Tuesday, May 10, 2016

அட்சய திருதியை: கொண்டாட காரணம் என்ன..?




நாடு முழுவதும் அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அட்சய திருதியை, ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஜைன மதத்தினராலும் ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது..!
இன்று தமிழகத்தில் உள்ள சாமானியர்களை, பரவலாக ஈர்த்துவிட்ட அட்சய திருதியை, ஜைனர்கள் அதிகம் வாழும் ராஜஸ்தான், குஜராத் போன்ற மற்ற சில மாநிலங்களிலும் தனது இருப்பை வலுவாக பதிவு செய்து வருகிறது..!
இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து, ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள், பலவிதமாகச் சொல்கிறார்கள். அட்சய திருதியை நாளில்தான், மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறந்ததாக நம்புபவர்கள் உண்டு. மறுபுறம், முழு முதல் கடவுள் என வழிபடப்படும் விநாயகர், வியாச முனிவருடன் சேர்ந்து, மஹாபாரதக் கதையை எழுதத் தொடங்கிய நாள்தான், இந்த அட்சய திருதியை நாள் என்கிறார்கள் பலர்..!
இதுதவிர, சொத்துக்களுக்கு அதிபதி என்றும், தேவலோகத்தில் கடன் கொடுக்கும் தொழில் செய்பவருமான குபேரன், பெருஞ்செல்வத்தைப் பெற வேண்டி, கடுந்தவ வழிபாட்டில் ஈடுபட்டு, சிவன் மற்றும் லட்சுமியின் அருளால், என்றும் குறையாத செல்வம் பெற வரம் பெற்ற நாள்தான் இந்த அட்சய திருதியை என்ற நம்பிக்கையும் உள்ளது..!
அதேபோல, சிவபெருமானின் தலையில் குடியிருந்த கங்கை, நதியாக வடிவம் பெற்று, பூமியைத் தொட்ட நாள், அட்சய திருதியை நாளாக சிலரால் கருதப்படுகிறது வேறு சிலரே, இன்னொரு கதை சொல்கிறார்கள். கிருஷ்ணரின் நெருங்கிய பால்ய நண்பரான குசேலர், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவரை காண விரும்பி, உதவி கேட்டு வந்தபோது கையில் அவல்பொறியுடன் வந்து சந்தித்த நாளே அட்சய திருதியை என்கிறது கிருஷ்ண புராணங்கள்..!
மறுபுறம், ஜைனர்களைப் பொறுத்தவரை, ஓராண்டுக்கும் மேல் உண்ணாவிரதம் மேற்கொண்ட ருசபநாதர், அதை முடித்துக் கொள்ளும்விதமாக கரும்பு சாறை உட்கொண்ட நாளை புனித நாளாக கருதுகின்றனர். அந்த நாள்தான் அட்சய திருதியை என்பது அவர்களது நம்பிக்கை. ஆக, வட இந்தியாவானாலும், தென்னிந்தியாவானாலும், மத நம்பிக்கையோடு தொடர்புள்ள நாளாக இருந்த இது, இன்று நகை வணிகர்களின் வர்த்தக திருநாளாக மாறியிருக்கிறது என்றால், மறுப்பதற்கில்லை..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...