சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், சொத்துக்களை விடுவிக்க கோரியும் மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
முதலில் வழக்கை விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரிக்க மறுத்து விட்டார். அதன்பிறகு நீதிபதி சந்திரசேகரா முன் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அவர் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மாலை வக்கீல் ஜெய் கிஷோர் இந்த மனுவை தாக்கல் செய்தார். கர்நாடக ஐகோர்ட்டில் 4 பேரும் மொத்தமாக மனு தாக்கல் செய்தனர். அது நிராகரிக்கப்பட்டதால் சட்ட நிபுணர்கள் தெரிவித்த யோசனையின் பேரில் ஜெயலலிதா ஜாமீன் மனு மட்டும் தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஜெயலலிதா ஒரு பெண்மணி, அவரது வயது மற்றும் உடல்நிலையை பிரதான காரணமாக காட்டி ஜாமீன் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனிக்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற 27–ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த விசாரணையும் தங்களது தண்டனை காலமான 4 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்பதாலும் இதில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் வாய்ப்பு உள்ளதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஜெயலலிதா மனுவில் தெரிவிக்கப்பட்ட அதே கோரிக்கைகள் தான் இவர்கள் 3 பேர் மனுக்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மனுக்களும் ஜெயலலிதா மனுவுடன் சேர்ந்து தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. வருகிற 14–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து மனுக்களும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17–ந்தேதிக்குள் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் 18–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை கோர்ட்டுக்கு தீபாவளி விடுமுறை வருகிறது. எனவே விசாரணை தள்ளிப் போனால் தீபாவளி முடிந்த பிறகுதான் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும். ஆனால் அவசர மனுவாக ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டால் 17–ந் தேதிக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment