Monday, February 13, 2017

இசையின் அப்பா இளையராஜா ...சமுத்திரக்கனி. ...

இசையில்லா வாழ்க்கையை நம்மால் யோசிக்க முடியுமா? இசையோடு கலந்த இளையராஜா இல்லாத உலகில் நம்மால் வாழத்தான் இயலுமா? காதலையும் காமத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, ஆணும் பெண்ணும் இல்லாத வாழ்க்கை எப்படி ருசிக்காதோ, அப்படியே இசையும் ராஜாவும் இல்லாத வாழ்வு முழுமை அடையாது.
தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கிடைத்த அரிய பொக்கிஷம் இளையராஜா. அந்த இசையோடு கலந்து பயணிக்கும் ஆயிரமாயிரம் ஆளுமைகளில் சமுத்திரக்கனியும் முக்கியமானவர். ‘நாதகலா ஜோதி’யோடு கலந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
நம் வாழ்க்கையில் இளையராஜா இசையின் தாக்கம் அதிகமாவே இருக்கு. ராஜா சார் பற்றிக் கேட்டா, நீங்க என்ன சொல்வீங்க?
“இளையராஜா சாரோட அருகாமையில் இருக்க சமீபத்தில்தான் எனக்கொரு சந்தர்ப்பம் கிடைச்சது. என்னோட பத்தாவது படம் ‘அப்பா’. அந்தப் படத்தை முடிச்சிட்டு, அதுக்கு ரீரெக்கார்டிங் செய்றதுக்காக இளையராஜா சார்கிட்ட போனேன். படத்தை அவருக்குப் போட்டுக் காட்டிட்டு, அவர் என்ன சொல்லப்போறார்னு ஆவலோட காத்திருந்தேன். ‘நல்லா எடுத்திருக்கே. நல்ல விஷயங்களைத்தான் திரையில சொல்லணும். நான் பண்றேன்’னு சொல்லிட்டு, என் படத்துக்கு இசையமைச்சார். அதுக்காக 11 நாள் அவரோட பக்கத்துல இருக்க எனக்கொரு வாய்ப்புத் தந்தார். அதனாலதான் படத்தில் அவரை ‘இசையின் அப்பா’னு சொல்லியிருக்கேன்.
அவரோட இசைக்காக நாம என்ன வேணும்னாலும் செய்யலாம். அவர் இசையமைத்த ஆயிரம் படங்களுக்கும் விருது கொடுக்க வேண்டும் என்பதே என்னோட கருத்து. ஏன்னா, ஏழு மணிக்கு நான் ஸ்டுடியோவுக்கு போறதுக்கு முன்னாடியே அவர் போய் உட்கார்ந்திருப்பாரு. படத்தில் இந்த இடத்துல இந்த இசை வரணும்னு நோட்ஸ் எழுதி, தயாரா வெச்சிருப்பார். அவர் இசையமைப்பதை அருகில் இருந்து பார்த்த தருணங்கள் மறக்க முடியாதவை. கடவுள் ஒரு சிலருக்குதான் நேரடியா சக்தியையும், அருளையும் கொடுப்பார். அப்படியான அருளைப் பெற்றவர் இளையராஜா சார்!”
இளையராஜா கம்போசிஷனில் உங்களை மிகவும் பாதித்தது?
“இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவே முடியாது. அவரோட எல்லா கம்போசிஷனும் என்னை பாதிச்சிருக்கு!”
இளையராஜாவின் குரல்?
“ஒவ்வொரு முறை அவரோட குரலில் பாடல்களைக் கேட்கும்போதும் எனக்குள் அதிர்வலைகள் உண்டாகும். ‘அப்பா’ திரைப்படத்துல நானும், என் மகனும் நடந்துவரும் காட்சிக்கு அவரே எழுதி, பாடியிருந்தார். ரெக்கார்டிங் முடிச்சுட்டு, ‘நீ போய் கேளு’னு சொன்னார். கேட்டதும் உறைஞ்சுட்டேன்.
இப்போ எனக்கு இன்னொரு ஞாபகமும் வருது. ‘வள்ளி’ திரைப்படம் வெளியானப்போ, தியேட்டருக்கு நண்பர்களோட போயிருந்தேன். அப்போதான் எங்க வீட்ல எனக்கொரு தங்க மோதிரம் போட்டுவிட்டிருந்தாங்க. தியேட்டர்ல ராஜாவின் குரலைக் கேட்டதும் உற்சாகத்தில், ‘தலைவா...’னு கத்தி ஆரவாரம் செஞ்சதுல, கையில இருந்த மோதிரம் நழுவி எங்கேயோ விழுந்துடுச்சு. அப்படி ரசிச்ச குரல் அவரோடது. நம்மோட ஆன்மாவுக்குள் இறங்கி ஏதேதோ வேதியியல் மாற்றங்களை அந்தக் குரல் உருவாக்கும்!”
இளையராஜா பாடல்களில் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது, அடிக்கடி கேட்கிறது..?
“நிறைய நிறைய. ‘கண்ணே கலைமானே’ என்னை மடிபோல போட்டு தட்டிக்கொடுக்கும். அவர் தாயைப் பற்றி இசையமைச்ச எல்லா பாடல்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ பாடலைக் கேட்கும்போது, உயிர் உருகி ஓடும். எனக்கு மனசு வலிக்கும்போதும், நான் தனிமையை உணரும்போதும் ராஜா பாடல்கள்தான் என்னைத் தாலாட்டும்!”
இளையராஜாவுக்கு அவரோட எந்தப் பாட்டை நீங்க டெடிகேட் செய்வீங்க?
“ ‘சின்ன கவுண்டர்’ படத்தில் இடம்பெறும் ‘அந்த வானத்தப்போல...’ பாட்டு!’’
இளையராஜாகிட்ட மனம் திறந்து சொல்ல விரும்புவது..?
“அப்பாகிட்ட எப்பவுமே நான் மனம் திறந்துதான் பேசுவேன். அவரை சந்திச்சதுக்கு பிறகு, நான் இறைவன் முன்னாடி நிக்கும்போதெல்லாம் வேண்டுவது, என்னோட இசையின் அப்பாவுக்கு நீண்ட ஆயுளையும், நிறைய சக்தியையும் கொடு என்பதைத்தான். இந்த உலகம் இருக்கும்வரை அவரும் இருக்கணும் என்பதே எப்போதும் என்னோட வேண்டுதலா இருக்கும்...
நன்றி. ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...