இன்று(ஏப்.26) தினகரன் கோர்ட்டில் ஆஜர்; ஜாமீன் கிடைக்குமா?
இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், இன்று(ஏப்.,26) மதியம் 2 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அங்கு அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
#தினகரன் கைது:
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக, 4- வது நாளாக, நடந்த விசாரணையின் முடிவில், தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு, டில்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்த இடத்திலிருந்த காவல்நிலைய சிறையிலேயே தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டில்லியிலுள்ள திசஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தினகரன் நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஒருவேளை போலீசார் தினகரனிடம் மேலும் விசாரணை நடத்த விரும்பினால் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார். போலீஸ் காவலில் எடுக்க நீதிபதி மறுத்தால், இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.
#ஜாமீன் கிடைக்குமா?
சுகேஷ் உடன் தொடர்பு உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்படுவார். முதல் குற்றவாளியாக சேர்க்கப்படும்பட்சத்தில் தினகரன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். எனினும், தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, அவர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என தினகரன் வக்கீல் தெரிவித்துள்ளார்.
ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் குமாரிடமும் டில்லி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். இடைத்தரகர் சுகேஷிடம் விசாரணை நடத்துவதற்காக ஏப்.,28ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. தினகரனுடனான பேரத்தின் போது, தான் சந்தித்து பேசிய, ஷா பைஸல் என்பவரை, சுகேஷ் சந்தர் அடையாளம் கண்டு உறுதிப்படுத்தினார். இதையடுத்து, பைஸலிடமும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக பைஸல் இன்று டில்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராவார் என தெரிகிறது.
No comments:
Post a Comment