வியென்னா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில் எந்த எந்தக் காரணிகள் சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கான சதவீதத்தைத் தூண்டுகின்றன என்பது குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.
இதன் மூலம் வெயில் கொழுந்து விட்டு எரிக்கும் நண்பகல் நேரப் பொழுதுகளில் அதிகளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்ற அதிர்ச்சியான உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர்.
அதாவது வெயில் சுட்டெரிக்கும் தருணங்களில் மனிதர்களின் மனநிலையைப் (moods) பாதிக்கக் கூடிய செரொட்டொனின் (Serotonin) என்ற ஹர்மோன் தூண்டப் படுவது இத் தற்கொலைகளின் வீதம் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் எனப் பெரும்பாலும் ஊகிக்கப் படுகின்ற போதும் இதற்கு உறுதியான ஆதாரத்தைத் திரட்ட முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சுடும் சூரிய வெளிச்சம் 14 தொடக்கம் 60 நாட்கள் நீடித்தால் இவ்வீதம் சடுதியாகக் குறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் சூரிய வெளிச்சம் தாக்கும் நேரத்தில் இத்தற்கொலை முடிவுகளை எடுப்பவர்களில் அதிகபட்சம் பெண்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
முன்பு நிலவிய மரபுப் படி இம்முடிவுக்கு எதிர் மாறாக இருள் சூழ்ந்த நீண்ட காலத்தின் போது தான் மனிதர்கள் மத்தியில் மன அழுத்தம் (depression) அதிகரிக்கும் எனக் கருதப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த ஆய்வு ஜனவரி 1, 1970 ஆம் ஆண்டு முதல் மே 6 2010 ஆண்டு வரை கடந்த 40 வருடங்களில் ஆஸ்ட்ரியா நாட்டில் தற்கொலை செய்து கொண்ட சுமார் 69 000 பேர் மத்தியில் மேற்கொள்ளப் பட்டது. இதன் போது 86 வானியல் அவதான நிலையங்கள் உதவியுடன் சூரிய வெளிச்சம் நிலவும் நேரம் அனுமானிக்கப் பட்டு அத்தருணத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் பெறப் பட்டது. இந்த எண்ணிக்கையை மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment