கர்நாடகாவில் ப.சிதம்பரத்தின் உறவினர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு.. கல்யாண கோஷ்டி வேஷத்தில் நுழைந்தனர்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதி, மாவட்டமான குடகு மாவட்டத்தின், குஷால்நகர் பகுதியில் எஸ்.எல்.என் குரூப் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனத்தில் 11 கிளைகளிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.
இந்த குரூப், விஸ்வநாதன் மற்றும் சாத்தப்பன் என்பவர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள், சிதம்பரத்தின் சகோதரி மகன்களாகும்.
எஸ்.எல்.என் குரூப் நிறுவனங்கள் காபி யூனிட், மரம் அறுவை தொழிற்சாலை, பெட்டோல் பங்க், ஆடம்பர ஹோட்டல், ரிசார்ட்டுகளை நடத்தி வருகிறது.
மைசூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வாடகை கார்கள் மூலம் அதிகாரிகள் குடகு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக திருமண கோஷ்டி வாகனம் போல கார்களில் மலர் அலங்காரம் செய்ததோடு...
திரேஷ்-கஜோல் என்ற பெயரில், போலியாக மணமகன்-மணமகள் பெயர்களையும் காரில் ஒட்டிக்கொண்டு அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.
குடகு மாவட்ட காவல்துறைக்கு தெரிந்தால் கூட விஷயம் லீக் ஆகிவிடும் என்பதால் மைசூர் மாவட்ட போலீசாரை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர் ஐ.டி., அதிகாரிகள்.
சுமார் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.
ரெய்டின்போது பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் அதிகாரிகள் அண்மையில் ரெய்டு நடத்தியிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக இந்த ரெய்டு நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment