தமிழகத்தில் புதிய அமைச்சரவை மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில் புதிய கொறடா நியமிக்கப்படவில்லை; ஆகையால் பழைய அரசு கொறடா ராஜேந்திரன் உத்தரவு அதிமுக எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது என அதிரடியாக அறிவித்து ஆச்சரியப்பட வைத்துள்ளது ஓபிஎஸ் அணி.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. ஆகையால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் சபைக்கு தவறாமல் வர வேண்டும்; அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஓபிஎஸ் அரசில் கொறடாவாக இருந்த அரியலூர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், புதிய அமைச்சரவை மட்டும்தான் தற்போது பதவியேற்றுள்ளது. இன்னமும் அரசு கொறடா நியமிக்கப்படவில்லை. ஆகையால் அரியலூர் ராஜேந்திரனின் உத்தரவு அதிமுக எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது; யாரும் அச்சப்படத் தேவையில்லை என அதிரடியாக சுட்டிக்காட்டினார்.
இது புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. பொதுவாக ஒரு புதிய அரசு அமையும் போது சபாநாயகர், அரசு கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்படுவர். இதில் அரசு கொறடா என்பவர் அமைச்சரவையின் ஒரு அங்கமாக இருக்கிறார்.
ஆகையால் ஒரு அமைச்சரவை பதவி விலகினால் அரசு கொறடா பதவியும் அமைச்சரவையுடனேயே காலாவதியாகிவிடும். புதிய அமைச்சரவை பதவியேற்று புதிய அரசு கொறடா நியமிக்கப்பட வேண்டும்.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. ஆனால் இன்னமும் அரசு கொறடா நியமிக்கப்படவில்லை. ஆகையால் அரியலூர் ராஜேந்திரன் பிறப்பித்த கொறடா உத்தரவு அதிமுக எம்.எல்.ஏக்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதுதான் விதி. இதைத்தான் சபாநாயகரிடம் நேற்று ஓபிஎஸ் அணியும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment