Wednesday, April 26, 2017

செந்தில் பாலாஜி மூலம் ஆட்சிக்கு செக்- திட்டத்தில் தி.மு.க....!

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு ஒரு புறம் முயற்சிகள் நடைபெற்று வரும் நேரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து அ.தி.மு.க தரப்பிற்கு அடுத்த ஷாக் கொடுக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது.....
இரும்புக் கோட்டையாக சித்தரிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆனால், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அந்த கட்சியின் அடித்தளமே ஆட்டம் காண துவங்கிவிட்டது. அ.தி.மு.க-வில் இருந்த கட்டுக்கோப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைய ஆரம்பித்தது..
சசிகலா குடும்பத்தை பார்த்து பவ்வியம் காட்டியவர்கள், அந்த குடும்பத்திற்கு எதிராகவே போர்க்கொடி துாக்கியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் மத்திய அரசு, ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.கவை தங்களது கைப்பாவையாக மாற்றுவதற்கு திட்டமிட்டது. அ.தி.மு.க இரண்டு அணிகளாக உடைந்து ஆட்சிக்கே ஆபத்தும் வந்தது. ஒரு வழியாக எம்.எல்.ஏ-க்களை சரிகட்டி ஆட்சியை தற்காலிகமாக காப்பாற்றினார்கள் சசிகலா தரப்பினர்.
கரணம் தப்பினால் மரணம் என்பது போல 122 எம்.எல்.ஏக்களோடு ஆட்சியை காப்பாற்றியது சசிகலா தரப்பு......
முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். ஆட்சியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும் என்று நினைத்த தி.மு.கவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ஆட்சியிலோ, முதல்வருக்கு கட்டுப்படாத அமைச்சர்களும், அமைச்சர்களை உதாசினப்படுத்தும் எம்.எல்.ஏ-க்கள் என கட்சியும் ஆட்சியும் திண்டாடி வந்தன. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே அரசு அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.....
அந்த விவகாரம் முடிந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அடுத்த அதிரடியை கிளம்பியுள்ளார். இதை தங்களுக்கு சாதகமாக்கி வளைக்க தி.மு.க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
அ.தி.மு.க வின் இரண்டு அணிகளும் இணைவதிலே பல்வேறு கருத்து வேறுபாடுகள் தொடர்ச்சியாக இருந்துவரும் நிலையில் ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் கைவசம் எம்.எல்.ஏக்களை வைத்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராக பவனி வந்த நேரத்திலேயே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி இருந்தார். .....
ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களில் ஐந்து பேர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களாம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும், தம்பிதுரை மீதும் மீடியாவில் குற்றச்சாட்டு கூறுவதற்கு முன்பே முதல்வரிடம் செந்தில் பாலாஜி சொல்லியுள்ளார். ஆனால், முதல்வர் தரப்பில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதனால் இப்போது இரண்டு அணியிலும் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி என்கிறார்கள்.....
செந்தில் பாலாஜியின் மனவருத்தத்தை தி.மு.க தரப்பு மோப்பம் பிடித்துள்ளது. அதன்பிறகு தான் செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் இழுக்க முடியுமா என்ற ஆலோசனைக்கு வந்துள்ளது தி.மு.க தமைமை. .....
யாரை வைத்து இந்த பேச்சுவார்தை நடத்துவது என்று ஆரம்பத்தில் யோசித்த தி.மு.க தலைமை, இறுதியாக தி.மு.கவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரிடம் இந்த அசைன்மென்ட்டை கொடுத்துள்ளது. இவரும், செந்தில் பாலாஜியும் நண்பர்கள் என்பது ஸ்டாலினுக்கு தெரியும் என்பதால் அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவரும், செந்தில் பாலாஜியிடம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. ஐந்து எம்.எல்.ஏக்களை மட்டும் இப்போது அழைத்து வாருங்கள் என்று தி.மு.க தரப்பில் கேட்டுள்ளனர்.....
122 எம்.எல்.ஏக்களில் ஐந்து எம்.எல்.ஏக்கள் வந்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று தி.மு.க திட்டமிடுகிறது.
தினகரனுக்கு ஆதரவான சில எம்.எல்.ஏக்கள் தினகரனை ஒதுக்கி வைத்த மனவருத்தில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள தி.மு.க திட்டமிடுகிறது. இந்த நேரத்தில் செந்தில் பாலாஜியை வைத்து போர்க்கொடி துாக்கினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளியே வந்துவிடுவார்கள் என்று கணக்கு போடுகிறார்கள் தி.மு.கவினர்....
செந்தில் பாலாஜி போர்க்கொடி தூக்கி அ.தி.மு.கவில் இருந்து வெளியேறினால் அவரை தி.மு.க அரவணைத்து கொள்ளத் தயாராக இருக்கிறதாம். கரூர் மாவட்டத்தில் கே.சி.பழனிச்சாமியை தவிற சொல்லிக்கொள்ளும்படி தி.மு.கவிற்கு ஆட்கள் இல்லை என்பதால் செந்தில் பாலாஜி வந்தால் ஏற்றுக்கொள்ள நினைக்கிறது. செந்தில் பாலாஜியிடம் இந்த டீலிங் குறித்து பேசப்பட்டுள்ளதாம் ஆனால் முடிவு சொல்லாமல் செந்தில் பாலாஜி இழுக்கிறார் என்கிறார்கள் தி.மு.க வினர். ....
அ.தி.மு.க-வின் தலைமை மீதான வருத்தத்தை வெளியே காட்டிவிட்டதால் செந்தில்பாலாஜி எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடுவார் என்று பலமாக நம்புகிறது தி.மு.க.
இன்னும் சில தினங்களில் மீடியாவில் அதிகமாக அடிபடும் நபராக செந்தில் பாலாஜி இருக்கப் போகிறார் என்பது தான் கடைசி கட்ட தகவல் ......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...