தீபக் நிலைமைதான் நமக்கும்: ஓ.பி.எஸ் பக்கம் தாவும் முனைப்பில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள்!
ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிற்கு நேர்ந்த நிலைதான், தங்களுக்கும் ஏற்படும் என்ற சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலர் ஓ.பி.எஸ் பக்கம் தாவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக இளைஞர் பாசறை தலைவர் பதவி, ஆர்.கே நகர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு ஆசைகளை விதைத்து, தீபக்கை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது சசிகலா தரப்பு.
அவரும் அதை நம்பி, ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சையில் கூட சசிகலாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்தார்.
ஒருகட்டத்தில், ஆர்.கே.நகர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதாக தினகரன் கூறியதை அடுத்து, கொந்தளித்த தீபக், அந்த முகாமுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.
அதை கருத்தில் கொண்டு, தங்களுக்கு அளித்த வாக்குறுதியையும், சசிகலா தரப்பு மீறிவிடும் என்று கூவத்தூர் முகாம் எம்.எல்.ஏ க்கள் பலர் கருதுகின்றனர்.
கூவத்தூரில் முரண்டு பிடித்த எம்.எல்.ஏ க்களிடம், மூன்று உறுதிமொழிகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, மாவட்டத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்களில், எம்.எல்.ஏ க்கள் சொல்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
அந்தப் பணிக்கு அமைச்சர்கள் வேறு யாரையாவது நியமித்தாலும், எம்.எல்.ஏ க்களுக்கு தேவையான தொகை வந்து சேரும். தவிர, வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் பணம் அன்பளிப்பாக வந்து சேரும்.
முதல்கட்டமாக, ஐந்து கோடியைக் கொடுக்க இருக்கிறோம். பணமதிப்பு நீக்க விவகாரத்தால் சிக்கல் இருப்பதால், அதற்குரிய வகையில் தங்கம் வழங்கப்படும் என்று பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, வீடுகளுக்கே சென்று முதற்கட்ட தொகையை விநியோகம் செய்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு, எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன்னும் இரண்டு பங்கு வந்து சேரவில்லை என்று அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
எந்தப் பரிவர்த்தனை நடந்தாலும் வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வருவதுதால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ க்களின் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதனால், படிப்படியாக வழங்கினால் சிக்கல் வராது என சசிகலா தரப்பு கருதுகிறது.
இந்த நிலையில், தீபக் விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், அவரை போல சசிகலா தரப்பு தங்களையும் ஏமாற்றிவிடும் என்று எம்.எல்.ஏ க்களின் பலர் நினைக்கின்றனர்.
மேலும், சசிகலா தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு தொகுதி மக்கள் கொடுக்கும் ராஜ மரியாதையும் அவர்களை மிரள வைத்துள்ளது.
அதனால் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ க்களில் பலர், ஓ.பி.எஸ் பக்கம் தாவலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment