Thursday, November 27, 2014

மக்கள் செய்யும் டாப் 5 வீண் செலவுகள்

ஒஹோ என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் சில வருடங்களுக்குமுன் சடசடவென சரிந்தபோது, அதற்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அந்நாட்டு மக்களின் ஊதாரித்தனத்தைத்தான். கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி வாங்கிக் குவித்ததால் வந்த அவல நிலை இது என்றார்கள். வீண்செலவுகள் ஒரு நாட்டை எப்படி பதம் பார்த்து விடுகிறது என்பதற்கு வாழும் உதாரணமாகிப் போனது அமெரிக்கா.
இப்போது இந்தியா விலும் அந்த மனப்போக்கு குடியேறி வருவதாக எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஷயம் தெரிந்த நிபுணர்கள். நம் கண்முன்னே நடப்பதைப் பார்த்தால் அது உண்மைதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நம் மக்கள் செலவு செய்யும் விதத்தில் சமீப காலமாக பயங்கர மாறுதல்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க முடியாதே! செலவு செய்யாமல் காசை மூடி மூடி வைத்தால் என்ன பிரயோஜனம் என இன்றைய இளைய தலை முறையினர் கேட்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், நம்மவர்கள் செய்கிற செலவுக் கணக்கை பார்த்தால் நமக்கு மலைப்பே ஏற்படுகிறது. இன்றைய நிலையில் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை அநாவசிய செலவு செய்வதாக புள்ளிவிவரங்கள் சொல்வது கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.
டாப் 5 அநாவசிய செலவுப் பட்டியல்:
1. ஷாப்பிங்:
ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள் ஆண், பெண் இரண்டு தரப்பும். சம்பளம் வாங்கிய முதல் நாளே ஷாப்பிங் கிளம்பிவிடுவோம் என பலரும் சொல்லியிருக்கிறார்கள். கூடுதலாக வரும் போனஸ் மற்றும் இதர வருமானங்களை கொண்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குகிறார்களாம். இது குடும்பத்திற்கு அவசியமில்லாத செலவுதான் என்றாலும் ஆசைக்காக வாங்குவதாக ஒப்புக் கொள்கிறார்கள். குறிப்பாக ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் வாங்குவதை வீண் செலவாகக் கருதி முதலிடம் கொடுத்திருக்கிறார்கள் பெண்கள்.
2. செல்போன்:
செல்போனுக்கான செலவை அடுத்ததாகச் சொல்லியிருக்கின்றனர். ரீசார்ஜ் செய்வதிலேயே பர்ஸில் முக்கால் வாசி பணம் காலியாகிவிடுகிறதாம். அதுவும் பத்து ரூபாய், ஐந்து ரூபாய்க்குக்கூட ரீசார்ஜ், டாப் அப் போன்ற வசதிகள் இருப்பதால் சில்லறை சில்லறையாகவே ஒரு மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிடுகிறதாம். ரீசார்ஜ் தவிர, லேட்டஸ்ட் சினிமா பாடல்களை டவுன்லோட் செய்வது, அடிக்கடி காலர் டியூன் பாட்டுகளை மாற்றுவது, அடிக்கடி மொபைல் போனையே மாற்றுவது போன்றவற்றுக்கும் எக்கச்சக்கமாக செலவு செய்வதாக தெரிவித்தனர். செல்போன் செலவு விஷயத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற பாகுபாடே பார்க்க முடியவில்லை என்பது முக்கியமான விஷயம்.
3. சினிமா:
அடிக்கடி சினிமா தியேட்டருக்கு செல்வதை முக்கியமான அநாவசியச் செலவாக சொல்லியிருக்கிறார்கள் ஆண்கள். தங்களுக்குப் பிடித்த ஹீரோவின் திரைப்படம் வந்தால் முதல்நாள் முதல் ‘ஷோ’விற்கு அதிகப்படியான பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் பழக்கம் இன்னும் பலரிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பெண்கள் இந்த விஷயத்தில் பரவாயில்லை; புதுப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் என்பதில் அவர்கள் ஓரளவுக்கு மட்டுமே ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். எப்படியும் கொஞ்சநாளில் இதே திரைப் படத்தை டி.வி.யிலோ அல்லது சிடி வாங்கியோ பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள். 
4. ஓட்டல்:
ஆண், பெண் என பேதமில்லாமல் இருவரின் அநாவசிய செலவு பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது ஓட்டல். முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டவர்கள் இப்போது வாரத்தின் இறுதிநாளில் ஓட்டலுக்குப் போவது கட்டாயமான விஷயமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் சிறிய ஊர்களிலும் இந்தப் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறங்களில் பீட்ஸா, சைனீஸ், ஃபாஸ்ட் புட் போன்ற உணவு விடுதிகளுக்குப்போவதால் செலவு றெக்கை கட்டிவிடுகிறது.
5. நொறுக்குத் தீனிகள்:
இந்த செலவுகளுக்கு இரண்டு தரப்பினருமே முக்கியத்துவம் தருகின்றனர். என்றாலும் இதில் ஆண்களின் செலவு அதிக மாக இருக்கிறது. டீ, காபி மற்றும் நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது செய்யும் சில்லறை செலவுகள் அநாவசியமாக இருப்பதாகச் சொல்லியுள்ளனர். பாக்கெட் மணியை காலி செய்வதில் டீ கடைகளின் பங்குதான் பிரதானம் என்கிறார்கள் ஆண்கள். பெண்கள் டீ கடைகளை குறிப்பிடவில்லை என்றாலும் நொறுக்குத் தீனிகளுக்கு அநாவசியமாக செலவு செய்வதாகச் சொல்கிறார்கள். 
நமக்கு எது தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குள் வாழப் பழகுவதும், செலவுகளில் ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும் பல அநாவசிய செலவுகளைத் தவிர்க்க உதவும். எந்த வேலையையும் சரியான நேரத்தில்செய்து முடித்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். மின்சாரக் கட்டணம், கல்லூரி, பள்ளிக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்திவிட்டால் அபராதத் தொகை போன்ற அநாவசிய செலவுகள் ஏற்படாது.
திட்டமிடலும், அதனை உரிய நேரத்தில் செயல்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதும் நம்மை அறியாமல் செய்யப்படும் செலவுகளைக் குறைப்பதும், கணிசமான தொகை நம் கையில் நிற்க உதவும். உதாரணமாக, ஊருக்குச் செல்லவேண்டும் எனில் முன்பே டிக்கெட் புக் செய்துவிட்டால் அந்த செலவு மட்டும்தான் ஆகும். கடைசி நேரத்தில் அவசரமாக டிராவல்ஸ் மற்றும் தத்கல் முறைகளில் டிக்கெட் எடுத்துப் போவது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். இதுவும்கூட அநாவசிய செலவுதான். அவசர காலங்களில் இது போன்று செய்யலாமே தவிர மற்ற நேரங்களில் திட்ட மிடலே நமக்கு பணத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.
பிராண்டட் பொருட்களை வாங்கும்போது கூடுதல் பணம் செலவு செய்ய நேரிடும். எந்த ஒரு பொருளையும் ஆசைக்காக வாங்காமல் அவசியத்திற்காக வாங்கினாலே பல ஆயிரங்கள் மிச்சப்படும். ஒழுக்கமான வளர்ப்பு முறையே இந்த அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த சிறந்த வழி. 
அளவுக்கு அதிகமாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, மற்றவர்களுக்கு பார்ட்டி கொடுப்பது, அதிகப்படி யான உணவுப் பொருட்களை வாங்குவது, அதிகளவில் டிரஸ் எடுப்பது மற்றும் வெளியில் சென்று உணவு உண்பது இவைதான் அநாவசிய செலவு களாக நான் சொல்வேன். புதிதாக எது வந்தாலும் உடனே வாங்கிவிடுவதுகூட அநாவசிய மான செலவுதான். அந்தப் பொருள் நமக்கு தேவையா என்றுகூட நாம் பார்ப்பது கிடையாது. மற்றவர்கள் நம்மை கண்டு ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் பல பொருட்களை வாங்கிக் குவிக் கிறோம். இதெல்லாம் அநாவசியச் செலவுகள்தான்.

பல நெருக்கடிகளையும் சமாளித்து ஈட்டப்படும் வருமானத்தை ஏன் அநாவசியமாக செலவு செய்ய வேண்டும் என்று ஒருசாராரும், வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமெனில் சில செலவுகளை செய்வதில் தப்பே இல்லை என்று இன்னொரு சாராரும் கூறுவது தவறில்லை தான். ஆனால், எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தையும் சேமிக்க வேண்டும்; அதே நேரத்தில் சந்தோஷமான ஒரு வாழ்க்கை யையும் வாழவேண்டும் என்பது நம்மக்களின் விருப்பமாக இருக்கிறது. எல்லை மீறாத செலவுகளும், பாதுகாப்பான சேமிப்புமே அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதைப் புரிந்து செயல்பட்டால் எந்த செலவும் அநாவசிய செலவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...