நமது வீட்டில் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சாஸ்திரிகளை அழைத்து நடத்தித்தர கேட்டுக் கொள்கிறோம். சாஸ்திர சம்ப்ரதாயங்கள் மீது நம்பிக்கை குறைந்து வரும் இந்நாட்களிலும் இவைகளை விட்டுவிடாமல் சாஸ்திரிகள் கேட்கும் தட்சிணை எவ்வளவாக இருந்தாலும் தம் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் ஒரு குறையும் இருக்கக்கூடாது என்று கருதி நன்கு கற்ற வேத வித்துக்களை இந்நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள்.
சமீபத்தில் வேத பாராயண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஆறு அல்லது ஏழு வேத விற்பன்னர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் செல்போன்கள் இருந்தன. ஒரு சில சாஸ்திரிகளிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செல் போன்களும் இருந்தன. தமது இடுப்பை சுற்றி பாம் கட்டிக் கொண்டிருப்பது போல மூன்று நான்கு செல்போன்கள் கட்டப்பட்டிருந்தன. அதில் ஒருவரின் செல்போன் குறுஞ்செய்தி வருவதை குறிக்கும் வகையில் செல்லமாக சிணுங்கியது. வேதம் ஓதிக்கொண்டிருந்தாலும் அவரால் வந்த செய்தி என்ன என்று பார்க்கும் அவாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த செல்போனை இடுப்பிலிருந்து உருவினார். போனில் வந்திருக்கும் செய்தியை படித்துவிட்டு ஒரு புன்னகையோடு அந்த போனை அடுத்த சாஸ்திரிகளிடம் கொடுக்கிறார். அவர் முகத்திலும் ஒரு சிரிப்பு. இப்படியாக அந்த போன் அனைவர் கையிலும் தவழ்ந்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்தடைகிறது. வேதம் ஓதுவதை விட்டுவிட்டு அனைவரும் ஜோக்கை ரசித்தது என் மனதை ஆழமாக காயப்படுத்தியது.
ஸ்ரத்தையாக வேதம் ஓதவேண்டும் என்பதால்தான் கிருஹஸ்தர்கள் இவர்களை கௌரவித்து அழைத்து வேதம் ஓத கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெறும் வேத சப்தம்தான் முக்கியம் என்றால் வீட்டில் ஒரு வேத கேசட்டை போட்டு கேட்டுக்கொண்டிருக்கலாமே? இவர்கள் எதற்கு?
மற்றுமொரு சுப நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அப்பொழுது அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த சாஸ்திரிகளின் செல் போன் அடிக்கிறது. அதை உடனே எடுத்த சாஸ்திரிகள் மறுமுனையிலிருந்து வந்த செய்தியை கேட்டுவிட்டு சற்றும் தயங்காமல் “ஐயய்யோ! எப்போ எடுக்கிறா?" என்கிறார். எப்படி இருக்கும் அங்கிருப்பவர்களுக்கு? சற்று யோசியுங்கள். இந்த மாதிரி நிகழ்வுகளை பலமுறை நான் சந்தித்துள்ளேன்.
செல் போன் என்பது இக்காலத்திற்கு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதே சமயத்தில் சுப அசுப நிகழ்ச்சிகளில் மிகவும் ஸ்ரத்தையாகவும் கவனமாகவும் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் உச்சரிக்கப்படாமல் போவதற்கும், ஸ்ரத்தை குறைவதற்கும் இந்த செல் போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது இந்நாட்களில். பொதுவாக காலை நேரத்தில் சாஸ்திரிகள் தங்களது தொழிலில் மும்முரமாக இருப்பார்கள். கிருஹஸ்தர்கள் இந்த நேரத்தில் அவர்களை தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் அதுவே ஒரு பெரிய தொண்டு. தவிர்க்க முடியாத சூழலில் அப்படி போன் வந்தாலும் சாஸ்திரிகள் பூஜை நடக்கும் இடத்திலிருந்து சற்று நகர்ந்து சென்று மெதுவாக பேசினால் நன்று.
சாஸ்திரிகளும் மந்திரம் ஓதும் சமயத்தில், பூஜை செய்யும் சமயத்தில்,வேத பாராயண சமயத்தில் செல் போன்களை தவிர்த்தால் அது நமது சம்ப்ரதாயத்திற்கும், மந்திரங்களுக்கும், வேத மாதாவிற்கும், கிருஹஸ்தர்களுக்கும் அவர்கள் கொடுக்கும் சிறந்த மரியாதை என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இது ஒரு ஆதங்கத்தால் எழுதப்பட்டதே தவிர குற்றம் கூறும் நோக்கத்துடனோ அல்லது மனதை புண்படுத்தும் நோக்கத்துடனோ எழுதப்பட்டது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இது ஒரு ஆதங்கத்தால் எழுதப்பட்டதே தவிர குற்றம் கூறும் நோக்கத்துடனோ அல்லது மனதை புண்படுத்தும் நோக்கத்துடனோ எழுதப்பட்டது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment