Saturday, November 8, 2014

எம்.சி.ஐ., லஞ்ச ஒழிப்பு அதிகாரி அதிரடி நீக்கம்: மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன்


 இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யில், லஞ்ச ஊழல் விவகாரங்களை விசாரிக்கும் பொறுப்பில் இருந்த, தலைமை கண்காணிப்பு அதிகாரியை, அந்தப் பதவியிலிருந்து நீக்கி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் உத்தரவிட்டுள்ளார். இது, சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றிய, சஞ்சீவ் சதுர்வேதி என்பவர், சில நாட்களுக்கு முன், அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். பா.ஜ., மேல் மட்டத் தலைவர்கள் சிலரின் யோசனையை ஏற்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், இந்த நடவடிக்கையை எடுத்தார். இது, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலில், தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றிய எச்.கே.சேத்தி என்பவரை, அந்தப் பதவியிலிருந்து நீக்கி, அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் உத்தரவிட்டுள்ளார்.'ஊழல் வழக்குகளை விசாரிக்கும் எனக்கு, சிலர் மூலம் அச்சுறுத்தலும், மிரட்டல்களும் இருப்பதால், பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் சேத்தி கோரி இருந்தார்.அத்துடன், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும், மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. 

அதில், கூறப்பட்டிருப்பதாவது:இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்பான, 12க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சேத்திக்கு, கவுன்சில் அதிகாரிகளால் அச்சுறுத்தல் உள்ளது. அதனால், அவருக்கு, டில்லி போலீஸ் மூலமாக பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், சேத்தி விசாரிக்கும், ஊழல் வழக்குகள் தொடர்பான அறிக்கை ஒன்றை, கண்காணிப்பு ஆணையத்திற்கு, மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்ப வேண்டும்இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து, சேத்தி நீக்கப்பட்டுஉள்ளார். அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஊழலில் ஊற்றுக்கண்:


நாடு முழுவதும், நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, சான்றிதழ் அளிக்கும் பொறுப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உள்ளது.மத்திய சுகாதாரத் துறைஅமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில், இதுபற்றி பேசிய, அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், 'இந்திய மருத்துவ கவுன்சில், ஊழலில் ஊற்றுக் கண்ணாக உள்ளது. அந்த நிலைமை மாற்றப்படும்' என, கூறினார். அப்படிச் சொல்லியவர், அந்த அமைப்பின் கண்காணிப்பு அதிகாரியை நீக்கியது ஏன் என்பதே, தற்போதைய சர்ச்சை.முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், இந்திய மருத்துவகவுன்சிலின் தலைவராக இருந்தவர் கேதன் தேசாய். ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே, அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து, சி.பி,.ஐ.,யும் விசாரித்துவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...