ஜூன் 1 முதல் சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால் பலவிதமான கட்டணங்கள் கடுமையாக உயரப் போகின்றன.கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். அது கடந்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர் 1 முதல், ‘தூய்மை பாரதம்‘ திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ‘கிரிஷி கல்யாண்’ எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடுவதற்காக, சேவை வரி, மேலும் 0.5 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூன் 1 முதல் சேவை வரி விகிதம் மீண்டும் உயர்கிறது. அது இனி, 15 சதவீதமாக இருக்கும்.சேவை வரி உயர்வதால், கோடிக்கணக்கான மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இனி கூடுதல் கட்டணத்தை செலவிட வேண்டும். அதேபோல, குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் சாப்பிடுவோரும், ‘பார்’களுக்கு செல்வோரும் கூடுதலாக செலவிட வேண்டும். மேலும், ஓட்டல்களில் தங்கும் கட்டணம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணம், விமான கட்டணம், கிரெடிட் கார்டுசேவை கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கின்றன.
நிறுவனங்கள் மீதான வரி மக்கள் தலையில் ஏற்றப்படும் கொடுமை
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள சில தனியார் துறைகளிடம், அவர்கள் அளிக்கும் சேவைக்காக மத்திய அரசு, சேவை வரி வசூலிக்கிறது. ஆனால், இதை நுகர்வோர் தலையில் தான் அந்த நிறுவனங்கள் கட்டுகின்றன. சேவை வரி, 1999ம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் கீழ், மறைமுக வரி விதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.மத்தியில், பாஜக ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில், சேவை வரி 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் சுகாதாரம், விவசாய வளர்ச்சி போன்ற பிரதான துறைகளில் மத்திய அரசு தனது பொது முதலீட்டைப் படிப்படியாக சுருக்கிக் கொண்டது.
அதற்குப் பதிலாக மக்களின் தலையில் வரிச் சுமையை ஏற்றி, அதற்கான செலவினங்களை ஈடுகட்டப் போவதாக கூறுகிறது.மத்திய அரசு தூய்மைபாரதம் என்ற பெயரில் செஸ் வரியாக 0.5 சதவீத வரியை உயர்த்தியதைப் போல கிரிஷி கல்யான் செஸ் மூலம் சேவை வரியின்அளவு 15 சதவீதமாக உயர்ந்து மக்களின் பணத்தைத் தொடர்ந்து பறிக்க தயாராகிவிட்டது. இந்தவரிகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காக என்றாலும், வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வரியாக மட்டுமே செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜூன் 1ஆம் தேதி முதல் கிருஷி கல்யாண்வரி உள்பட 15 சதவீத சேவை வரி அமலாக்கப்படுவதால் மொபைல் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தும் போதும் நாம் 15 சதவீதம் என்ற அதிகளவிலான சேவை வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.
ஜூன் 1ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல், பிட்சாஹட், டாமினோஸ் போன்ற உணவகங்களிலும் 15 சதவீத சேவை வரி வசூல் செய்யப்படும்.பயணம் விமான டிக்கெட், ஆன்லைன் மூலம் பஸ் டிக்கெட் புக்கிங், ரயில் டிக்கெட் புக்கிங் எனப் பல்வேறு பயணச் சேவைகளிலும் 15 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். குறிப்பாகப் பிசினஸ் கிளாஸ் பயணிகளின் விமானக் கட்டணங்கள் உயரும்.இன்சூரன்ஸ், வங்கியில் லோன் பெறும்போது சேவைக் கட்டணம் என அனைத்து விதமான வங்கிமற்றும் இன்சூரன்ஸ் சேவைகளுக்கு 15 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.சேவை வரி உயர்வினால் கேப் மற்றும் டாக்ஸிகட்டணங்களும் உயரும். இதனால் ஆன்லைன் மற்றும் மொபைல் செயலி மூலம் டாக்ஸி புக் செய்வது கடும் கட்டண உயர்வாக மாறும்.டிடிஎச் சேவை, பியூட்டி பார்லர், இன்சூரன்ஸ், பங்குச் சந்தையின் வர்த்தகக் கட்டணங்கள், கொரியர் சேவை, சலவை சேவை ஆகியவற்றின் கட்டணங்களும் உயர உள்ளது.அதுமட்டுமல்லாமல் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள், மதுபானம், சிட் ஃபண்ட், லாட்டரி, இசைக் கச்சேரி, திரைப்படம் மற்றும் தீம் பார்க் கட்டணங்களும் உயரப் போகின்றனசிகரெட் மீதான சேவை வரியை மீண்டும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சிகரெட் விலை ஜூன்1ஆம் தேதி முதல் உயரும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment