Monday, May 30, 2016

டுபாக்கூர் இயற்கை அங்காடிகளின் ஸ்தல புராணம்...

ஊரெங்கும் ஆர்கானிக் கடைகள், இயற்கை அங்காடிகள் வந்தவண்ணம் இருப்பதால் முதலில் எவையெல்லாம் ஆர்கானிக், எவையெல்லாம் டுபாக்கூர், உண்மையில் இந்த சந்தை நெறிப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று பார்ப்போம்.
மத்திய அரசு, NPOP எனப்படும் National programme for Organic Production பரிந்துரைகள் மூலம் APEDA வாயிலாக (Agricultural & Processed Food Products Export Development Authority) ஆர்கானிக் சான்றிதழ் வழங்கும் முகவாண்மை அமைப்புகளுக்கு (Certifying agencies) அனுமதி அளிக்கிறது. இது உலகளாவிய தரத்தில் இருப்பதால் ஐரோப்பிய யூனியன் மற்றும் சுவிட்சர்லாந்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவுக்கான தரம் அவர்களது USDA (United States Dept of Agriculture) வாயிலாக NOP (National Organic Program) மூலம் தரப்படும் பரிந்துரைகளின்படி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியாவில் ECOCERT, INDOCERT, India Organic, Bureau Veritas, OneCert, SGS Organic, ISCOP, Aditi, IMO Control, Control Union, Vedic Organic, FoodCert, NOCA, InterTek, Lacon Quality போன்ற பல சான்றிதழ்களும் தமிழக அரசின் TNOCD (TN Organic Certification Dept.) மூலமும், மேலும் அந்தந்த மாநில அரசுகளின் துறைகள் மூலமும் Accreditation வழங்கப்படுகிறது.
முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மேற்கண்டவற்றில் ஏதோ ஒரு சான்றளிப்பு நிறுவனத்தில் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் எந்தவொரு இரசாயன இடுபொருட்களையும் பயன்படுத்தாமல் இருந்து அதன்பின்னர் மேற்கொள்ளப்படும் மண், நீர் மற்றும் விளைபொருட்களின் ஆய்வுகளில் இரசாயனங்கள், MRL எனப்படும் Maximum Residue Limits-க்கு கீழ் இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்றிதழ் கிடைக்கும். இல்லாவிடில் மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பண்ணையில் பயிரிடப்படும் பயிர்களை அந்தந்த சான்றளிப்பு முகவாண்மை மூலமாக APEDA-வின் TraceNet-இல் பதிவு செய்துகொள்வதோடு உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரியின் சிட்டா அடங்கலிலும் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிலத்தின் சர்வே என்னுடன் GPS Coordinates-ம் ஏற்றப்பட்டு ஒரு உத்தேச மகசூல் நிர்ணயிக்கப்படும். அதாவது ஒரு ஏக்கர் ஆர்கானிக் வாழை பயிரிட பதிவு செய்துகொண்டால் நடவு செய்த தேதி முதல் தோராய அறுவடைக் காலம் மற்றும் மகசூல் TraceNet-இல் குறிக்கப்படும். அந்த பண்ணையிலிருந்து இந்த பயிரை அறுவடை செய்து இன்னாருக்கு, இத்தனை டன், இன்ன வாகனம் மூலம் அனுப்பப்பட்டது என்ற Transfer Certificate (TC) வாங்கிச்செல்லும் நபர்/நிறுவனம் மீது தரப்பட்டால் மட்டுமே அது ஒரு ஆர்கானிக் விளைபொருளாக ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் ஒரு ஏக்கருக்கு சான்றிதழை வைத்துக்கொண்டு, ஐநூறு டன் விளைபொருளை விற்று ஏமாற்றமுடியாது.
உங்களுக்கு விற்கப்படும் பொருள், ஆர்கானிக் என்று பிரீமியம் விலை கோரும்பட்சத்தில் TraceNet வாயிலாக அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள TC இருக்கிறதா என்று கேட்டு உண்மையை அறிக. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றளிப்பு நிறுவனங்களின் வணிக இலச்சினை பொறிக்கபட்டதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்க.
பல கடுமையான சோதனைகளைத் தாண்டி சந்தைக்கு வரும் ஆர்கானிக் பொருட்கள் மிக அதிக பிரீமியம் விலைக்குத்தான் விற்கப்படுகின்றன. IMO Control சான்றிதழ் கொண்ட ஆர்கானிக் தேயிலை 50 கிராம் இன்று சந்தையில் 450-500 ரூபாய்க்குக் கிடைக்கிறது. சாதாரண த்ரீ ரோசஸ் தேயிலை 50 கிராம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும். அதிலும் ஒரு பச்சைநிற தவளையின் படத்தை வணிக இலச்சினையாகக் கொண்ட Rainforest Alliance சான்றளிப்பு பெற்ற பொருட்களின் விலையைத் தேடி பார்க்கவும். சும்மா ஏசி அறைக்குள் ஒரு கீற்றுக்கொட்டகையைப் போட்டு, 'நாங்கள் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை அதனால் இதெல்லாம் ஆர்கானிக்' என்பதெல்லாம் எந்த வகையில் வரும் என்று தெரியவில்லை. ஆர்கானிக் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவைகள், விலங்குகள் free-range ஆக இருக்கவேண்டும் என்பதோடு Adequate facilities for expressing behavior in accordance with the biological and ethological needs of the species என்பது கட்டாயம். ஆனால் இன்று நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி என்று மக்களை அரைமெண்டலாக்கி விற்கப்படும் நாட்டுக்கோழிகள் பண்ணையில் வளர்க்கப்படுபவையே.
உதாரணமாக ECOCERT சான்றளிப்பு வாங்க மூன்றாண்டுகள் காத்திருப்பதோடு ஆண்டுக்கு ஏக்கருக்கு 7000 ரூபாய் கட்டணம் செலுத்தி சான்றிதழை உயிர்ப்புடன் வைத்திருந்தால்தான் சந்தையில் பிரீமியம் விலை கிடைக்கும். எத்தனை சராசரி விவசாயிகள் இதை செய்யக்கூடும்? இன்று சந்தையில் கிடைக்கும் 99% பொருட்கள் ஆர்கானிக் என்ற வறட்டு நம்பிக்கையில் உற்பத்தி செய்யப்படுபவை, அல்லது வாடிக்கையாளர்களின் ஈகோவை நிரப்ப போலியாக விற்கப்படுபவை. வேண்டுமானால் ஓர் ஆர்கானிக் கடையில் சென்று எத்தகைய சான்றிதழ் இருக்கிறது, எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது, TC இருக்கிறதா விசாரித்துப் பாருங்கள். அரிதிலும் அரிதாக சான்றிதழ் வைத்திருப்பவர்கள் எந்த கூச்சலும் இல்லாமல் அவர்களுக்கான வாடிக்கையாளர்களுடன் போய்க்கொண்டே இருப்பார்கள். இன்று இயற்கை விவசாயம் என்பது பாதுகாப்பான வங்கி சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு, வீடுகள் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்களுக்கு, பைனான்ஸ் அதிபர்களுக்கு ஒரு Status Quo மட்டுமே. கொஞ்சம் அப்பாவி விவசாயிகள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்கப்பட்டதாலும், தங்களுடைய ஆண்ட பரம்பரை அதிகாரம் கண் முன்னே சிதைந்து வருவதாலும் என்ன செய்வதென்றே தெரியாத கையறு நிலையில் நாட்டுமாடு, A2 பால், இயற்கை விவசாயம் என்ற காலங்கடந்த சித்தாந்தங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு போவோர் வருவோரையெல்லாம் திட்டிக்கொண்டு உள்ளனர்.
உரங்களாகட்டும், பூச்சிக்கொல்லி மருந்துகளாகட்டும் ஓவ்வொன்றும் பலதரப்பட்ட ஆய்வுகளைக் கடந்துதான் சந்தையில் விற்கபடுகிறது. இடையிலும் பல சோதனைகளும், பயனாளிகளின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மறு ஆய்வு முடிவுகளின்படி தடை செய்யப்பட்டுவிடுகிறது. அப்படியெனில் இத்தனை நாளாக விற்றதை என்ன செய்வது ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அறிவியல் ஆய்வுகள் ஒரு துறையில் சமகால உச்சகட்ட மனித புரிதல்களின்படி செய்யப்படுகிறது. பின்னாளில் அதன் புரிதல் அதிகரிக்கும்போதுதான் சில கண்டுபிடிப்புகளின் பலவீனங்கள் தெரியவரும். அத்தகைய சூழலில்தான் தடைகள் நடைமுறைக்கு வருகின்றன. உதாரணமாக மகிழ்வுந்துகளில் Takata நிறுவன Airbags வெடிக்கும்போது இரும்புத்தூள்களை மிக அதிக வேகத்தில் வீசியெரிவதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் 'இன்றைய அறிவியல் புரிதல்களின் உச்சபட்ச கருத்தாக்கங்களை வைத்துதான் இதை வடிவமைத்திருக்கிறோம், இனிமேல்தான் நீங்கள் கேட்கும் கோணத்தில் ஆய்வு செய்து ஏர்பேக்-களை வடிவமைக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டது. சிறு தவறுகள் இருக்கிறது என்பதற்காக அதை முற்றிலும் ஒதுக்க முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் அதிக சாவுகளை உண்டாக்கும் ஆட்டோமொபைல் முழுவதையும் தடைதான் செய்யவேண்டும்!
ஆக, இன்று காளான்போல் முளைத்திருக்கும் திடீர் குபீர் இயற்கை அங்காடிகள், ஆர்கானிக் விவசாய வல்லுனர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில், தங்களின் சமூகத்தின் மீதான தார்மீக கோபத்தை பலவாறு வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களிடம் சென்று நீங்கள் இந்த சான்றிதழ் மேட்டரைக் கேட்டு கிளறிவிட்டால் என்ன நடக்கும்? இந்த அரசுகள் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கத்தால் இயற்கை விவசாயம் செய்பவர்களை நசுக்க சான்றளிப்பு என்ற பெயரில் லைசென்ஸ் ராஜ் கால அரசைப்போலவே நடந்துகொள்கின்றன. இடையில் மானே தேனே பொன்மானே என அமெரிக்க ஏகாதிபத்தியம், தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவன அடிமைகள், மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்கள் என ஒரு சிறப்பான லெக்சர் கிடைக்கும்.
எந்தவொரு பரப்புரைக்கும் மயங்காமல் இதையெல்லாம் தாண்டினால் அது நிச்சயம் ஜென் நிலையே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...