Saturday, April 22, 2017

பதைபதைப்புடன் போனேன்...............

இயக்குனர், நடிகர் திரு. நாஸர்..:
1994ல் நான் இசைஞானியிடம் சென்று..
‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’

‘எதுக்குய்யா.. ?? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?
‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’
‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’
‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!
‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’
“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து…”
“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல போய்கிட்டு இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..
“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”
“என்ன அதுக்குள்ளேயா?”
‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”
“சரி” என்றவர் படம் பார்த்தார். ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக ஒரு கோயில் போல இருந்தது.
‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’
‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’
‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’
‘சார்..! அதில்ல சார்..!’
‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’
‘சார்…! அமெரிக்காவில்’
‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”
உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.
வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.
அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?” பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.
”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.
‘என்ன சார்..?”
‘அது போய்டுச்சுய்யா’
‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’
‘சார் .. எந்த Scene?’
‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’
‘அப்டியா சார்?’
‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.
‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.
அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..
‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’
‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’
’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’
என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!
அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.
நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். ஏதோ இருந்தது என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.
நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…
’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’
எங்கும் அமைதி…!
1….. 1..2..3..4..
‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.
I cried... நான் அழுதேன்....
பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.
‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.
அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...