ஒருசமயம் புயல்மழையால் பத்ராசலம் ராமர் கோவில் சீரழிந்தது. நாட்டைக் காப்பது மன்னன் பொறுப்பென்று எண்ணிய ராமதாசர், வரி வசூல் செய்த பணத்தைக் கொண்டு ஆலயத்தைப் புதுப்பித்து உற்சவமும் நடத்தினார். மன்னனிடம் அனுமதி பெறவில்லை. இதையறிந்த இஸ்லாமிய மன்னன் தானிஷா ராமதாசரை கைது செய்து கோல்கொண்டா கோட்டையில் சிறைவைத்தான். ஒருவேளைதான் உணவு. சாட்டையடி வேறு. இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் வதைபட்டார். அப்போது அவர் ராமரிடம் முறையிட்டுப் பாடிய பாடல்கள் ஏராளம். உள்ளத்தை உருக்குபவை.
ராமதாசர் ஒருநாள் மிகவும் மனம் நொந்து, “சீதாராமா, உனக்கு கோவில் கட்டினேன். ஆபரணங்கள் பூட்டினேன். உற்சவம் நடத்தினேன். அதற்கு நீ எனக்குத் தந்த பரிசு சிறைத்தண்டனையும் கசையடியும்‘ என்ற பொருளில் நிந்தாஸ்துதி பாடினார். இறுதியாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த அவர், அதற்குமுன் சீதைமீது தனிப்பாடல் ஒன்றைப் பாடினார்.
நெகிழ்ந்த சீதை அதை ராமரிடம் சொல்ல, “”நான் அடுத்தவர் பணத்தில் கோவில் கட்டச் சொன்னேனா? அவன் ஒரு கிளியை பன்னிரண்டு நாட்கள் கூண்டில் அடைத்துவைத்திருந்தான். அதற்கான தண்டனையே இது. அது இன்றோடு முடிவடைகிறது. நீதானே லட்சுமி. பணம் கொடு” என்றார். தாயாரும் கொடுத்தாள்.
அன்றிரவு ராமனும் லட்சுமணனும் மாறுவேடத்தில் தானிஷாவின் படுக்கை யறையில் நுழைந்து, “”தானிஷா எழுந்திரு” என்றனர்.
கண் விழித்த தானிஷா ஆச்சரியப் பட்டு, “”நீங்கள் யார்? எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று கேட்க, “”நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள். இதோ, கோபன்னா தரவேண்டிய பணம். பெற்றுக்கொண்டு ரசீது கொடு” என்றனர். பிரகாசித்த அவர்களைப் பார்த்து மெய்சிலிர்த்த தானிஷா, “”ரசீது காலையில் கொடுக்கிறேன்” என்றான்.
“”இல்லை. இப்போதே வேண்டும். நீ துப்பிய வெற்றிலைப் பாக்கு ரசத்தில், பல் குச்சியால் தொட்டு உன் ஆடையில் எழுதிக்கொடு” என்றனர். தானிஷாவும் அப்படியே செய்தான்.
சிறையில் ஒரு ஒளி தோன்றியதை ராமதாசர் கண்டார். தானிஷா கையொப்பமிட்ட ரசீது சிறைக்காவலர்களிடம் தரப்பட்டது. அவர்கள் வந்து ராமதாசரிடம் விடுதலை என்பதை அறிவித்தனர். சற்று நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள நினைத்தவருக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அந்த நேரத்தில் அங்கு தானிஷாவும் வந்துசேர்ந்தான். ராமதாசரைப் பணிந்து மன்னிப்பு கேட்டு நடந்தவற்றை விவரித்தான். அவரை விடுதலை செய்து ராம-லட்சுமணர் கொடுத்த பணத்தையும் தந்துவிட்டான்.
அன்றிலிருந்து ஆலயப் பராமரிப்புக்காக முகம்மதிய அரசு ஆண்டுதோறும் 20,000 காசுகள் வழங்கி வந்தது. ராமதாசர் இருந்த சிறையையும், அரசன் கொடுத்த காசுகளையும் கோல்கொண்டா கோட்டையில் தற்போதும் காணலாம்.
ராமபிரான் தனக்கு காட்சி தராமல் முகம்மதிய அரசனுக்குத் தந்தாரே என்று ராமதாசர் ஏங்க, அவரது கனவில் தோன்றிய ராமர், “”அவனும் பக்தன்தான். ஆயிரம் குடம் அபிஷேகம் செய்கிறேன் என வேண்டி, 999 குடம் அபிஷேகம் செய்தும் பலன் இல்லையே என்று கடைசி குடத்தை என் எதிரே உடைத்தான். அதனால் அரசன் ஆனான்; என் காட்சியும் கிடைத்தது” என்று ஆறுதல் கூறினார்.
கி.பி. 1620-ல் பிறந்து, 68 வருடங்கள் வாழ்ந்து, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று ராமசாயுஜ்யம் அடைந்தார் பத்ராசலம் ராமதாசர். இவரது பாடல்கள் மனதை உருக்குபவை. பஜனை சம்பிரதாயத்தில் பாடப்படுகின்றன. சமர்த்த ராமதாசரின் சமகாலத்தவர்....
No comments:
Post a Comment