Tuesday, November 25, 2014

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் மத்திய அரசுக்கு ரூ.83 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., பகீர் தகவல்



 செயல்படாத சிறப்பு பொருளாதார மண்டலங்களால், மத்திய அரசுக்கு ஆறுஆண்டுகளில், 83 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தெரிவித்து உள்ளது.

இதுகுறித்த அறிக்கை விவரம்: நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கடந்த 2007 - 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், 50 சதவீதம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதாவது, இந்த நிலத்தில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வரிச்சலுகைகளை பெற்ற நிறுவனங்கள், தொழிலை துவக்காமல் உள்ளன. தகுதியற்ற சில நிறுவனங்களுக்கு, இந்த மண்டலங்களில் வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில நிறுவனங்கள், அனுமதி பெற்றதற்கு மாறாக, வேறு வகையில் நிலத்தை பயன்படுத்தி வருகின்றன. இதனால், இந்த மண்டலங்களில், தொழில் துறை உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலைவாய்ப்பும், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரவில்லை. மொத்தத்தில், அரசு எந்த நோக்கத்திற்காக சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கியதோ, அந்த இலக்கு எட்டப்படவில்லை. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சி.ஏ.ஜி.,யின் இந்த அறிக்கை, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பெரும் சர்ச்சையை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதையும் சேர்த்தால்...:

சிறப்பு பொருளாதார மண்டலங்களில், செயல்பாட்டிற்கு வராத நிறுவனங்களுக்கு அளித்த, நேரடி மற்றும் சுங்க வரி சலுகைகள் மூலம், மத்திய அரசுக்கு, 83,104 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அந்நிறுவனங்கள், அம்மண்டலங்களை விட்டு வெளியே தொழிற்சாலைகளை அமைத்திருந்தால், அரசுக்கு, உற்பத்தி மற்றும் சேவை வரிகள் வாயிலாக வருவாய் கிடைத்திருக்கும். அந்த வகையிலும், மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆக, இவ்வகை மண்டலங்கள் வாயிலான வரி வருவாய் இழப்பு, 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டக் கூடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...