தனிமையிலே ‘இனிமை’ காணமுடியுமா? — ஞாநி
ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் முறை கேட்டை ஆ.ராசாவால் தனியாகச் செய்திருக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் நினைக்கிறார் என்று இப்போது தெரியவந்திருப்பது எனக்குப் புல்லரிக்கிறது. இப்படி ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு முன்பு யாரும் கொடுத்ததில்லை.
‘இளைஞன்’ பட விழாவில் பேசிய கருணாநிதி, ஊமைப்படக் காலத்தில் பகாசுரன் வதைக் காட்சிகளை தாம் பார்த்தபோது எப்படி அசுரனைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் சொல்லப்பட்டன என்று விவரித்துவிட்டு, அதேபோல ஒரு தனி நபர் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய்களைத் தனியாக அபகரித்திருக்க முடியுமா என்று சிந்திக்காமல், படித்தவர்களும் நம்புகிறார்களே என்று கேட்டிருக்கிறார்.
அடுத்தபடி அவர் சொன்னதைத்தான் ஆங்கிலத்தில் உளவியலில்ஃப்ராய்டியன் ஸ்லிப் என்பார்கள். தன்னையறியாமலே அடி மனத்தில் இருக்கும் உண்மையை உளறிவிடுவதுதான் அது. “எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் அந்தக் காரியத்தைச் செய்கிறான் என்றால் அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்யமுடியும். ‘எந்திரன்’ படத்தில் ரஜினி எப்படி ரோபோவாக வந்து இந்தக் காரியங்களைச் செய்கிறாரோ, அதைப்போல செய்ய முடியுமே தவிர, தனியாக ஒரு மனிதன் அப்படிச் செய்யமுடியாது என்பதை அறிவுபூர்வமாக இன்றைக்கு உணர்கிறோம்,” என்கிறார் கருணாநிதி!
புராண பகாசுரன் வேலைகளை இன்று விஞ்ஞான பூர்வமாகச் செய்ய முடியும் என்று கருணாநிதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்பவர் என்று 35 வருடங்களுக்கு முன்பே நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டவர் அவர்!
ராசாவோடு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாராக இருக்கும் என்று யூகிக்கும் வசதியை, நமக்கு நீரா ராடியா டேப்கள் அளிக்கின்றன. அவற்றைப் பற்றி ஒருபோதும் கருணாநிதி ஒரு வார்த்தை கூட சொல்லப்போவதே இல்லை.
தி.மு.க. சம்பந்தப்பட்ட முறைகேடு ஸ்பெக்ட்ரம் என்பது மட்டும் அல்ல. பல ஊழல்களில் அது ஒன்று. மிகப் பெரும் தொகைகளும், மிகப் பெரிய சூழ்ச்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.
ஆ.ராசாவும் டி.ஆர்.பாலுவும் தொடர்புடைய இன்னொரு மிகப் பெரும் முறை கேடினை தெஹல்கா இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராசா டெலிகாம் அமைச்சராவதற்கு முன்பு சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார். அவருக்கு முன்பு அந்தப் பொறுப்பில் பாலு இருந்தார். இருவர் கீழுமாக ஏழு வருடங்கள் அந்த அமைச்சகம் இருந்திருக்கிறது.
புதிய தொழில் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரும்போது அவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி மதிப்பிட்டுவிட்டு அனுமதி தருவதும்/ மறுப்பதும் அமைச்சகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று. அதற்கு முன்பு 20 வருடங்களில் நான்காயிரம் தொழில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் பாலு, ராசா இருந்த சமயத்தில் மாதம் 100 திட்டங்களுக்கு க்ளியரன்ஸ்…! இரண்டே வருடங்களில் 2000 திட்டங்களுக்கு ஒப்புதல்.
ராசாவின் தனிச் செயலாளராக இருந்து இப்போது விசாரிக்கப்படும் ஆர்.கே.சந்தோலியா, முதலில் அவருடன் சுற்றுச் சூழல் துறையில் இருந்தவர். ராசா- நீரா ராடியா நட்பு அப்போதுதான் ஆரம் பம். நாட்டின் இன்னொரு மூலையில் இருக்கும் ராசாத்தி அம்மாள், அவர் ஆடிட்டர் ரத்தினம் ஆகியோரின் நட்பு எல்லாம் ராடியாவுக்கு ஏற்படுவதற்கான வித்து, சுற்றுச் சூழல் துறையில் தொடங்குகிறது.
பாலு-ராசா ஆட்சியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அறிக்கைகள் தருவதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் கூறுகின்றன. சூழல் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான குழு உறுப்பினர்களாக, தமிழ்நாட்டிலிருந்து தமக்கு வேண்டியவர்களையே ராசா நியமித்த தாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
பாலு காலத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் நடத்தைக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. இவற்றை வகுப்பதில் தொழில் அதிபர்களுக்குச் சாதகமாக, பல முறைகேடுகளை பாலு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நடத்தைக் கோட்பாட்டை மீறினால் தண்டனை எதுவும் இல்லை. அது சுயக்கட்டுப்பாட்டுக் கோட்பாடு அவ்வளவுதான். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டைவிடப் பல மடங்கு அதிகமான பாதிப்பை சுற்றுச்சூழல் துறையில் நாட்டுக்கு தி.மு.க அமைச்சர்கள் ஏற்படுத்தியிருப்பதாக தெஹல்கா குற்றம் சாட்டியிருக்கிறது.
மன்மோகன்சிங் இரண்டாம் முறை பிரதமரானபோது பாலு, ராசா இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இது தயாநிதி மாறனின் விஷமப் பிரசாரம் என்று நீரா ராடியாவிடம் கனிமொழி சொல்கிறார். மாறனையும் பாலுவையும்தான் மன்மோகன் விரும்பவில்லை என்பது அவர் தரப்பு வாதம்.
ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்கால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரால் அதிகபட்சம் செய்ய முடிந்ததெல்லாம் பாலுவை அடுத்த முறை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டதுதான். ராசா ஒரு வழியாக விலகியதும் அந்தத் துறையை எந்த தி.மு.க. காரரிடமும் ஒப்படைக்காமல் தம் கட்சிக்காரரிடமே கொடுக்க முடிந்ததுதான்.
காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசால் தன் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது போல, தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. காரணம் கருணாநிதி சொன்னதாகத்தான் இருக்க முடியும்.“யாரும் தனி மனிதனாக அவ்வளவு பெரிய தொகையை எல்லாம் அபகரித்துவிட முடியாது” என்பது எவ்வளவு ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாக உதிர்ந்த பொன்மொழியாக இருக்க வேண்டும்! இந்தப் பகுத்தறிவு முடிவிலிருந்துதான் கூட்டணி தர்மம் என்ற கோட்பாடே உருவாகியிருக்க முடியும்.
கூட்டணி தர்மம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காங்கிரஸ் மகா ராஷ்டிரத்தில் தம் முதலமைச்சரை ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு ஊழலுக்காக விலக வைத்ததுபோல, தமிழகத்தில் கருணாநிதியை வீட்டு வசதி வாரிய ஊழலுக்காக விலகச் சொல்லலாம். ம்ஹூம் முடியாது. கருணாநிதி கூட்டணி தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். அதனால்தான் தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு முறைகேட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் உரிய பங்கு கொடுத்துவிடுகிறார். சென்னையில் சொந்த வீடு இருக்கும் காங்கிரஸ் பெண் எம்.எல். ஏ.வுக்கு, விதிகளை மீறி வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்படுகிறது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் வெளிக் கொணர்ந்திருக்கும் இந்தத் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன….. என்று சொல்லமாட்டேன். இந்த ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் நமக்கு அதிர்ச்சி.
கருணாநிதி ஆட்சியில் சமூக சேவகர்களின் எண்ணிக்கை ஒரேயடியாக எகிறிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் வேலை செய்யும் ஒருவர் சமூக சேவகராம். உடனே வீடு ஒதுக்கீடு. ஓர் அமைச்சரின் மருமகள், பேத்தி எல்லோரும் சமூக சேவகர்கள்! சட்ட மன்ற தி.மு.க. கொறடாவின் மனைவி சமூக சேவகி! முதல்வரின் செயலாளர் மகள் சமூக சேவகி! ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன், ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் எல்லோரும் சமூக சேவகர்கள்!! முதலமைச் சருக்கு செக்யூரிட்டி வேலை செய்தால் அவர்கள் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்!”
இப்படிக் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள வீட்டு மனை, வீடுகளை கருணா நிதியின் அரசு, தமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் சுண்டல் மாதிரி விநியோகித்திருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டால் மும்பையின் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழல் ஜுஜூபி.
ஆனால், தான் ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்து, ஏழைகளோடே பழகி ஏழைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன் என்று கூசாமல் பேசுகிறார் கருணாநிதி.
சொத்துக் கணக்கு கேட்டால், உடனே தான் ஒன்றும் ஏழையாகப் பிறக்கவில்லை என்றும் அந்தக் காலத்திலேயே பக்கத்து ஊர் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கும் வசதியுடன் பிறந்ததாகவும் சொல்லிக் கொள்கிறார்.
கருணாநிதியின் சமீப பேச்சுகள் ஒரு பக்கம் சிரிப்பையும் இன்னொரு பக்கம் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. அவருடைய மொத்த சொத்து மதிப்பு வெறும் ஆறு கோடி ரூபாய்தானாம். அப்படியானால் எப்படி அவர் மகன் அழகிரியின் சொத்து மதிப்பு 13 கோடியாக ஆயிற்று? ஸ்டாலினின் சொத்து மதிப்பு 13 கோடியாயிற்று? இருவரும் படித்த காலத்திலிருந்து ஒரு வேலைகூட பார்த்ததில்லை. எங்கேயும் பெரிய சம்பளம் வாங்கியதில்லை. என்ன தொழில் செய்தார்கள்? முதலீடுகள் எங்கிருந்து வந்தன? கனி மொழிக்குச் சொத்து மதிப்பு எப்படி 8 கோடி 45 லட்சம் ஆயிற்று? அவர் பார்த்த வேலை, வாங்கிய சம்பளம் என்ன? பாட்ஷா, அண்ணாமலை,சிவாஜி, எந்திரன் வசனகர்த்தாக்களுக்குத் தருவதைவிடப் பல மடங்கு அதிகமாக வசனகர்த்தா கருணாநிதிக்கு 50 லட்சம் சம்பளம் தரும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கனிமொழியின் கவிதைக்கு 5 லட்சம் யாராவது தருகிறார்களா என்ன? கருணாநிதியின் பேரன்கள் எல்லாம் கல்லூரியிலிருந்து வந்த உடனே கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் வரிசையாக சினிமா எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்… எப்படி?
கருணாநிதி எழுதவேண்டிய அடுத்த புத்தகம்: ‘நூறே நாட்களில் கோடீஸ்வரனாவது எப்படி?’ தனியே தன்னந்தனியே ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தை உருவாக்கிய அந்தச் சாதனை ரகசியத்தை மட்டும் தமிழக மக்களுக்கு அவர் தெரிவித்துவிட்டால், உலகம் அழியும்வரை அவருக்கு நன்றி விசுவாசத்தோடு அத்தனை தமிழர்களும் இருப்பார்கள்.
No comments:
Post a Comment