியும், வாடிக்கையாளர் எச்சரிக்கை உணர்வு உள்ளவராக இருந்தால் அந்த அவநம்பிக்கையை சட்டென்று இனம் கண்டு விடுவார்.விற்பனையாளரின் எண்ணங்கள் அவரது ஆற்றலைக் குறைத்து விடுகின்றது, இதன் மூலம் தன்னம்பிக்கை எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
விதையிலிருந்து மரமும், முட்டையின் கருவிலிருந்து உயிர் சக்தியாம் பறவையும் வெளிப்படுகின்றன..அது போல் உங்களது பொருளாதார முன்னேற்றம் உங்கள் மனதில் உறைந்து கிடக்கின்றது நீர் உயர உயரத் தாமரையும் உயர்கின்றது, அது போல் தன்னம்பிக்கை உயர உயர மனிதன் உயர்கின்றான். அவனுக்கு உள்ள தன்னம்பிக்கையின் அளவை பொறுத்து அவனது வளர்ச்சி ஏற்ப்படுகின்றது, யானையின் பலம் தும்பிக்கையில் , மனிதனின் பலம் நம்பிக்கையில் இந்த நம்பிக்கையை கொண்டு வாழ்ந்தால் பல சாதனைகளை செய்ய இயலும்..
இளம்பெண் ஒருவர் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.
ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த போது, சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
"உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார்.
நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.
''தன்பெண்டு தன்பிள்ளை சோறுவீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டேன்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன்''
பாவேந்தர் பாரதிதாசன் பாடலில் உள்ள வரிகள் இவை. தன்னலமற்ற தன்னம்பிக்கை வேண்டும், சமுதாயத்திற்கும் , நாட்டிற்கும் நல்ல செயல்கள் செய்யவேண்டும் என்ற தன்னம்பிக்கையே இன்றைய இந்தியாவை வலிமைமிக்க பாரதமாக உருவாக்கும்..தன்னம்பிக்கை உள்ளவன் எதையும் சாதிப்பான் , எனவே தன்னம்பிக்கை என்னும் விதையை நெஞ்சில் விதைத்துக் கொண்டால் நாமும் உயரலாம் , வீடும், நாடும் நலம் பெறும்..

No comments:

Post a Comment