அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் உள்பட 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட மாட்டார்கள். இது தொடர்பாக ஒபாமா விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க நாட்டில் 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வசித்து வருகிறார்கள். இது 2008-ம் ஆண்டு நிலவரம். 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்களும் சட்டவிரோதமாக அங்கு குடியிருப்போர் பட்டியலில் அடங்குவார்கள். இப்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்போரின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் என்பது அந்த நாட்டின் ஜனாதிபதியான ஒபாமாவின் விருப்பம்.
ஆனால், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி மறுத்து வருகிறது. இப்போது சமீபத்தில் நடந்த தேர்தல்களுக்கு பின்னர் இரு சபைகளிலும் அந்த கட்சி மெஜாரிட்டி பெற்று, அதன் கை ஓங்கி உள்ள நிலையில், ஒபாமா விருப்பப்படி சட்டம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் சமீபத்திய தேர்தலில் ஜனநாயக கட்சி தோல்வியை தழுவிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய ஒபாமா, பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருந்தாலும், குடியுரிமை சீர்திருத்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பாராளுமன்றத்தின் முடிவை நிராகரிப்பேன் என திட்டவட்டமாக அறிவித்தார். இந்த நிலையில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்போர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குடியுரிமை விதிகள் தொடர்பாக ஒபாமா இந்த வார இறுதிக்குள் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட மாட்டார்கள். அமெரிக்காவில் தங்கள் பிள்ளைகளுடன் 5 ஆண்டுகளாகவோ அல்லது 10 ஆண்டுகளாகவோ வசித்து வரும் பெற்றோருக்கும் இது பொருந்தும் என தெரிகிறது. இது தொடர்பாக ஒபாமாவுக்கு நெருக்கமான ஒருவர், ஜனநாயக கட்சி எம்.பி.க்களுடன் விவாதித்ததாகவும் தெரிகிறது.
ஏற்கனவே ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் மெஜாரிட்டி தலைவர் ஹாரி ரெயிட், ஒபாமா குடியுரிமை சீர்திருத்தம் செய்ய உகந்த தருணம் இது என்று கடந்த திங்கட்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment